Friday, April 20, 2007

ஆ(ற்)று அழகுகள்

வழக்கம் போல இந்த மாதிரி ஆற்றாமைகளைக் கூட ஆறு ஆறாச் சொல்லும் தொடர் பதிவுக்கு நம்மப் பதிவுலகச் சிவமுருகன் கூப்பிட்டுட்டாரு. தலைவர் கூப்பிட்டு நம்ம முடியாதுன்னு வேற சொல்ல முடியுமா என்ன?

அதுனால ஆறு அழகுகள் பற்றி இல்லாத மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்த போது தோன்றியதுதான் இது. இவ்வுலகின் உயிர்களின் தீராத தாகத்தைக் கூடத் தீர்க்கும் வல்லமை கொண்ட நீர்நிலைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சமுத்திரமாக மக்களின் இந்த உணர்வைத் தணிக்கப் பயன்படாது இருக்கின்றன. சில நீர்நிலைகளோ நிலங்களால் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே எவ்வளவு பெரியதாக ஏரி குளம் என்று இருந்தாலும் அவை ஒரு பெரிய சைஸ் குட்டை என்றே கருத வேண்டும். அவ்வகையில் ஆறு என்பது நிலம் கொண்ட நிலத்திற்கும் கடல் கொண்ட நிலத்துக்கும் இயற்கை போட்ட பாலம் என்றே நான் கருதுகிறேன். ஓடும் தண்ணீரே சுகம், சுத்தம்!!! எனவே நான் கண்ட ஆறு ஆறுகள், அவற்றின் அழகுகள் குறித்துச் சொல்ல விழைகிறேன். எந்த ஆற்றுக்கும் அது மக்களுக்கு எத்தனை உபயோகமாயிருக்கிறது என்பதில்தான் ஆன்மா அடங்கி இருக்கிறது. அது தவிர மீதி அழகுகளை மட்டுமே காண்கிறேன் நான்!


1. நயாக்ரா
முதலில் இண்டர்நேஷனல் லெவல்ல ஆரம்பிப்போம். நயாக்ரா நதி அமெரிக்காவின் ஈரி (Erie) ஏரியில் இருந்து கனடாவின் ஒண்டாரியோ ஏரிக்குப் பாய்கிறது. எனக்குத் தெரிந்து ஏரியில் இருந்து ஏரிக்குப் பாயும் நதி இதுவே! ஆறு என்பதற்கு இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புத் தகுதி வேகம். அது இந்நதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது. முதன் முதலில் நயாக்ராவை நேரில் பார்த்த போது என் மனதில் இனம்புரியாத உற்சாகமே துள்ளியது. இதிலிருந்து நான் கண்டது இது.
நயாக்ராவுக்கு வேகம் அழகு!

2. கங்கை
அடுத்து நான் கண்டு வியந்த நதி கங்கை! சென்ற வருடத்தில் ஒரு முறை இமயமலைக்குச் சென்றிருந்த போது கங்கையின் ஆரம்பமான கங்கோத்ரியில் இருந்து ஹரித்வார் வரை ஹெலிகாப்டரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து. மெல்ல ஒரு மலைதேன் கூட்டில் இருந்து வெண்மையான தேனைப் போல் மெல்ல வழிந்து கொண்டிருந்த பேதைப் பருவ கங்கை மெல்ல மெல்ல தன் தங்கைகள் கலக்க கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து ஹரித்வாரில் அலங்காரம் கொண்ட தெரிவைப் பெண்மையாக மாறுவதைக் கண்டேன். முக்கியமாக முடி முதல் அடி வரை எங்கணும் நீரின் தெளிவு காணும் எவரையும் சிலிர்ப்போடு பற்றும் வியப்பு, ஒரு சிலிர்ப்பு!
கங்கைக்கு அழகு தெளிவு!

3. யமுனை
கங்கையின் தங்கை இந்த நங்கை! ஒவ்வொரு கிளை நதியும் கங்கையில் கலக்கும் இடத்திற்கும் ஒரு புராணக் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டு பிரயாகை (கர்ணப் பிரயாகை, தேவப் பிரயாகை) என்று பெயர் சூட்டினர் வடநாட்டார். ஆயின், எந்தப் பெயரும் தேவைப்படாத பிரயாகை யமுனை கங்கையில் அணையும் போதே உருவானது. யமுனை இன்றைய நிலையில் வடநாட்டு அரசியலில் எத்தனை பிரச்சினைகளை உருவாக்கினாலும் தாஜ்மகால் சென்றாலும் யமுனை உங்களைத் தேட வைக்கிறது.
யமுனைக்கு அழகு நீள்வடிவம்!

4. கோதாவரி
அதிகபட்சம் காவிரியின் அகலத்தைக் கண்டிருந்த எனக்கு கோதாவரியைக் கண்டவுடன் திறந்த வாய் மூடவில்லை என்பதில் என்ன ஆச்சரியம். கோதாவரியின் வெறும் 20% நீர் மட்டுமே 3 மாவட்டங்களை எங்கெங்கு காணினும் பசுமை ஆக்கி இருக்கிறது என்றால் அதன் பயன் பற்றிச் சொல்ல வேறென்ன உண்டு. ராஜமுந்திரிக்குள் நுழையும் முன் முதன் முதலில் 3 கிலோமீட்டர் நீளமுள்ள கோதாவரிப் பாலம் உங்கள் கண்களை மட்டுமல்ல உள்ளத்தையும் வெகு சீக்கிரம் கொள்ளை கொள்ளும்.
கோதாவரிக்கு அழகு அகலம்!

5. காவிரி
ஒவ்வொரு முறை திதி கொடுக்கும் போதும் அகண்ட காவிரியில்தான் கொடுப்பது வழக்கம். அன்று சோழ மன்னர்களின் அந்தப்புரங்கள் வரை நீண்டிருந்த காவிரி இன்று இரண்டு மாநிலங்களின் சட்டமன்றங்கள் வரை நீண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. ஒரு பக்கம் சிவசமுத்திரத்தில் பொங்குமாங்கடலாகப் பெருவீழ்வு கொள்ளும் காவிரி இன்னொரு புரத்தில் தஞ்சை தாண்டி ஆடிச் செல்லும் அழகே அழகு. பிறந்த வீட்டில் என்னதான் ஆட்டம் போட்டாலும் புகுந்த வீட்டில் ஒரு பெண் பொறுப்போடு நடந்து கொள்ளும் விதம் எத்தனை பொருத்தம் என்று காவிரியைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். இரண்டு மாநிலங்களிலும் எத்தனை எத்தனையோ புயல்களைக் கிளப்பினாலும் தன் வழியில் அமைதியாகச் செல்லும் காவிரிக்கு எது அழகு?
காவிரிக்கு அழகு அமைதி!

6. வைகை
இண்டர்நேஷனல் லெவலில் ஆரம்பித்துக் கடைசியில் லோக்கல். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா என்ன? வைகை! பேரைச் சொல்லும்போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடும். அந்த மேம்பாலமும் கீழ்ப்பாலமும் ஒரு காலத்தில் தண்ணீர் (நினைவில் நிறுத்துங்கள், நிஜமாகவே தண்ணீர்தான்) ஓடிய நினைவுகளும் என்றென்றும் மறக்காதவை. இன்று வெறும் ஓடுதண்ணீரில் அழகர் ஆற்றில் இறங்கும் அவலமும் என் நெஞ்சை விட்டு அகலாது. இதே வைகையில் வெள்ளம் வந்த போது மேம்பாலத்தில் இருந்து காலைக் கீழே வெள்ளத்தில் விட்டு விளையாடியது கூட நினைவுக்கு வரும். ஹூம் அது ஒரு பெருங்கனவு! சரி, அழகு என்று இன்றைய நிலையில் நான் எதைப் பற்றிச் சொல்லுவேன்? என்றாவது வைகைக் கரையில் அமைந்த ஒரு பூங்காவில் நான் என் பேரனுடன் உல்லாசமாக அமர்ந்திருப்பேன் என்று கனவு மட்டுமே காண்கிறேன்.
வைகைக்கு அழகு வைகைதான்!

என்னமோ சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன். நீங்க படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க மக்கா!

5 comments:

சிவமுருகன் said...

சூப்பரப்பு சூப்பரு. எப்படிங்க இப்படி.

ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க. ஆனா பாட்டுக்கு மதிப்பு கட்டுரை-விமர்சனம்-பயணக்கட்டுரை எழுதுற மாதிரி ரொம்ப வித்யாசம கலவையா எழுதிட்டீங்க.

G.Ragavan said...

வாங்க ப்ரதீப் வாங்க. நீங்களும் அழகு பதிவு போட்டாச்சா! ஒங்க ஊர்க்காரர் ஒங்களக் கூப்டுட்டாரு. நல்லது. அழகான ஆறுகளைப் பத்திச் சொல்லீட்டீங்க. வைகையப் பத்திச் சொன்னீங்களே...அது வாஸ்த்தவம். ஒரு காலத்துல வையையும் பொய்யாக் குலக்கொடிதான். இன்னைக்குத்தான் அத மதுரைக்காரங்க(சண்டைக்கு வராதீகவே) பப்ளிக் கக்கூசாக்கீட்டாங்க.

பிரதீப் said...

சிவா,
என்னமோ நீங்களும் மதிச்சுக் கூப்பிட்டுட்டீங்க, நானும் என்னத்தையோ எழுதிட்டேன்...

////
ஆனா பாட்டுக்கு மதிப்பு கட்டுரை-விமர்சனம்-பயணக்கட்டுரை எழுதுற மாதிரி ரொம்ப வித்யாசம கலவையா எழுதிட்டீங்க.
////
ஆனா இதுக்கு என்னய்யா அர்த்தம்???
ஏதோ உங்களுக்குப் புடிச்சிருந்தாச் சரி.

ராகவா,
நீங்க சொன்னது உண்மைதாங்க... வைகை பொய்யாக் குலக்கொடியா இருந்ததைப் பார்க்கிற வாய்ப்பு இப்ப இருக்குறவுகளுக்கு இல்லாமப் போயிருச்சு. பைதிவே, உண்மைய உள்ளபடிச் சொன்னா மதுரக்காரவுக சண்டைக்கு வர மாட்டோம் :)

G.Ragavan said...

// பிரதீப் said...
ராகவா,
நீங்க சொன்னது உண்மைதாங்க... வைகை பொய்யாக் குலக்கொடியா இருந்ததைப் பார்க்கிற வாய்ப்பு இப்ப இருக்குறவுகளுக்கு இல்லாமப் போயிருச்சு. பைதிவே, உண்மைய உள்ளபடிச் சொன்னா மதுரக்காரவுக சண்டைக்கு வர மாட்டோம் :) //

மதுரைக்காரகளே கேட்டுக்குங்க. ஒங்க ஊர்க்காரரு சொல்றது நெசமாய்யா?

பிரதீப் said...

சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டலாம், அப்படியே ஒரு ஜம்போ ஜெட்டே ஓட்டலாமாய்யா??? தூத்துக்குடிக் காரவுகளே இப்படித்தானாய்யா...