Thursday, December 13, 2012

வாழ்க்கைச் சக்கரம்


கல்லூரிக் காலங்களில் எனக்குள் இருந்த ஒரு கவிஞனின் (?) முத்துக்கள் எங்கோ தேடியபோது கிடைத்தது. கிடைத்ததை உடனே பகிர்வதுதானே தமிழனின் தனிப்பண்பு? அதற்காகவும் இது போன்ற பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்தால் பிற்கால சந்ததியினருக்கு இப்படி ஒரு தலைமுறை வாழ்ந்தது என்ற பெருமை நினைவுக்கு வரும் என்பதற்காகவும் வலைப்பூவில் ஏற்றுகிறேன்.  பைதிவே மேற்கண்டது pun intented :)

என்னால் இயன்ற அளவு ஒரு அக வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு சக்கரமாக்கி இருக்கிறேன். காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது இதன் நோக்கமல்ல. என் வாழ்வில் கண்ட ஒரு உண்மை நிகழ்வு! இந்தக் கவிதை(?!)யை கடைசி வரியிலிருந்து மீண்டும் படித்தாலும் அதே உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.

காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்

காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது

காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது

மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்

கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது

குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின

குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது

வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்

தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது

குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்

மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்

கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!

Friday, May 11, 2012

ரசித்ததில் ருசித்தவை - என்னுள்ளே என்னுள்ளே

பாடல்கள் பலவிதம்.  சில பாடல்கள் கேட்ட உடனே பிடிக்கும்; ஆனால் போகப் போகப் பிடிக்காது.  சில பாடல்கள் முதலில் பிடிக்காது.  ஆனால் போகப் போக ரொம்ப பிடிக்கும். சில பாடல்களைக் காட்சியோடு சேர்ந்து பார்த்தால் பிடிக்கும், சிலவற்றை காதால் கேட்டால் மட்டுமே பிடிக்கும்.

ஆனால் சில பாடல்கள் மட்டும்தான் கேட்ட முதல் வினாடியில் இருந்து அப்படியே உள்ளே போய் உயிரில் கலந்து விடும்.   எல்லா பாடல்களுக்கும் இது சாத்தியம் இல்லை.  குறிப்பாக இசை, குரல், பாடல் என எல்லாமே சேர்ந்து இசையும் இசை வெள்ளம் மட்டும்தான் ஏதோ ஒரு அறியாத காரணத்தினால் கண் சொருக வைக்கும்.

வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே பாடல் மேற்சொன்ன வகை.  இசையால் நம்மை அடிமை கொள்ள வைப்பது இசைஞானியின் தனிச் சொத்து.  அதனால் பெரிய ஆச்சரியம் இல்லை.  கவிஞர் வாலிக்கும் இப்படி கேட்டவுடன் மறக்க முடியாத பாடல்கள் தருவது முதன் முறை அல்ல.  ஆனால் இந்த பாடல் இன்னொரு இறவா வரம் பெற்றவரின் திறமைக்குச் சான்று.  அது பின்னணிப் பாடகி சுவர்ணலதா.  சாதாரணமாகப் பேசும் போது இயல்பாக இருக்கும் இவரது குரல் பாடும் போது மட்டும் எப்படி ஐஸ்கிரீம் தடவியது போல் ஆகிறது என்பது யாரும் அறியா ரகசியம்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை அனைவரும் பாடி விட முடியாது.   தாபம், தாகம், ஏக்கம், மோகம் என அனைத்தும் குரல் வழி இசையோடு வரிகளோடு இணைந்ததால் மட்டுமே இதன் வெற்றி சாத்தியப் பட்டது.

கடவுள் என்னும் கொடூரன் இந்தக் குயிலை தான் மட்டுமே பாடச் சொல்லி கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே  இப்பொழுதே அழைத்துக் கொண்டானோ?

இப்போது பாடலைப் பாருங்கள்.
Friday, December 09, 2011

ரசித்ததில் ருசித்தவை - சின்ன சின்ன மழைத்துளி

ரொம்ப நாளாவே நமக்கு இந்த ரசிப்பு ருசிப்பு அரிப்பை எல்லாருக்கும் சொல்லணும்னு ஆசை.  பல காரணங்களால் தள்ளி போயிக்கிட்டே இருந்தது.  சரி இப்ப ஆபீஸில் கடுமையான வேலை இருக்கே (?!) அதனால் இதை தொடர இதை விட நல்ல வேளை எப்போ வரப்போகுது?

இந்தப் பதிவுகளில் நான் ரசித்த பாடல்களை அவை எனக்கு ருசித்த விதத்தை சொல்ல போறேன். பிடிச்சா படிங்க :)

இயல்பாகவே எனக்கு உயர்வு நவிற்சி ரொம்ப பிடிக்கிறதில்லை.  தீயை திண்பேன், தமிழை உருக்கி ஊத்தி இருக்கேன், வானத்துக்கும் பூமிக்கும் பூவாலே பாதை அமைப்பேன்  அப்படி இப்படின்னு எழுதுறவங்களை பாத்தாலே பத்திக்கிட்டு வரும்...  கவிதைக்கு பொய் அழகுதான். ஆனால் அது ஒரு அளவுக்கு உள்ளே இருக்கணும் இயல்புக்கும் ஒத்து வரணும் என்பது என் கருத்து.  ஆனால் இந்த பாடல் கவிதைக்கு பொய் அழகு அப்படிங்கரதை எனக்கு சுருக்குன்னு சொல்லிடுச்சு. 

மழையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நிலத்தடி நீர், பயிர் பச்சை விளையிறது இதெல்லாம் விட்டுட்டா கூட, சாயங்காலம் சூடா பஜ்ஜி இதம்மா போத்த்திக்கிட்டு தூங்குறது, லேட்டா ஆபீஸ் போனாலும் யாரும் எதுவும் கேக்காம இருக்குறது இதெல்லாம் மழையால் நன்மைகள்.

கெட்டதுன்னு பாத்தா செல்போனை பாதுகாக்குறது, சரியா நம்ம வெள்ளை பார்மல் பேண்டில் கார் ஓட்டும் கனவான்கள் கோலம் போடுறது,  அங்கே இங்கே நனைஞ்சு சளி (சனி?!) பிடிச்சு ... இதெல்லாம் சிக்கல்!

ஆனால் மழையில் மேலே சொன்ன நல்லதுக்கெல்லாம் மேலே சில கண்ணுக்குத் தெரியாத இட மச்சக்கார மச்சான்களுக்கு மட்டும் வாய்க்கும் அதிர்ஷ்டம் கீழே இருக்கும் பாட்டு போலே.  ஆனால் அதை நம்ம அரவிந்த சாமி மாதிரி வீணாக்கும் பய புள்ளைகளை பாருங்க. பின்னாடி மழைத்துளி மாதிரியே ஒரு பொம்பளை புள்ளை வருது அதை விட்டுட்டு... சரி சரி..

எல்லாத்துக்கும் மேலே இந்த பாட்டு, அதில் உள்ள துள்ளல், ஸ்ரீகுமாரின் மலையாளம் கலந்த குரல், வானம் அளவு உயர்வு நவிற்சி உள்ள வைரமுத்துவின் வரிகள் - எல்லாமே ஒரே இடத்தில் அமைவது அருமை.  பாட்டு ஆரம்பிக்கும் போது ஒரு துளி விழுது என்பது எனக்கு ஒரு துளி வானத்தையும் பூமியையும் இணைக்கும் விழுது அப்படின்னு எழுதி இருக்காரோன்னு  தோணுச்சு.  ஆனா அப்படி எல்லாம் இல்லை :)

மழைத் துளி ஒவ்வொரு இடத்திலும் விழுந்தால் அதன் உருமாற்றம் என்ன அப்படின்னு வரிசையா சொல்லி கடைசியா என் கண்ணீரண்டில் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய் அப்படின்னு முடிக்கிறார் பாருங்க. சூப்பர்.

இப்ப பாட்டை பாருங்க!

பாடல்: சின்ன சின்ன மழைத்துளி
படம்: என் சுவாசக் காற்றே
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எம் ஜி ஸ்ரீகுமார்Wednesday, August 08, 2007

53வது தேசிய விருதுகள்

ஒரு வழியாக 53வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் படங்கள் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.

சிறந்த குடும்பப் படமாக சேரனின் "தவமாய்த் தவமிருந்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.


இப்போதுதான் ஆச்சரியம்!!!

சிறந்த ஒளிப்பதிவாளராக "சிருங்காரம்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மது அம்பாட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
சிறந்த இசையமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு இசையமைத்த "லால்குடி" ஜெயராமன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
சிறந்த நடன அமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு நடனம் அமைத்த சரோஜ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை எப்பாடு பட்டாவது பார்த்து விடுவது என்று நான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

சிறந்த குறும்படமாக வசந்த் தூர்தர்ஷனுக்கு இயக்கிய "தக்கையின் மீது நான்கு கண்கள்" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

தவிர அன்னியன் படத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

தமிழின் சிறந்த படமாக "ஆடும் கூத்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

மற்றபடி
சிறந்த படம்: கால்புருஷ் (பெங்காலி)
இந்திரா காந்தி விருது - இயக்குநரின் சிறந்த முதல் படம்: பரினீதா (பிரதீப் சர்க்கார் - இந்தி)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: ரங் தே பசந்தி (இந்தி)
நர்கீஸ்தத் விருது - தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம்: தைவனமதில் (மலையாளம்)
சிறந்த சமூக சிந்தனைத் திரைப்படம்: இக்பால் (இந்தி)
சிறந்த சுற்றுச் சூழல் திரைப்படம்: துத்தூரி (கன்னடம்)
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: ப்ளூ அம்ப்ரல்லா - நீலக்குடை (இந்தி)
சிறந்த இயக்குநர்: ராகுல் தோலக்கியா (பர்சானியா)
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிளாக்−இந்தி)
சிறந்த நடிகை: சரிகா (பர்சானியா − ஆங்கிலம்)
சிறந்த துணை நடிகர்: நஸ்ருதீன் ஷா (இக்பால்)
சிறந்த துணை நடிகை: ஊர்வசி (அச்சுவிண்டே அம்மா - மலையாளம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாய்குமார் (பொம்மலாட்டா - தெலுங்கு)
சிறந்த பின்னணிப் பாடகர்: நரேஷ் ஐயர் (ரங் தே பசந்தி)
சிறந்த பின்னணிப் பாடகி: ஷ்ரேயா கோஷல் (பஹேலி - இந்தி) -- இது இவருக்கு இரண்டாவது விருது
சிறந்த திரைக்கதை: பிரகாஷ் ஜா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி (அபஹரன் - இந்தி)
சிறந்த ஒலிப்பதிவு: நகுல் கம்தே (ரங் தே பசந்தி)
சிறந்த எடிட்டிங்: பி எஸ் பாரதி (ரங் தே பசந்தி)
சிறந்த கலை இயக்குநர்: சி பி மோரே (தாஜ்மகால் - இந்தி)
சிறந்த உடை அமைப்பாளர்: அன்னா சிங் (தாஜ்மகால்) & சபயாச்சி முகர்ஜி (பிளாக்)
சிறந்த பாடலாசிரியர்: பர்கூரு ராமச்சந்திரப்பா (தாயி - கன்னடா)
சிறப்பு விருது: அனுபம் கெர் (மைனே காந்தி கோ நஹி மாரா - இந்தி)

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

Tuesday, July 24, 2007

ஹாரி ஓம்... ஹாரி ஓம்...

ஹூம்... ரொம்ப நாள் கழிச்சு வந்து ஒரு புதுப் பதிவு... அது நம்ம ஹாரி பாட்டரைப் பற்றி என்று நினைக்கையிலேயே புளகாங்கிதப் புன்னகை பூக்கிறேன்.

புத்தகத்தைக் கடந்த மார்ச் மாதமே ப்ரீ புக்கிங் செய்து வைத்திருந்தேன். புத்தகம் வருமுன் கடந்த ஒரு வாரமாகவே நான் தேன் குடித்த நரி போல் திரிந்து கொண்டிருந்தேன். அதே வாரம் ஐந்தாவது பாகப் படம் வேறு வந்து விட்டதா? கள் குடித்த குரங்கிற்குக் கவட்டையில் குளவியும் கொட்டியதைப் போல் ஆகி விட்டிருந்தது (அட என்ன கவிதை...என்ன கவிதை)! வீட்டில் அனைவரும் வேக வேகமாக ஒரு மனநல மருத்துவரைக் காணும் முன் படத்திற்கு அதுவும் ஐமேக்ஸ் 3டி −− முன்பதிவு செய்து வீட்டில் அனைவரும் சென்று பார்த்தோம்.

அன்றிலிருந்து புத்தகம் வரும் நாள் பற்றி தினமும் கற்பனை செய்து கொண்டே இருந்தேன். வீட்டில் புத்தகமே இல்லாமலும் புத்தகம் படிப்பது போல் பாவனையில் இருந்த என்னைப் பார்த்துக் கலவரம் ஏற்படாதது ஆச்சரியமே...

ஒரு வழியாக சனிக்கிழமை ஜூலை 21ம் தேதி வந்து சேர்ந்தது. அதாவது நானே அதைத் தரதர என்று பல கோடி ஹாரி விசிறிகளுடன் இணைந்து இழுத்து வந்திருந்தேன். என்றைக்கும் எட்டு மணிக்குக் கூட எழுந்திருக்காத நான் ஐந்தரை மணிக்குக் குளித்து முழுகிக் கிளம்பி இருந்ததைப் பார்த்து எங்க அம்மா பிளந்த வாயில் அரைக்கிலோ சர்க்கரை போடலாம் :)

ஆறரை மணிக்குக் கடை திறக்கும் என்று போட்டிருந்ததை நம்பி ஆறே காலுக்குப் போயிக் கால் கடுக்கப் பார்த்தால் எனக்கு முன்னால் ஒரு 200 பேர்... வயது வித்தியாசமில்லாமல் ஆறிலிருந்து அறுபது வரை. என்னால் ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் இன்னொரு பக்கம் இவ்வளவு நேரம் ஆகிறதே என்ற துக்கக் கண்ணீர்... ஆக மொத்தம் நான் அழுது கொண்டே அழுகின்றேன்.

ஏதோ பெரிய விழாவைப் போல் ஈ டிவி, CNN IBN கேமிராக்கள் கடை வாசலைத் துளைத்து கொண்டு நின்றன.


ஏதோ காதலர்கள் ஒரு நிமிடம் ஒரு யுகம் என்றெல்லாம் சொல்வார்களே... அதெல்லாமெனக்கு அப்போது மிகச் சாதாரணமாகப் பட்டது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். முதன் முதலில் ஒரு பொடிசு ஆர்வமாகப் புத்தகத்தை வாங்கி வெளியே வந்தவுடன் தன்னுடைய 26-ஐயும் காட்டியது (மீதி ஆறு விழுந்து விட்டது). காத்திருந்த டிவி கேமிராக்காரர்கள் பின் லேடனைப் பார்த்த அமெரிக்க ராணுவத்தினரைப் போல் பாய்ந்து ஓடினார்கள். பொடிசு அரண்டு போய்ப் புத்தகத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு அதன் தந்தையின் பின்புறம் ஒட்டிக் கொண்டது. புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கச் சொல்லி அனைவரும் அதன் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினர். ஒரு வழியாக அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பொடிசு போஸ் கொடுத்த கையோடு என்னைக் கடந்து செல்லும்போது புத்தகத்தின் முதல் வரிகளைச் சத்தம் போட்டுப் படிக்கத் துவங்கியது. யாருக்கும் தெரியாமல் என் ஆத்திரம் தீர ஒரு கிள்ளு கிள்ளி விட்டேன்.

வழக்கம் போல் என் முறை வர ஒரு மணி நேரம் ஆகியது. சரியாக என் வரிசை எண் வரும்போது புதிய பண்டல் பிரிக்க வேண்டி இன்னும் பத்து நிமிடம் இழுத்தடித்தது -- இதை எல்லாம் போக்கிப் புத்தகம் கிடைத்தது. வராது வந்த மாமணி போல் என்றெல்லாம் சொல்கிறார்களே... அது இதற்கு முன் எம்மாத்திரம். அப்புறம் எப்படி வண்டியை ஓட்டி எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எப்படிப் படிக்க ஆரம்பித்தேன் என்பதெல்லாம் நினைவில்லை. அவ்வப்போது வீட்டில் அதை வாங்கு இதைச் செய் என்ற "இக"க் கட்டளைகள் எல்லாம் "பர" உலகத்தில் இருந்த என் காதில் விழ நியாயமில்லை.

புத்தகம் படிக்கும் போதே அங்கங்கு சிரிப்புகளும் மௌனமான அழுகைகளும் பெருமூச்சுகளும் என் உள்ளே முட்டி முட்டி எழுந்தன. ஒரு வழியாகப் படித்து முடிக்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகி விட்டிருந்தது. அதற்குப் பிறகு உள்ளோடிய எண்ணங்களில் ஒரு சில மணி நேரங்கள் பிரமை பிடித்து இருந்தேன்.

வீட்டில் அனைவரும் ஒரு வழியாக நான் படித்து முடித்தது அறிந்தவுடன் அந்தப் புத்தகத்தை என் கையிலிருந்து பிடுங்கி ஒரு மூலையில் வைத்த பின்புதான் பெருமூச்சு விட்டனர். பிறகு வழக்கம் போல் இக வாழ்வின் நிதர்சனங்கள் என்னை ஹாக்வார்ட்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருந்த வேளை மீண்டும் வழக்கம் திரும்பியது.

அன்று இரவு விளக்கைப் போட்டுக் கொண்டு திரிந்த என்னை மீண்டும் பார்த்த எங்க அம்மாவின் பார்வையில் தெரிந்த பீதியை யாராவது முழுவதுமாக விளக்கினால் அவர்களுக்குச் சாகித்ய அகாடமிப் பரிசு நிச்சயம்.

காரணம்...

இப்போது மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பி.கு.: என்றைக்காவது இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும். இப்போது எழுதினால் சில விஷயங்களைச் சொல்லப் போய் ஹாரி வெறியர்கள் ஆட்டோ என்ன ஆட்டம் பாமையே அனுப்புவார்கள் என்பதால் அவர்கள் சொன்னவுடன் போடுகிறேன்.

Tuesday, May 01, 2007

பாட்டு எப்படி? - நான் அவன் இல்லை

பாடல்கள்: பா. விஜய், ???

1974-ல் ஜெமினி நடிக்க பாலசந்தரின் இயக்கத்தில் வந்த சினிமாவின் தழுவல் இந்தப் படம். படமே வெளிவந்தபின் அதுவும் படம் கொஞ்சம் பேசப்பட்டபின் இப்போதுதான் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. எந்தவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தாத படமாக இருந்தது இந்தப் பட்த்தின் பெரிய பலம் என்பேன். ஏனெனில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கேட்கும் போது இந்தப் பாடல்கள் கவர்ச்சியாகத்தான் இருக்கின்றன. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை வைத்து அவர்மீது இருக்கும் மதிப்பை இந்தப் பாடல்கள் காப்பாற்றுகிறது என்றே சொல்வேன்.

1. ஏன் எனக்கு மயக்கம்
பாடியவர்: ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
ஜெயதேவை ஒரு அசத்தல் பாட்டு மூலம் “டிஷ்யூம்”-ல் அறிமுகம் செய்தவர் விஜய்தான். இந்தப் படத்திலும் ஜம்முனு ஒரு பாட்டு கொடுத்திருக்கிறார். மிகச் சாதாரண தாளம் போட வைக்கும் மெட்டு – நடு நடுவே வயலின்கள்! அவ்வளவுதான்! மற்றபடி தெளிவான உச்சரிப்புகளுடன் இந்தப் பாடல் கவர்கிறது.

மதிப்பு: 5

2. காக்க காக்க
பாடியவர்: சாருலதா மணி, மாயா, மேகா, மணி, விஜய் ஆண்டனி
ஒரு கூட்டமே பாடி இருப்பதால் விஜய் குரல் தவிர வேறெதுவும் அடையாளம் தெரியவில்லை. ஆச்சரியம் அனைத்துக் குரல்களும் உச்சரிப்பில் சுத்தம்! நடுவில் குத்துடன் கூடிய கனமான மேற்கத்திய இசை தாளம் போட வைக்கிறது. முதல் முறை கேட்கும்போதே பிடிக்கக் கூடிய பாடல். ஏற்கனவே “நா நா நா நான் அவன் இல்லை” இளசுகளைக் கவர்ந்து விட்டதாகக் கேள்வி.

மதிப்பு: 6


3. மச்சக் கன்னி

பாடியவர்:ஜெயா ராஜகோபாலன், சத்யாலட்சுமி, விஜய் ஆண்டனி
இந்தப் படத்தில் மட்டும் எக்கச்சக்கமான புதுப் பாடகிகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார் விஜய். இதற்கு முன் வந்த பல டப்பாங்குத்துப் பாடல்களைப் போலவே இதிலும் அர்த்தம் புரியாத வார்த்தைகள் அங்கங்கு உண்டு. கொஞ்சம் முன்னேற்றம் இருப்பினும் விஜய் ஆண்டனி எப்போதும் போல் கத்தியால் குத்தியது போலவே பாடுகிறார். இத்தனை இருப்பினும் என்னமோ உள்ளே இழுக்கிறதே, அது என்ன???

மதிப்பு: 6


4. நீ கவிதை

பாடியவர்:கிரிஷ், மேகா
காதல் பாட்டுதான். ஏற்கனவே எங்கேயோ கேட்டது போல் மெட்டு. சொல்ல அப்படி ஒன்றுமில்லை. முக்கல் முனகலைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மதிப்பு: 4


5. ராதா காதல் வராதா
பாடியவர்:பிரசன்னா, மாயா, சங்கீதா ராஜேஸ்வரன், வினயா
ரீமிக்ஸ் காலத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லைன்னா எப்படிங்க? ஆனா அந்த டப்பாங்குத்தையும் கொஞ்சம் சுகமாத்தான் போட்டிருக்காப்புல விஜய். ரீமிக்ஸ்னாலே நடுநடுவில் “look at this” அப்படி இப்படின்னு கத்துறவங்களைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்தாலென்ன?

மதிப்பு: 4


6. தேன் குடிச்ச
பாடியவர்:நரேஷ் ஐயர், தீபா மரியம், விஜய் ஆண்டனி
இந்தப் படத்திலேயே மூன்றாவது குத்துப் பாட்டு. இரண்டாவது ரீமிக்ஸ் பாட்டு! எவ்வளவுதான் தயாரிப்பாளருக்கு மிச்சம் பிடிக்க வேண்டி வந்தாலும் நிறைய பாடல்களைத் தானே பாடுவதை விஜய் குறைப்பது அவருக்கு மட்டுமல்ல, கேட்கும் நமக்கும் அதுதான் நலம்.

மதிப்பு: 4


மொத்தம்: 45%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “கேட்கலின் கேட்காமை நன்று”

Friday, April 20, 2007

ஆ(ற்)று அழகுகள்

வழக்கம் போல இந்த மாதிரி ஆற்றாமைகளைக் கூட ஆறு ஆறாச் சொல்லும் தொடர் பதிவுக்கு நம்மப் பதிவுலகச் சிவமுருகன் கூப்பிட்டுட்டாரு. தலைவர் கூப்பிட்டு நம்ம முடியாதுன்னு வேற சொல்ல முடியுமா என்ன?

அதுனால ஆறு அழகுகள் பற்றி இல்லாத மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்த போது தோன்றியதுதான் இது. இவ்வுலகின் உயிர்களின் தீராத தாகத்தைக் கூடத் தீர்க்கும் வல்லமை கொண்ட நீர்நிலைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சமுத்திரமாக மக்களின் இந்த உணர்வைத் தணிக்கப் பயன்படாது இருக்கின்றன. சில நீர்நிலைகளோ நிலங்களால் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே எவ்வளவு பெரியதாக ஏரி குளம் என்று இருந்தாலும் அவை ஒரு பெரிய சைஸ் குட்டை என்றே கருத வேண்டும். அவ்வகையில் ஆறு என்பது நிலம் கொண்ட நிலத்திற்கும் கடல் கொண்ட நிலத்துக்கும் இயற்கை போட்ட பாலம் என்றே நான் கருதுகிறேன். ஓடும் தண்ணீரே சுகம், சுத்தம்!!! எனவே நான் கண்ட ஆறு ஆறுகள், அவற்றின் அழகுகள் குறித்துச் சொல்ல விழைகிறேன். எந்த ஆற்றுக்கும் அது மக்களுக்கு எத்தனை உபயோகமாயிருக்கிறது என்பதில்தான் ஆன்மா அடங்கி இருக்கிறது. அது தவிர மீதி அழகுகளை மட்டுமே காண்கிறேன் நான்!


1. நயாக்ரா
முதலில் இண்டர்நேஷனல் லெவல்ல ஆரம்பிப்போம். நயாக்ரா நதி அமெரிக்காவின் ஈரி (Erie) ஏரியில் இருந்து கனடாவின் ஒண்டாரியோ ஏரிக்குப் பாய்கிறது. எனக்குத் தெரிந்து ஏரியில் இருந்து ஏரிக்குப் பாயும் நதி இதுவே! ஆறு என்பதற்கு இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புத் தகுதி வேகம். அது இந்நதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது. முதன் முதலில் நயாக்ராவை நேரில் பார்த்த போது என் மனதில் இனம்புரியாத உற்சாகமே துள்ளியது. இதிலிருந்து நான் கண்டது இது.
நயாக்ராவுக்கு வேகம் அழகு!

2. கங்கை
அடுத்து நான் கண்டு வியந்த நதி கங்கை! சென்ற வருடத்தில் ஒரு முறை இமயமலைக்குச் சென்றிருந்த போது கங்கையின் ஆரம்பமான கங்கோத்ரியில் இருந்து ஹரித்வார் வரை ஹெலிகாப்டரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து. மெல்ல ஒரு மலைதேன் கூட்டில் இருந்து வெண்மையான தேனைப் போல் மெல்ல வழிந்து கொண்டிருந்த பேதைப் பருவ கங்கை மெல்ல மெல்ல தன் தங்கைகள் கலக்க கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து ஹரித்வாரில் அலங்காரம் கொண்ட தெரிவைப் பெண்மையாக மாறுவதைக் கண்டேன். முக்கியமாக முடி முதல் அடி வரை எங்கணும் நீரின் தெளிவு காணும் எவரையும் சிலிர்ப்போடு பற்றும் வியப்பு, ஒரு சிலிர்ப்பு!
கங்கைக்கு அழகு தெளிவு!

3. யமுனை
கங்கையின் தங்கை இந்த நங்கை! ஒவ்வொரு கிளை நதியும் கங்கையில் கலக்கும் இடத்திற்கும் ஒரு புராணக் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டு பிரயாகை (கர்ணப் பிரயாகை, தேவப் பிரயாகை) என்று பெயர் சூட்டினர் வடநாட்டார். ஆயின், எந்தப் பெயரும் தேவைப்படாத பிரயாகை யமுனை கங்கையில் அணையும் போதே உருவானது. யமுனை இன்றைய நிலையில் வடநாட்டு அரசியலில் எத்தனை பிரச்சினைகளை உருவாக்கினாலும் தாஜ்மகால் சென்றாலும் யமுனை உங்களைத் தேட வைக்கிறது.
யமுனைக்கு அழகு நீள்வடிவம்!

4. கோதாவரி
அதிகபட்சம் காவிரியின் அகலத்தைக் கண்டிருந்த எனக்கு கோதாவரியைக் கண்டவுடன் திறந்த வாய் மூடவில்லை என்பதில் என்ன ஆச்சரியம். கோதாவரியின் வெறும் 20% நீர் மட்டுமே 3 மாவட்டங்களை எங்கெங்கு காணினும் பசுமை ஆக்கி இருக்கிறது என்றால் அதன் பயன் பற்றிச் சொல்ல வேறென்ன உண்டு. ராஜமுந்திரிக்குள் நுழையும் முன் முதன் முதலில் 3 கிலோமீட்டர் நீளமுள்ள கோதாவரிப் பாலம் உங்கள் கண்களை மட்டுமல்ல உள்ளத்தையும் வெகு சீக்கிரம் கொள்ளை கொள்ளும்.
கோதாவரிக்கு அழகு அகலம்!

5. காவிரி
ஒவ்வொரு முறை திதி கொடுக்கும் போதும் அகண்ட காவிரியில்தான் கொடுப்பது வழக்கம். அன்று சோழ மன்னர்களின் அந்தப்புரங்கள் வரை நீண்டிருந்த காவிரி இன்று இரண்டு மாநிலங்களின் சட்டமன்றங்கள் வரை நீண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. ஒரு பக்கம் சிவசமுத்திரத்தில் பொங்குமாங்கடலாகப் பெருவீழ்வு கொள்ளும் காவிரி இன்னொரு புரத்தில் தஞ்சை தாண்டி ஆடிச் செல்லும் அழகே அழகு. பிறந்த வீட்டில் என்னதான் ஆட்டம் போட்டாலும் புகுந்த வீட்டில் ஒரு பெண் பொறுப்போடு நடந்து கொள்ளும் விதம் எத்தனை பொருத்தம் என்று காவிரியைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். இரண்டு மாநிலங்களிலும் எத்தனை எத்தனையோ புயல்களைக் கிளப்பினாலும் தன் வழியில் அமைதியாகச் செல்லும் காவிரிக்கு எது அழகு?
காவிரிக்கு அழகு அமைதி!

6. வைகை
இண்டர்நேஷனல் லெவலில் ஆரம்பித்துக் கடைசியில் லோக்கல். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா என்ன? வைகை! பேரைச் சொல்லும்போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடும். அந்த மேம்பாலமும் கீழ்ப்பாலமும் ஒரு காலத்தில் தண்ணீர் (நினைவில் நிறுத்துங்கள், நிஜமாகவே தண்ணீர்தான்) ஓடிய நினைவுகளும் என்றென்றும் மறக்காதவை. இன்று வெறும் ஓடுதண்ணீரில் அழகர் ஆற்றில் இறங்கும் அவலமும் என் நெஞ்சை விட்டு அகலாது. இதே வைகையில் வெள்ளம் வந்த போது மேம்பாலத்தில் இருந்து காலைக் கீழே வெள்ளத்தில் விட்டு விளையாடியது கூட நினைவுக்கு வரும். ஹூம் அது ஒரு பெருங்கனவு! சரி, அழகு என்று இன்றைய நிலையில் நான் எதைப் பற்றிச் சொல்லுவேன்? என்றாவது வைகைக் கரையில் அமைந்த ஒரு பூங்காவில் நான் என் பேரனுடன் உல்லாசமாக அமர்ந்திருப்பேன் என்று கனவு மட்டுமே காண்கிறேன்.
வைகைக்கு அழகு வைகைதான்!

என்னமோ சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன். நீங்க படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க மக்கா!