Tuesday, December 05, 2006

வென்னித் தண்ணி வைக்கிறது எப்பிடி?

முதல்ல வென்னித் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வென்னித் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...

இந்த வென்னித் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வென்னித் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வென்னித் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது. எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வென்னித் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வென்னித் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வென்னி வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வென்னியில் “குடிக்கிற சூடு”, “கொதிக்கிற சூடு”, “ஆவி” அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.முதல்ல வென்னித் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.

சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வென்னித் தண்ணி இருக்குறது “குடிக்கிற சூடு”! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது “கொதிக்கிற சூடு” எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா “அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்”. இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வென்னி ஆவி பிடிக்க ஏற்றது, “ஆவி” என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.

கடைசியாச் சொல்ல வந்தது வென்னிய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வென்னிய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.

அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வென்னித் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?

Wednesday, November 29, 2006

சிவப்பதிகாரம் - தலையெழுத்து

ரொம்ப நாள் கழிச்சு பெங்களூர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமேன்னு நினைச்சோம். அங்ஙன புடிச்சுதுய்யா காலச் சனி. கொள்ளக் காசு குடுத்து அந்தா இந்தான்னு கஷ்டப்பாடு பட்டு நம்ம நண்பர் செல்வன் சீட்டு வாங்கிப்பிட்டாரு. நல்லாத் தின்னுப்புட்டு எல்லாருமா போயி ஒக்காந்துட்டோம். முதல்ல இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கான விவரணப் படம் ஒண்ணு ஓடுச்சு. சரி, ரொம்ப நாளாயிப்போச்சு, இந்த மத்தியத் திரைப்படக் கழகத்துல இருந்து திரையரங்குகளில் இதைப் போடச் சொல்லிருக்காக போலன்னு நினைச்சோம். அதிலயும் பெங்களூர் தியேட்டர்ல எதுக்கு தமிழில போடுறான்னு யோசிக்கலை... நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே! சரி விஷயத்துக்கு வருவோம். அதுதேன் படத்தின் ஆரம்பம்.

நாட்டுக்கு நல்லது நடக்க (?!) புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்!) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு! நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக! அப்புறம் என்ன? சின்ன ரோல்ல வந்த மணிவண்ணனும் (நல்ல வேளை) சில பல மாணவர்களும் கொல்லப் படுறாக. வேற வழியில்லாம பாரதிதாசன் பாட்டைப் பாடிக்கிட்டே ரமணா ஸ்டைல்ல விஷால் வரிசையாக் கொலை பண்றாரு. அப்புறம் அட்வைஸ் பண்றாரு (இதுக்குப் பதிலா கொலை தேவலாங்கறீங்களா? அதுவுஞ் சரிதேன்) அப்புறம் “ஏதாச்சும் பண்ணனும்”னு (இதுக்கு அப்புறம் வரேன்) படத்தை முடிச்சுப்புடுறாக!

விஷால் ஹீரோவா சண்டைக் காட்சிகளில் ஓகேதான்! ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் மசோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு! அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்)! ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம்! அதை அவரு படுத்துற பாட்டைப் பாத்தா எனக்கு கொலை நடுங்கிருச்சு!

கதாநாயகி (கதை எங்ஙன இருக்குங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்) அருமையா வந்துருக்காக! வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக! இதுக்கு மேல என்ன வேலைங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

படத்தோட உண்மையான கதைநாயகன் (நன்றி: தங்கர்) நம்ம கஞ்சாக் கருப்புதேன்! “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா?” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்! தொப்பியைத் தூக்கிட்டேன் கஞ்சா!

சொரணையே இல்லாத கதைக்குப் பின்னணி இசை ஒரு கேடான்னு நினைச்சிருக்காரு வித்யாசாகர்! தப்பில்லைங்க! ஆனா பாட்டுகளில தான் யாருன்னு காட்டியிருக்காப்புல! அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது! ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க! நானே நொந்து நூடுல்ஸாகிட்டேன்! அதிலயும் அந்தக் கரகாட்டப் பாட்டுக்கு ஏதோ ஒரு டுபுக்கு டான்ஸரையும் ஷர்மிலியையும் (ஏய்யா இயக்குநரே! மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா?) ஆட விட்டது இருக்கு பாருங்க... சரி ஒண்ணும் பிரயோசனம் இல்லைங்கறீங்களா, அதுவுஞ் சரிதேன்!

ஒளிப்பதிவு! இப்பல்லாம் தமிழ்நாட்டுக் காரவுகள பம்பாய் டெல்லியில இருந்தெல்லாம் பிளைட்டு சார்ஜூ குடுத்துக் கூப்பிட்டுப் படம் புடிக்கச் சொல்றாகளாம். இங்ஙன என்னடான்னா, டெக்னிகல் சமாச்சாரம் தெரியாத எனக்கே பல காட்சிகளில் ஒளிப்பதிவு பல்லிளிக்கிறது அப்பட்டமாத் தெரியுது!

படத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக! அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு! யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா! ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

Wednesday, September 20, 2006

வேட்டைக்கு நடுவில் விளையாட்டு!

ஏற்கனவே நிறைய பேரு படத்தின் நிறைகளைத் அலசித் துவைத்துப் பிழிந்துக் காயப் போட்டு விட்டார்கள். ஆனாலும் நம்ம கருத்துகளைச் சொல்லலைன்னாதான் நமக்குத் தலை வெடிச்சிருமே... படம் வந்து கொஞ்ச நாள் ஆனாலும் பாக்க நமக்குக் குடுத்து வைக்கலையே... இப்பத்தான் நண்பர் ராகவன் புண்ணியத்தில பெங்களூர்ல பாத்தேன்.

எனக்கும் படம் புடிச்சிருந்தது... மிகச்சில விஷயங்களைத் தவிர! அதையும் சொல்லீறணும்ல?

1. unmotivated serial killers என்ன விதத்தில் கதையில் பொருந்துகிறார்கள் என்றே புரியவில்லை. எந்த தொடர் கொலையாளிக்கும் ஒரு அழுத்தமான பின்னணி இருக்கும். யாரும் தொடர் கொலையாளியாகப் பிறப்பதில்லை (மேல் விவரங்களுக்கு மதன் எழுதிய "மனிதனுக்குள் மிருகம்" படிக்கவும்). "சிகப்பு ரோஜாக்கள்" கூட அனேகமாக இது போன்ற கதைதான். ஆனால் அதில் உள்ள பின்னணியைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள், வித்தியாசம் புரியும். போகிற போக்கில் கொலைகளும் ஒரு (சரியாகப் பார்த்தால் இரண்டு) தேசத்தின் ஒட்டு மொத்த காவல்துறையும் கையாலாகாமல் நிற்பதும், என்னய்யா இது? சரி சினிமாதானே, மன்னிச்சிருவோம்!

2. அடுத்தது அந்த பைசெக்ஸூவல் பிரச்சினை. கமல் ஒரு காட்சியில் காதலி என்று நக்கலாகச் சொல்வதையும் ஹோமோசெக்ஸூவல்ஸ் (இதுவும் டெக்னிக்கலாகப் பார்த்தால் தவறு) என்று கூறுவதையும் டென்மார்க் நார்வே அமெரிக்கா போல வேறொரு நாட்டில் எடுத்திருந்தால் படத்தைத் தடை செய்திருப்பார்கள்.

3. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சுகம்! குறிப்பாக "வெண்ணிலவே" பாட்டை தினமும் ஒரு தடவையாவது கேட்க வேண்டும் என்று எனக்கு வேண்டுதல். பின்னணி இசையில் நிறைய புத்திசாலித்தனம் கூடி இருக்கிறது. ஒரு காட்சியில் பின்னணியில் ஒருவர் செல்போன் பேசுவதைக் கூடச் சரியாகக் கணித்திருக்கிறார். பல காட்சிகளில் richness தேவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார். ரகுமானையும் சில காட்சிகளில் (குறிப்பாக அந்த கோட்டைக் காட்சி) உதவிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் பாருங்கள், கமல் - ஜோதிகா பரஸ்பரம் காதலைச் சொல்லிக் கொள்ளும் மென்மையான காட்சியில் கூட 100 வயலின்கள் எழுப்புவது இசை அல்ல, இரைச்சல் என்று புரிந்து கொள்ள ஹாரிஸ் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும்.

4. பாடல்களைப் பொறுத்தவரை தாமரைக்கு ஜே! பதாகை என்ற வார்த்தையை அறிமுகப் படுத்தியதில் இருந்து நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று பொங்கும் வரை தாமரையின் பங்களிப்பு சூப்பர், மன்னிக்க, அருமை!

5. இவை இருக்க, பாடல்கள் படத்தின் வேகத்துக்குப் பெரும் தடைக்கல். சில பாடல்கள் ஏன் வருகின்றன என்றே புரியவில்லை. கோவாவில் சிற்றுடை அணிந்த சிற்றிடைப் பெண்கள் ஆட வேண்டும் என்பதற்காகவே "நெருப்பே" பாடல், அங்கு கொலையாளிகள், என்பது அபத்தம். "பார்த்த முதல் நாளே" பாடலும் எதற்கு என்றே புரியவில்லை. அட, நீங்க வேற, அந்த ஃபிளாஷ்பேக்கே எதற்கு என்று புரியவில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்! இதே போல் இதே கமல் மனைவி இழந்த சோகத்தை மகாநதியிலும் காட்டி இருப்பார்கள். ஒரு போட்டோ கூட கிடையாது. வெறும் காட்சி அமைப்பு மட்டுமே!

6. ஹீரோவின் அனாவசிய ஹீரோயிசத்தைக் காட்டும் இயக்குநர் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் படத்தில் கடைசிக் காட்சி வரையில் ஹீரோவால் வில்லன்களை ஒரு மண்ணும் செய்ய முடியவில்லை என்பது உறுத்தி இருக்கும். கடைசிக் காட்சியில் வில்லனைக் கொல்லும் சினிமா போலீஸ் என்பது சரியாகத்தான் இருக்கு! சரி, யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்றால், என்ன எழவுக்குக் கண்ணை நோண்டச் சொல்லி ஒரு டப்பா வில்லனின் பக்கத்தில் போய் நிற்க வேண்டும்?

மொத்தத்தில் சினிமாத்தனத்துக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறார் கௌதம். ஆனால் ஆசை மட்டுமே பட்டிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் உலகத் தரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம்! பாராட்டுகிறேன், மனமார! ஆனால்... கதைன்னு பாத்தா என்ன செய்யிறது? எல்லாம் விதி!

ஆனா, மறக்காம ஒரு தடவையாச்சும் பாத்துருங்க!

Tuesday, July 18, 2006

கலைஞர்-ஜெ-வாஸ்து-காமெடி!!!

இன்றைய காமெடி!!!

நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை! இந்த அறிக்கையே சொல்லும்!!! முழுசாப் படிச்சு எஞ்சாய் பண்ணுங்க!

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தலைமைச் செயலக வளாகத்தினுள் பாரம்பரியம் உள்ள இடத்தில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மேற்படி சட்டமன்றப் பேரவை வளாகமும், அதன் அமைப்பும், ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு 1952-ம் வருடத்தில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த காலத்திலிருந்து நான் முதல்-அமைச்சராக இருந்த வரை தமிழக சட்டமன்றப் பேரவை மேற்படி இடத்தில் தான் நடைபெற்று வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஊட்டியில் நடைபெற்ற ஒரு தொடர் மற்றும் மராமத்துப் பணிகள் மேற்கொண்ட போது, இப்போது கலைவாணர் அரங்கம் என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சில தொடர்கள் நடைபெற்றதைத் தவிர, மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் மேற்படி வளாகத்தில் தான் நடைபெற்று வந்தது.

தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள் அனைத்தும் அங்கிருந்து தான் வெளிப்படுத்தப்பட்டது. எத்தனையோ தலைவர்கள், உதாரணமாக காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் அந்த சட்டமன்ற பேரவையில் தான் உரையாற்றி இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஆற்றும் சட்டமன்ற பணிகளை செய்துள்ளார்கள்.

மேற்படி சட்டமன்றப் பேரவையின் இருக்கைகள் மிகவும் தரம் வாய்ந்த மரச் சாமான்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்-அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டு இயங்கி வந்து இருக்கின்றது.
இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழக சட்டமன்றப் பேரவைக்கும் மற்றும் அதன் வளாகத்திற்கும் கருணாநிதியால் மிகப் பெரிய ஊறு இப்போது நேர்ந்துள்ளது. இதுகாறும் பின்பற்றப்பட்டு வரும் சட்டமன்ற நடைமுறையானது, முதல்-அமைச்சருக்கு எதிர்வரிசையில் அவருக்கு நேர் எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருப்பார்.


முதல்-அமைச்சரை ஒட்டி அவரது வலது பக்கத்தில் மற்ற அமைச்சர்களும், அதே போல எதிர்க்கட்சித் தலைவரை ஒட்டி அவரது இடது பக்கத்தில் மற்ற கட்சித் தலைவர்களும் அமர்ந்து இருப்பார்கள். எந்த ஒரு சூடான விவாதமும், உணர்ச்சிப்பூர்வமான விவாதமும், அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் பாங்கினை பார்க்கும் விதத்தில் தான் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அமரும் இருக்கைகள் இதுகாறும் இருந்து வந்தன.

தற்போது அவரது உத்தரவிற்கு இணங்க தமிழக சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகள் மற்றும் மேஜைகள் ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
காலம் காலமாக இதுவரை இருந்த தன்மையினை மாற்றி, தற்போது முதல்-அமைச்சர் உட்காரும் இடம் பேரவைத் தலைவரின் வலது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் அமர்ந்திருப்பதை பார்க்க முடியாத வகையில் பேரவைத் தலைவரின் இருக்கையால் மறைக்கப்பட்டு அந்த இருக்கைக்கு இடது புறத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

அதாவது, முதல்-அமைச்சரை எதிர்க்கட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்கள் பார்க்க இயலாது. அதே போல ஆளும் கட்சித் தரப்பில், எதிர்க்கட்சித் தலைவரையும் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்க்க இயலாது.

கருணாநிதி இவ்வாறு இருக்கைகளை மாற்றியதற்கு என்ன விளக்கம் தர இருக்கிறார்? எனக்குக் கிடைத்த தகவல்படி வாஸ்து சாஸ்திரத்தின் முழுப்பிடியில் கருணாநிதி தற்போது சிக்கியுள்ளார்.

முதல்-அமைச்சர் அறையிலும் கருணாநிதி அமர்ந்து அதிகம் பணியாற்றுவது இல்லை. அதற்குக் காரணம் அந்த அறை அமைந்துள்ள இடம் அவருடைய ராசிப்படி சரியாக இல்லை என்றும், இதுகாறும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற அறை தற்போது முதல்-அமைச்சர் பணியாற்றும் இடமாக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கெல்லாம் காரணம் வாஸ்து தான் என்றும் தெரிய வருகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடமும் அடியோடு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கும் வாஸ்து தான் காரணம் என்றும் தெரியவருகிறது.

சட்டமன்றப் பேரவை என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமும் அல்ல. அப்படி இருக்கும் போது யாரைக் கேட்டுக் கொண்டு இவ்வகை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை முதல்-அமைச்சருக்கும், சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கும் உள்ளது.
எந்த ஓர் எதிர்க்கட்சித் தலைவரையும் இதுகாறும் இது குறித்து கலந்து ஆலோசனை செய்ததாக தெரியவில்லை. ஏதோ தன் வீட்டு வாசல்படி, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது போல் முதல்-அமைச்சரும், சட்டமன்றப் பேரவைத் தலைவரும் நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்காக செலவழிக்கப்படும் பெரும் பணம் வீண் தானே?

இதுவரை என்ன நடைமுறை பழக்கவழக்கமோ அதனை திரும்பக் கொண்டுவருவது தான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
தினசரி கொலை, கொள்ளை என்று சட்டம்-ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் மணல் கொள்ளை; கள்ளச் சாராயம் தமிழகமெங்கும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதே வேகத்தில் சட்டமன்றப் பேரவையின் பாரம்பரியமும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைகள் இடமாற்றம். நாட்டு மக்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டோர் இதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இருக்கைகள் இடமாற்றம் மட்டுமே வாழ்க்கையை மாற்றி அமைத்து விடாது.

இதனால் மைனாரிட்டி அரசு நிலைத்து நின்று விடாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டமும், செயலாக்கமும் தான் ஓர் அரசுக்கு முக்கியம் என்பதை இனியாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, July 13, 2006

ஆறு பற்றி ஆறு

நம்ம சிவமுருகன் கொஞ்ச நாளைக்கு முன்னால உங்களுக்குப் புடிச்ச புடிக்காத ஆறு பத்தி எழுதுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. நானும் ரொம்ப யோசிக்க முடியாம, அல்லது யோசிக்கத் தெரியாம திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன். வேலை வேற கொஞ்சம் அதிகம். கடைசியா ஆறைப் பத்தியே ஆறையும் எழுதிட்டா என்னன்னு தோணிச்சு.

தமிழில் ஆறு என்னும் சொல் பல வகையான பொருள்களில் வழங்கப் படுகிறது. அதில் ஒரு ஆறு அர்த்தங்களை, அதாவது பொருட்களை எடுத்துக்கிட்டு சின்னச் சின்னதா வார்த்தைக் கோவைகள் (இதை நான் கவிதைன்னு சொல்லப் போயி நிஜமாவே கவிதை எழுதுறவங்க அடிக்க வந்துட்டா என்ன செய்யிறது? :) ) போட்டிருக்கேன். படிச்சுப் பார்த்து நல்லாருக்கான்னு சொல்லுங்க.

ஒன்று:

இது அனைவருக்கும் தெரிந்தது எண் 6! இந்த ஆறோட வடிவைப் பாத்தாலே எனக்கு என்ன தோணுதுங்கறதுதான் கீழே இருக்கு!

எண்களில் உனக்கு மட்டும்
அப்படியென்ன சோகம்?
வடிவே கயிறாய்!


இரண்டு:

நதி! நம்ம ஊருல ஆறுகள் ஒரு காலத்துல பாய்ந்தோடிக் கொண்டுதான் இருந்ததாம். ஏதோ ஒரு பழைய புத்தகத்துல ஆறுங்கறதுக்கு வழின்னு இன்னொரு பொருள் இருப்பதற்குக் காரணமே நதிகளின் அடையாளங்கள்தான்னு சொல்லிருந்தாங்க. ஆனாப் பாருங்க, இப்பப் பல நதிகளை இங்ஙனதேன் இருந்துச்சுன்னு அகழ்வாராய்ச்சிக்காரவுக மாதிரி சொல்றது மனசு வலிக்குது. எங்க ஊரு மதுரையில அழகர் ஆத்துல எறங்குறதுக்கு ஒரு காலத்துல லாரியில தண்ணி கொண்டு வந்து ஊத்துனாக! அங்ஙன ஆத்துக்குள்ள பம்பு போட்டு ஓடுதண்ணின்னு பேரும் வச்சுருக்காக! ஒரு காலத்துல ஆத்துத் தண்ணி ஊத்தாப் போயி இப்ப அந்த ஆத்துக்கே தண்ணி குடுக்குது!

தாய்க்குப் பாலூட்டும் மகள்!
வைகை ஆற்றில் அல்ல ஊற்றில்
இறங்குகிறார் அழகர்!


மூன்று:
தமிழில் ஆறு என்பதற்கு இன்னொரு முக்கியமான பொருள் வழி! வழி என்பதற்கு உபாயம் என்றும் பொருள் கொள்ளலாம்! அதாவது ஒரு செயலைச் செய்யும் வழி! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். இன்றைக்குப் பற்றி எரிந்தாலும் மாட்டராஸியைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் பற்றவைத்து
நெஞ்சில் முட்டுப்பட்டும்
துஞ்சாத வெற்றி!
- இது மாட்டராஸி ஆறுநான்கு:

ஆறு என்ற சொல் தமிழில் “அந்த விதமாக” என்று பொருள்படும் பெயரெச்ச விகுதியாகவும் பயன்படுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் கூட “விதி” துவங்கி “சேது” வரையில் காதல் கனவான்கள் தங்கள் காதலிகளை வளைக்கும் விதங்கள் பல வகை! அதில் என் நண்பன் ஒருவன் கல்லூரிக் காலத்தில் பின்பற்றிய டெக்னிக், பரிதாபம்! காதல் பிச்சை கேட்கலாம், ஆனால் காதலைப் பிச்சை கேட்டால் என்ன நடக்கும்?

கண்கள் கலங்குமாறு
கேட்டான் இதயம் வழங்குமாறு
உள்ளக்கிடக்கை விளக்குமாறு
வந்தது விளக்குமாறு!

ஐந்து:

இன்னொரு முக்கியமான பயன்பாடு – “சூடு தணித்தல்”. நமக்கு உண்பதற்கு எல்லாமே சூடாக இருந்தால்தான் பிடிக்கும். எங்க ஊர்ல பிரேமவிலாஸ்னு ஒரு அல்வாக்கடை ரொம்ப பேமஸ்! எங்க தாத்தா காலத்துல இருந்து அங்க அல்வா விக்கிறாங்க. அப்பல்லாம் பொட்டலம் வாங்குபவர்களை விட அங்கேயே போய் சுடச்சுட அல்வாவை விரும்பி உண்பவர்கள்தான் அதிகம். தொன்னையில சூடா நெய் மணக்க அல்வா, கூடவே கொஞ்சம் காராச்சேவு! அடடா! இப்பயும் நாக்கு ஊறுது. அங்ஙன அந்தக் காலத்துல ரெண்டு மணிக்குத் தொடங்கி அரை மணி நேரத்துல அத்தனையும் வித்துருமாம். அல்வா ஆறி யாரும் பார்த்ததில்லை!

பிரேமவிலாஸ் வாசலில்
ஆரும் கண்டதில்லை
ஆறும் அல்வா!


ஆறு:

கடைசியாக நான் எடுத்துக் கொள்ளும் பொருள் “மன அமைதி அடைதல்”. இன்றைய சூழ்நிலையில் மன அமைதி என்பது பல பொருள் கொண்டதாக மாறிவிட்டது. பம்பாய் குண்டு வெடிப்பைப் பார்த்தபோது வருத்தம் இருந்தது. ஆனால் தலைவர்களின் போக்கும் பேச்சையும் கேட்ட போது எனக்குத் தோன்றியது இதுதான்.

ஆறு மனமே ஆறு!
தாலியறுத்தவன்
மீண்டும் வருவான்!
தலைவர்கள் மீண்டும்
நீ மீண்டு வந்தமைக்கு
வாழ்த்துவார்கள்!
ஆறு மனமே ஆறு!

இன்னும் கூட சில அர்த்தங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதிட்டா ஆறுக்கு மேல போயிருமேன்னு விட்டு வச்சுருக்கேன்… என்னங்கறீங்க?

Wednesday, May 31, 2006

பேர் படும் பாடு

இது நிஜமாகவே நொந்து போன ஒருவரின் ஆங்கில வலைப்பூவில் இருந்து எடுக்கப் பட்டது. எனக்கு மின்னஞ்சலில் வந்தமையால் சரியான வலைப்பதிவைக் கண்டறிய இயலவில்லை. வலைப்பதிவர் அமெரிக்காவில் வாழ்பவர் என்று மட்டும் அறிகிறேன்.

இப்போது அவர் மூலமாகவே இதைச் சொல்கிறேன்.

என் முழுப்பெயர் கலைவாணி– கலைக்கு அதிபதியின் பெயர். தூய தமிழ்ப் பெயர். நான் என்னைக் கலை என்று அழைத்துக் கொள்வேன் – உடனே அன்பே சிவம் மாதவன் அன்பரசை அர்ஸ் என்று அழைப்பது போலா என்று கேட்காதீர்கள். அது பெரிய கதை.

என் பெயரின் பல்வேறு வடிவங்களை இந்த டாலர் தேசத்துக்கு வந்து அறிந்தபின்னரே தங்கத் தமிழில் இவ்வெழுத்துகளை இஷ்டத்திற்கு மாற்றியமைத்தால் கிடைக்கும் அருமையான சொற்களை அடையாளம் காண முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு வடிவத்திற்கும் அடைப்புக் குறிக்குள் என் தனிப்பட்ட கருத்துகளை இணைத்திருக்கிறேன்.

முதல் அடி பல்கலைக் கழகத்துக்குள் நுழையும் முன்னரே விழுந்தது. பேராசிரியரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்படித் துவங்கியது:“செல்வி. கலவாணிக்கு,” (உபயோகம்: களவாணிப் பய!)

சரி அதையாச்சும் பெருசுக்காகவும் அது குடுக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்புக்காகவும் பெருசுபடுத்தாம ஃப்ரீயா விட்டுட்டேன்…

ஒரு வருஷம் கழிச்சு ஒரு நிறுவனத்தில நேரடித் தொழில் அனுபவத்துக்காக (intern அப்படிங்கறதுக்கு என்ன யோசனை செய்ய வேண்டியிருக்கு மக்கா) சேர முடிவு செஞ்சேன். அதுக்கு முன்னாடி அந்தப் பயக நான் அங்கு சேர்வதற்கு முன் எடுக்க வேண்டிய தேர்வுகள் பற்றிச் சொல்லக் கூப்பிட்டாங்க.
“ஹலோ அது செல்வி. கிலவாணிங்களா?”(உம்: கிழபோல்ட்டு, எட்செட்ரா – இந்த செல்விக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை!)
“இல்லைங்க இது கலைவாணி”
“ஓ… மன்னிச்சிக்கிருங்க களவாணி”(மறுபடியும்… இப்படி எத்தனை பேருடா கெளம்பீருக்கீங்க?)

சரி என் பேரு பெத்த பேரா இருக்கிறதுனாலதானே இத்தனை குழப்பம்னு நானே ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சேன். அங்க புடிச்சது புதுச்சனி. என்னை நானே “கலை”ன்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சேன். காலைப் புடிச்ச பாம்பு கழுத்தைக் கவ்வாம விட்டிருமா என்ன?

ஒரு வழியா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் அறிமுகப் படலம். டொக்கு மேனேஜர் என்னைக் கூட்டத்துக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறாரு!
“உங்கள் அனைவரின் சார்பிலும் நமது அலுவலகத்திற்குப் புதிதாக அங்கம் வகிக்க வந்திருக்கும் செல்வி. குலையை வரவேற்கிறேன். (உ.ம்: குலை குலையாய் வாழைப்பழம்)
கைதட்டல்கள் – சிரிப்பொலிகள் (டேய் என்னாங்கடா எல்லாரும் சேந்து காமெடி பண்றீங்களா?)

அன்னைக்கு ஆரம்பிச்சது…ஒரு நாள் என் பாஸும் நானும் ஒரு ப்ராஜக்ட் பத்திப் பேசிட்டு இருந்தோம். மீட்டிங் முடிந்தவுடன், அவரு,
“சரி கலி, நீ இங்கு வந்ததில் சந்தோஷம்!” (உ.ம்: கலி முத்திப் போச்சு)
நான் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருக்காம,
“அது கலி இல்லைங்க, கலை!”(எனக்கு இது தேவையா)
“ஓ…காலி”(உம்: பத்திரகாளி – அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த அவதாரம்தான் எடுக்கப் போறேன், அப்புறம் நீ காலி!)
நான் உடனே “ ஹி ஹி.. வெரி க்ளோஸ்…”(போடாஆஆஆஆஆஆஆங்…)

அன்றிலிருந்து என் பெயரைத் திருத்துவதை நிறுத்திவிட்டேன்.கவிஞர்கள் அரைத்தூக்கத்திலும் துக்கத்திலும் வர்ணிக்கும் ஒரு இளம் காலை, நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தேன் (ஒரு மாற்றத்துக்கு அலுவலக வேலை)
“ஹேய் கிலை! எப்படிப் போவுது? Howzat goin?”(உ.ம்: மரக்கிளை) (எனக்குத் தண்ணி தண்ணியாப் போவுதுடா ராஸ்கல்!)
“ஹ்ம்ம்… நல்லாப் போவுது”(சொல்லிட்டுத் திரும்பிட்டேன். நமக்கு எதுக்கு இந்த பேர் திருத்துர பிசினஸ்ஸூ?)
“நீ உன் பேரை இப்படித்தான் சொல்லுவியா?” (ஆகா, ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா)
“உஹ்… அது கலை”
கொலாய்?” (உம்: கொழாயடிச் சண்டை) (வேணாம்….)
கொலை?”(உன்னை அதைத்தாண்டா செய்யப் போறேன் முண்டம்!) (வேணாம்…)
களை?”(உம்: களை புடுங்குறது) (வலிக்குது... அழுதுருவேன்…)
“மேபீ, உன் பேரை நான் நல்லாச் சொல்றதுக்குப் பயிற்சி எடுத்துக்குறேன்”(டேய்… இதெல்லாம் ரொம்ப ஓவருடா… தமிழில் பாத்தா இது ரெண்டே ரெண்டு எழுத்துதாண்டா வெள்ளைப் பன்னி!)

என்னடா சந்திரமுகியில தலைவர் துர்கா பேரை நக்கலடிக்கிற மாதிரி நம்ம பேர் ஆயிருச்சேன்னு நெனைக்கும் போது என் நண்பன் ஒருத்தன் ஒரு புத்திசாலித்தனமான யோசனை சொன்னான்.அதாவது என் பேரை ஆங்கிலத்தில இருக்கிற அதே ஒலி வருகிற இன்னொரு வார்த்தையோட ஒப்பிட்டுச் சொல்லச் சொல்றது.நான் உடனே “கலைடாஸ்கோப்” ல இருக்கிற மாதிரி கலைன்னு சொல்ல ஆரம்பிச்சேன். அங்கயும் வந்தது சனி. பயலுவ “கலாய்”னு தைரியமா நேராவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

“ஹேய் கலாய்!”
“ய்யா?”
“சும்மா உன் பேரைக் கூப்பிட முயற்சி பண்ணிப் பாத்தேன். ஹா ஹா ஹா”
“ஓ.. ஹௌ ஸ்வீட்?”(தூத்தேறி!)

ஏதோ வாந்தி எடுக்கிற எஃபெக்டுல பேர் இருந்தாலும், என் வாழ்க்கை சுகமாகத்தான போயிட்டு இருந்துச்சு… ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும்…என் இண்டர்நெட் கனெக்சன் அவுட்டு. ஒரு கஸ்டமர் சர்வீசைக் கூப்பிட்டேன் என் கிரகம், அது சென்னை கால் செண்டருக்குப் போச்சு! எனக்கு அந்த விசயமே தெரியலை. நேரா என் அமெரிக்க பாணியிலயே பேச ஆரம்பிச்சேன். முன் செய்த ஊழ்வினை!

“உங்க பேரு மேடம்?”
“கலாய்!”
“என்னது? இன்னொரு முறை சொல்லுங்க!”(விளம்பரம் நினைவுக்கு வருதா)
“கலைடாஸ்கோப்பில வருமில்லங்க கலாய்”
“உங்க பேரு புரியலை, உங்க நம்பர் குடுங்க, நான் ரெக்கார்டுகளைப் பாத்திட்டுச் சொல்றேன்”

பெருமூச்சோடு நம்பரைக் குடுத்தேன்.

“ஓ… கலைவாணி, சரியாங்க?”(ஒரு குத்தலான குரலில் கேட்டான்)

அடப் பாவி மக்கா, நீ நம்மூரா???? எல்லா அமெரிக்கத்தனத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா இந்தியன் மாதிரி பேசினேன்.மறுமுனையில அவன் என்ன நினைச்சான்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுது. பேரப் பாத்தா 'urs pammingly' னு போடற கூட்டம் மாதிரி இருக்கு, ஆனா சீன் போடுறது மட்டும் இளவரசி டயானா ரேஞ்சுக்கு இருக்கே…அண்ணா, சத்தியமா நான் அந்த மாதிரி இல்லீங்ணா!

வெள்ளிப் பனிமலையின் மீது - 2

முதல் பாகத்துக்கு இங்கே சொடுக்கவும்
பாகம் 2

ஓட்டுநர் காட்டிய அந்தக் காட்சி எல்லாரையும் திகைக்க வைத்தது என்பதில் ஐயமில்லை. இங்கே சொல்ல வேண்டிய ஒரு தகவல், உத்தராஞ்சல் மாநிலம் முழுவதுமே மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மலை முழுவதும் அங்கங்கு பாறைகளைச் சமன் படுத்தி சாலைகள் அமைக்கும் வேலை நடை பெறுகிறது. உத்தராஞ்சல் மாநிலம் தனியாகப் பிரிந்த பின் அவர்களுக்கு மிக முக்கியமான வருவாயான சுற்றுலாத் துறையை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். மேலே சாலை போடுவதற்காக வைத்த வெடிகுண்டு தவறுதலாக வெடித்து ஒரு பெரீய்ய்ய்ய்ய (எனக்குச் சாதாரணக் கண்களே மைக்ரோஸ்கோப் ஆன மாதிரி இருந்தது) பாறை செங்குத்தாக நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் வந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்தப் பக்கத்தில் வாகனங்கள் ஏதும் இல்லை.

அங்கங்கு அவசரத் தகவல் உதவி எண்கள் எழுதி இருக்கிறார்கள். பி எஸ் என் எல்லின் டால்ஃபின் சேவை (புதுதில்லிக்கான மொபைல் சேவை) மட்டும்தான் வேலை செய்கிறது. எங்கள் ஓட்டுநரிடம் இருந்ததால் உடனடியாக அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார். அமெரிக்கா மாதிரி சொல்லி 20 நிமிடங்களில் பெரிய கிரேன்கள் வந்து விட்டன. சின்னச் சின்ன வெடிகுண்டுகள் வைத்து ஒரு மாருதி 800 அளவு பெரிய பாறையைச் சின்னச் சின்னதாக உடைத்துக் கீழே நதிக்குள் தள்ளி விட்டனர். 3 மணி நேரத்தில் எல்லாம் சரியாகி மீண்டும் ருத்ரபிரயாக் நோக்கிப் புறப்பட்டோம்.

தேவபிரயாக்குக்குச் செல்லும் வழியில் சிற்றோடை போல் ஓடிக் கொண்டிருந்த கங்கையில் குளிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு 500 அடி கீழே இறங்கிச் சென்றால் கூழாங்கற்களாகக் கிடக்கிறது. நல்ல வெள்ள காலத்தில் நதிப் படுகையாக இருந்த இடம். கால்வாசி அகலத்தில் மட்டும் கங்கை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது சீசன் இல்லையாதலால், அங்கங்கு டெண்ட் போட்டு வைத்திருக்கின்றனர். மக்கள் அங்கேயே போய் தங்கிக் கொண்டு நான்கைந்து நாட்கள் நதிப் படுகையில் வெளி உலக வாசனையே இல்லாமல் நிம்மதியாகக் கழித்து வரலாம். உதவியாட்களும், சமையல் ஆட்களும் கிடைக்கிறார்கள். அடுத்த முறை இப்படிப் போய் ஒரு ரெண்டு நாள் இருந்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கங்கையைக் கண்டவுடன் எங்கள் மேலாளருக்கு (மிஸ்டர் எக்ஸ்னு வச்சிக்குவம்) உற்சாகம் கரைபுரண்டு ஓட குடுகுடுவென்று ஓடி நதிக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில் தட தடவென்று ஓடி மேலே வந்தவர் இரண்டு நிமிடங்களுக்குப் பேச்சே இல்லை. நாங்கள் ஏதோ முதலை கிதலை கடிச்சி வச்சிருச்சோன்னு பாத்து முதலுதவி செஞ்சு என்னான்னு கேட்டா கூல் கூல்னு உளறினார். இங்க கூழுக்கு எங்க போறதுன்னு முழிச்சிட்டு இருந்தபோதுதான் அங்கே கூடாரத்தில் இருந்த உதவியாளர் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக (0-1 டிகிரி) இருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து மற்ற மக்கள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். நடுநடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதற்குள் மிஸ்டர் எக்ஸ் தான் இங்கு வந்த பயன் அடைந்து விட்டதாகச் சொன்னார், அதாவது அவர் செய்த பாவம் எல்லாம் கழுவப் பட்டு மீண்டும் அவரது பாவக் கணக்கு 0-லிருந்து ஆரம்பிக்கிறதாம். அதனால் இன்னும் நிறையச் செய்யலாமாம். என்னே ஒரு நல்லெண்ணம்! எனக்கு ஒரு டவுட்டு! இவரு பாவம் செஞ்சாரு ஓகே. என்னை மாதிரி அபாவிகளுக்கு (அதாவது பாவமே செய்யாதவர்கள்) கணக்கு நெகட்டிவ்வில் போகுமோ? (எனக்கு ஏற்கனவே தண்ணியில கண்டமின்னு திருச்சுழி கருப்புசாமிக்கு வேண்டி இருக்கிறேன்.) இதைச் சொன்னதுதான்யா தாமதம்! கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையத் தண்ணிக்குள்ள முக்கி எடுத்துப் பிட்டாய்ங்க, படுபாவிப் பயலுவ.

சில நிமிடங்களுக்குக் கண்ணே தெரியவில்லை (ஏற்கனவே லைட்டா டோரிக் கண்ணு)! ஆனால் அதன் பிறகு வந்த உற்சாகம்! ஆகா! அருமை அருமை! மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுக்குள் மெல்ல மெல்ல கால் உடல் எனக் கடைசியில் தலையை முக்கிக் குளிக்கும் சுகம், அதுவும் கங்கையில் இன்னும் சொல்லப் போனால் மாசு படுத்தப் படாத கங்கையில் குளித்ததில் நிஜமாகவே பிறவிப் பயன் அடைந்தேன். ஒரு மணி நேரம் நமது கிராமத்து மத்தகஜங்கள் போல் ஊறிக் கிடந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினோம்.

நடுவில் உணவை முடித்துக் கொண்டு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேவபிரயாக் போய்ச் சேர்ந்தோம். மதிய வெய்யில் இதமான சூட்டில் அங்கிருந்த கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்திவிட்டு கங்கை நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டோம். எல்லா பிரயாக்குகளிலும் ஒரு பெண் தெய்வத்தை வழிபாட்டுக்காக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அசைவச் சாமிகள். சிறிது தொலைவில் ஆற்றில் படாதவாறுதான் பலிகள் கொடுக்கப் படுகின்றன.

இரவு 7 மணிக்கு ருத்ரபிரயாக்கை அடைந்தோம். ருத்ரபிரயாக் ஒரு மாவட்டத் தலை நகரம். ஆனால் நமது ஊர்க் கணக்கில் சொல்ல வேண்டுமானால் திருவல்லிக்கேணி அளவு கூட இராது. சின்னச் சின்ன அத்தியாவசியக் கடைகள். பக்கத்துக் கிராமங்களில் இருந்து மக்கள் பயண வசதிக்காக நிறைய ஜீப்புகள் இருக்கின்றன. இமயமலையில் இரண்டே இரண்டு பேர் வாழும் கிராமங்கள் கூட இருக்கின்றன. அந்தக் கிராமத்துக்கும் மின்சாரம், தொலைபேசி என்று வசதிகள் இருந்ததைப் பார்த்து மலைத்துத்தான் போனேன். ருத்ரபிரயாக்கில் அடுத்த நாள் உலங்கு வானவூர்தியில் பயணம் செய்ய வேண்டியவர்கள் சீக்கிரமே தூங்கப் போனார்கள். நாங்கள் அதற்கு அடுத்த நாள் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

விடுதி (மோனல் இன் என்று பெயர் – சிம்ரன் தங்கச்சி தேவையில்லாமல் நினைவுக்கு வந்தார்) அலகாநந்தா நதிக்கரையில் மலைச் சரிவில் இருந்தது. 200 மீட்டர் கீழே நதி சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவிற்குப் பின் கொஞ்ச நேரம் அந்த நதிச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன், கை விரைப்பது தெரியாமல்!

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி வெளியே வந்தோம். உலங்கூர்தியில் செல்ல வேண்டியவர்கள் ஏற்கனவே சென்று விட்டிருந்தனர். நாங்கள் 4 பேர் மட்டும் மிச்சம் இருந்தோம். எனவே கீழே நதிக்கரைக்குச் சென்று சில நேரம் பொழுதைக் கழித்தோம்.

உலங்கூர்தி விமானதளம் ருத்ரபிரயாக்கில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அகஸ்தியமுனி என்ற இடத்தில் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் augustimuni என்கிறார்கள். அங்கும் நமது அகத்தியருக்குக் கிடைக்கும் மரியாதையைக் கண்டு வியந்தேன். மதிய உணவைக் கட்டிக் கொண்டு அகஸ்தியமுனிக்குச் சென்று மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு சந்திரபுரி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

சந்திரபுரியில் அலகாநந்தாவின் வேகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கிறது. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மை. அங்கே நதிக்கரையில் சிறிது நேரம் தங்கிவிட்டு வந்துவிட்டோம். மனம் முழுவதும் அடுத்தநாள் உலங்கூர்தியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் 5 மணிக்கே எழுந்து உலங்கூர்தித் தளத்திற்குக் கிளம்பி விட்டோம். காலங்கார்த்தால இப்படி வரச்சொல்றாங்களேன்னு திட்டிக்கிட்டே கிளம்பினேன். காப்பி தவிர வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே சென்றவர்கள் எச்சரித்திருந்தனர். நம்மதான் சிங்கமாச்சே… அதெல்லாம் கேட்டா நம்ம பொழைப்பு என்னாகிறது. அதுனால சின்னதா ரெண்டு ஆப்பிள் ஒரு வாழைப்பழம் ரெண்டு பிரட்டோடு என் pre பிரேக்பாஸ்ட்டை முடித்துக் கொண்டேன். அங்கே ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உலங்கூர்தி சின்னதாகக் காத்துக் கொண்டிருந்தது.

இது பெல் 300 என்னும் உலங்கூர்தி வகை. ஐந்து பிரயாணிகளும் இரண்டு பைலட்டுகளும் செல்லும் வகையில் உள்ளது. முழுவதுமாகக் கதவை அடைத்துக் கொள்ளலாம். உலங்கூர்தி கிளம்பியது! எங்கள் மனமும்தான்! ஏற்கனவே விமானத்தில் சென்றிருந்தாலும் இந்தப் பயணம் வித்தியாசமானது. குறைந்த உயரம், எனவே வேண்டுமானால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்ளலாம், தலையை மட்டும் எட்டிப் பார்க்க முடியாது. இது எனக்குத் தெரியும். அவ்வப்போது ஆட்டோ மாதிரி குலுங்கும். இது எனக்குத் தெரியாது. குலுங்க ஆரம்பித்தது. எனக்கு உள்ளே போன ஆப்பிளும் வாழைப்பழமும் பிரெட் புட்டிங் மாதிரி ஆகி வெளியே வரத் துடித்தன. கூட வந்த (பசியோடு) வயித்தெரிச்சல் நண்பர்கள் நன்றாக வேண்டும் என்பது போல் பார்த்தனர். கஷ்டப்பட்டு இரண்டு புளிப்பு மிட்டாய்களை வைத்து உள்ளே தள்ளினேன். மதுரை திருச்சி பேருந்துகளில் இந்தப் புளிப்பு மிட்டாய்களை விற்பவர்களை இனிமேல் வையக் கூடாது என்று முடிவு செய்தேன்.

உலங்கூர்தி முதலில் சில பசுமையான மலைகளைக் கடந்தது. கீஈஈஈஈஈழே கேதார்நாத்தும் அமர்நாத்தும் கடந்தன. தற்போது கேதார்நாத் மூடப் பட்டுவிட்டதால் அந்த மூர்த்தி கீழே உக்கிமட் என்னும் இடத்தில் வைத்துப் பூஜை செய்யப் படுகிறது. தென்னாடுடைய சிவனுக்கு வடநாடும் உடைத்து! இது பற்றி மேலும் பின்னர் சொல்கிறேன். பனிச்சிகரங்களைப் பாருங்கள் என்று பைலட் குரல் கொடுத்ததும் கேமிராவைத் திருப்பிக் கொண்டு பார்த்தோம்.

வெள்ளிக் குழம்பை அப்படியே கவிழ்த்து வைத்தது போல் கடந்தன நான்கு சிகரங்கள். அவற்றுக்குப் பெயர் “சௌகம்பா”. நான்கு கம்பங்கள் என்று அர்த்தமாம். ஆனாலும் ஏதோ நெருடியது. இதுதான் இத்தனை சினிமாவில பாத்திருக்கோமே என்று! பைலட்டிடம் இதையும் சொன்னேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இப்போது பாருங்கள் என்றார், உலங்கூர்தி ஒரு சிகரத்தை மெல்லச் சுற்றிக் கொண்டு சூரியன் இருந்த பக்கம் வந்து மறுபக்கத்தைக் காட்டியது. ஐயா! ரசவாதம் என்றால் என்ன என்று அந்த நிமிடத்தில் எனக்குப் புரிந்தது!

Friday, May 12, 2006

திமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்???

முதல்ல இந்தத் தேர்தல்ல ஜெயலலிதாங்குற தனிப்பட்ட ஆணவத்துக்குக் கிடைச்ச ஆப்பு, கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த மதிமுகவுக்கு ஆப்பு, இதெல்லாம் சேர்த்துதான் திமுக வெற்றி. அத்தனை எதிர்ப்பு, பணபலம், ஆட்சி பலம், பல்வேறு ஊடகங்களின் பாரபட்சம் (இதில சன் டிவி, தினகரன், குமுதத்தையும் எதிர் சைடில சேத்துக்கறேன்) கடைசி நேரத்தில் கட்சி மாறிய காட்சிகள் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றமைக்குக் கலைஞருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

கலைஞரின் பலமான தேர்தல் கூட்டணி, விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை (இடங்களை மட்டும்தான் - இதற்குக் கம்யூனிஸ்டு கட்சிகளே சாட்சி), இலவசங்களை அள்ளி வீசிய தேர்தல் அறிக்கை (அட அந்தக் காலத்துல எம்சியாரு இதைத்தானே செஞ்சாரு), தள்ளாத வயதிலும் தெருத்தெருவாய்ச் செய்த பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து வெற்றிக் கனியை அவர் காலடியில் சமர்ப்பித்து இருக்கின்றன. இதே கூட்டணி அப்படியே பாண்டிச்சேரியிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருப்பது ஐஸ்கிரிம் மேல் வைக்கப்பட்ட செர்ரிப் பழம் அல்லது பொங்கலில் தூவப்பட்ட வறுத்த முந்திரி! இதெல்லாம் சேர்ந்து பார்க்கையில அதிமுக ஆட்சி அகற்றிய ஆப்பரேஷன் சக்ஸஸ் என்றுதான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. ஆனால் இப்ப பேஷண்ட் (அதாங்க திமுக) நிலை என்ன அப்படிங்கறதுதான் முக்கியம். அதைப் பத்தி ஒரு சின்ன அலசல்.

இப்பவே கூட்டணி ஆட்சி அது இதுன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாக. தயாநிதி அவரு பங்குக்கு தனித்து ஆட்சி அமைப்போம்கிறாரு. அதைக் கேட்டு இப்பயே டெல்லிக் காரவுகளுக்கும் இங்க இருக்குற தீர்க்கதரிசிகளான இளங்கோவன் போன்றோருக்கும் வயிறு கலங்கி இருக்கும். சரி, எல்லாத்தையும் மீறி கூட்டணி ஆட்சி வருதுன்னு வச்சிக்கங்க, அடுத்த கூத்து எந்தப் பதவிகளை யாருக்குக் குடுக்குறதுங்கறது. அதிலயும் ஒரு வெட்டுக் குத்து இருக்கும். வடக்கே கம்யூனிஸ்டுகளைப் போல் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எந்தப் பொறுப்பும் இல்லாத அதிகாரங்களை அனுபவிக்கலாம் என்பது பாமகவின் நிலை. அவங்க ஆட்சி அதிகாரத்துல இல்லாம இருக்குறதும் ஒரு வகையில தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.

இப்பதைக்கு அதிமுக எதிர்பார்க்குற மாதிரி உடனே பாராளுமன்ற தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸுக்கு இப்போது மத்தியில் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் உதற மாட்டார்கள். அதிலும் இங்கே அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது எல்லாம் சமீப காலத்தில் நடக்கக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு இரண்டு மேடம்களுமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் மத்தியில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

ஆனாலும் திமுக இங்கு நிம்மதியாக ஆட்சி புரிய முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. கலைஞரின் நிர்வாகத் திறன் நன்றாகவே இருந்தாலும் அள்ளி வீசியிருக்கிற இலவசங்களை நினைத்தால் சாமானியனாகிய எனக்கே குலை நடுங்குகிறது. இதை எப்படிக் கலைஞர் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு (அல்லது எதிர்ப்பு) மீறி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் ஆயிரம் கோடி ரூபாய் கேள்வி (அட எத்தனை நாளைக்குத்தான் வெள்ளைக்காரன் பணத்தைச் சொல்றது?). அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கினால் இவை அனைத்தும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதே ஒரு பெரிய துணிச்சலான வேலை. ஜெ.வுக்கு இந்த மாதிரி விஷயங்களில் துணிச்சல் அதிகம். அது அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதானாலும் சரி, ஆடு கோழி வெட்டத் தடை கொண்டு வருவதானாலும் சரி! ஜெ. நல்லதோ கெட்டதோ, செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாகச் செய்வார். கலைஞர் அனைவரையும் அனுசரித்துப் போவார். அதுதான் பிரச்சினை!

1996 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் தமாகா எப்படி எல்லாம் பதவியில் இல்லாமலே சுகம் அனுபவித்தது என்பது இப்போதைய காங்கிரசாருக்குத் தெரியாதா என்ன? இதே ஜெ. பதவி ஏற்றால் முதல் உத்தரவே அதிமுக காரர்கள் தவிர மற்றோர் சொல்லும் எதுவும் செய்யக் கூடாது என்பதாக இருக்கும். கலைஞருக்கு இவர்களை எங்கே வைக்க வேண்டும் என்பது தெரியாது :) எனவே என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் அதிமுகவை விட இனி திமுகவுக்கு ஒரு தலைவலியாக இருக்க வாய்ப்பு உண்டு.

பாமகவுக்குத் தன் நிலை தெரியும். காங்கிரஸ் துணை திமுகவுக்கு இருக்கும் வரையில் ரொம்ப ஆடினால் ஆப்புதான் விழும் - தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும். எனவே உடனடியாக அவர்கள் ஏதும் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

குறிப்பாக கலைஞருக்கு அடுத்து திமுகவில் ஸ்டாலினைப் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாமக மற்றும் காங்கிரஸின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும். இந்தப் பிரச்சினையை திமுக எப்படி அணுகப் போகிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.

ஏற்கனவே பொதுவுடைமைக் கட்சிகளும் எந்தத் தொழிலிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கப் போகிறோம் என்கிறார்கள். இப்போது 17 உறுப்பினர்களுடன் இன்னும் பகிரங்கமாக இவர்கள் சுமங்கலி கேபிள் விஷனின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாள் விரைவில் வரலாம். அங்கே கலைஞரின் ராஜதந்திரம் மட்டுமே உதவ வேண்டும்.

இந்தப் பதிவுல மதிமுக பத்திச் சொல்லலைன்னா அடுத்த ரெண்டு நாளைக்கு எனக்குத் தூக்கம் வராது.

இதே திமுக கூட்டணியில இருந்துருந்தா திமுகவுக்கு கூட பத்து சீட்டு கெடைச்சிருந்தாலும் மதிமுகவுக்கு கூட 20 சீட்டுக் கெடைச்சிருக்கும். ஆனாலும் திமுகவினரைப் பங்காளிகளாப் பாக்குற பார்வை மதிமுகவை விட்டுப் போயிருக்காது, பல தொகுதிகளில உள்குத்து செஞ்சு காலி பண்ணிருப்பாங்கன்னு தோணுது. என்னவோ கொள்கை கோட்பாடு எல்லாம் பேசின வைகோவுக்கு இப்ப சீட்டுக் கெடைச்சு முதல் முதலாச் சட்ட மன்றத்துக்குப் போயிருந்தாலும் மக்கள் மத்தியில, குறிப்ப நடுநிலையாளர்கள் மத்தியில அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து விட்டது. அதிலும் நேத்து தோல்விய ஒத்துக்க முடியாம அவரு ஜெயா டிவியில பேசின பேச்சு அத்தனைக்கும் சிகரம்.

எனிவே தமிழகம் மற்றும் புதுவை சட்ட சபைகளில் இப்போது மதிமுகவுக்கு உறுப்பினர்கள் உண்டு! வாழ்த்துகள் வைகோ அவர்களே! இனியாவது சகோதரியிடம் கொஞ்சம் வாஞ்சையாக இருங்கள்!

இப்போதைக்கு திமுக பக்கம் காற்று சுழற்றி சுழற்றி அடிக்கிறது. மீண்டும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Tuesday, May 09, 2006

அடுத்து ஜெ. ஆட்சி - கா.நா கருத்துக் கணிப்பு

ஜெயா டிவியில் அடுத்த அதிரடி.

யாரு கா.நா. னு கேக்குற அறிவு "சீவி"களுக்கு - கா.நா. என்றால் காழியூர் நாராயணன் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சொல்லும் பெரிய தில்லாலங்கடி ஜோதிடர்.

எக்சிட் போல்கள் எல்லாம் இதுவரை தவறான தகவல்கள் மட்டுமே தந்திருக்கின்றன என்று செய்தியில் ஆணித்தரமாகச் சொன்னார்கள். அது பரவாயில்லை - ஏனென்றால் எக்சிட் போல்கள் மண்ணைக் கவ்வியதும் உண்டு. ஆனால் அடுத்து போட்டாங்க பாருங்க அதிரடி! பிரபல ஜோதிடர்கள் அடுத்துத் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும் அப்படின்னு சொல்லிருக்காங்களாம். அதுனால அதிமுக ஆட்சிதான் அமையுமாம்.

மக்கள் என்ன சொன்னாங்களோ அதைப் பத்தி கவலை இல்லை. ஜோதிடர்கள் சொல்லிட்டாங்களாம், இதுக்கு முன்னாடி ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டுத்தானே முதுமலைக்கு யானையை அனுப்பினது, யானைக்குட்டியைக் கோயிலுக்குக் குடுத்தது, சத்ரு சம்ஹாரம் யாகம் செய்ய தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஐந்து ரூபாய்க் காசுகளைத் திரட்டியது எல்லாமே செஞ்சும் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தது ஆப்பு!

சொல்றதுக்கு வேற பத்திரிகைச் செய்தியே இல்லையா என்ன? தினமலர், தினமணி, தினபூமி இதெல்லாம் விட்டு எக்சிட் போல் நடத்தி அதிமுக 233 தொகுதிகளில் வெற்றி பெறும் - முறைகேடுகளால் கருணாநிதி மட்டும் வெல்வார்னு சொல்ல வேண்டியதுதானே!


உங்களுக்காகக் காழியூர் நாராயணன் கொடுத்த ஆறுதல் பேட்டி!

காழியூர் நாராயணன் பேட்டி
தமிழ்நாட்டில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று பிரபல ஜோதிடர் திரு.காழியூர் நாராயணன் கூறியுள்ளார்.
எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஜோதிடர்களில் திரு.காழியூர் நாராயணன் குறிப்பிடத்தக்கவர். தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ள திரு.காழியூர் நாராயணன், தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். செல்வி.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்பார் என்று ஈரோட்டை சேர்ந்த பிரபல ஜோதிடர் திரு.ஓம்.உலகநாதனும் கூறியுள்ளார். பிரபல ஜோதிடர் பண்டிட் வெற்றிவேலுவும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள் பலரும் செல்வி.ஜெயலலிதாவே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு திரட்டப்படுகிறது