Thursday, April 19, 2007

பாட்டு எப்படி? - பெரியார்

பாடல்கள்: வைரமுத்து

இளையராஜா இசையமைத்திருக்க வேண்டியது ஞான. ராஜசேகரனின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம். அந்தச் சர்ச்சைகள் எல்லாம் ஏற்கனவே எல்லாரும் எக்கச்சக்கமாக அலசி விட்டதால் இந்தப் பாடல்கள் ஸ்பெஷல் எதிர்பார்ப்பைப் பெறுகின்றன. அந்த எதிர்பார்ப்பை இவை நிறைவேற்றி இருக்கின்றனவா என்றால் ஓரளவுக்கு ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயின் பாரதியையும் மோகமுள்ளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கு வந்து விடுகிறது (தவறுதான் இது!) அப்படி ஒப்பு நோக்கையில்தான் இந்தப் பாடல்கள் கொஞ்சம் டல்லடிக்கின்றன. ஆனால் மொத்தமாக நோக்குகையில் நெருப்புத் தெறிக்கும் பாடல் வரிகளின் (வைரமுத்து) முக்கியத்துவம் பளிச்சென்று வெளியே தெரியும்படியாகவே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார் என்பது கண்கூடு. இது ஒரு பெரிய விஷயம், பாராட்டுகள்! தனித்தனியாகவும் பாடல்களைப் பார்த்துவிடுவோமே…

1. பகவான் ஒருநாள்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், சூர்யபிரகாஷ், குருசரண்
“கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ கண்கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?” – இது போன்ற பகுத்தறிவுவாதிகளின் அடிப்படைக் கேள்விகளைக் கவிதை வடிவமாக்கி இருக்கிறார் வைரமுத்து. வரிகளில் சர்ச்சை இருக்கும் அளவு சூடு இல்லாத்து நன்றே. கடைசியில் சீதை ராமர் பற்றிய சர்ச்சையும் உள்ளது. இசையைப் பொறுத்தவரை மொத்தமாக மென்மையான பாடல் இது. வெறும் மிருதங்கம் மட்டுமே பெரும்பான்மையாக வர மதுவின் குரல் உச்சரிப்பில் சுத்தபத்தமாக ஒலிக்கிறது.

மதிப்பு: 5

2. இடை தழுவிக்கொள்ள
பாடியவர்: ப்ரியா சுப்பிரமணியன்
அப்படியே தாளகதியில் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும் பாட்டு. முதல் முறை கேட்கையில் ஏதோ பழைய பாட்டு ரீமிக்ஸ் போல் இருந்தாலும் கேட்கையில் இனிக்கிறது. வரிக்கு வரி வார்த்தை விளையாட்டுதான், இந்தப் பாட்டு முழுவதும். அந்தப் புதுக்குரல் (இதற்கு முன் பரமசிவன் பட்த்தில்தான் பாடினார்) ப்ரியா நன்றாகவே இழைந்திருக்கிறார். ஆனால் பாட்டு முதலில் கேட்கும்போதே “ஓ ரசிக்கும் சீமானே” நினைவுக்கு வருவதுதான் பிரச்சினை.

மதிப்பு: 6

3. கடவுளா… நீ கல்லா…
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், ரோஷிணி, மாணிக்க விநாயகம்
சாட்டையால் அடிக்கும் வரிகள், சிலிர்க்கும் இசை (வீணை, தபலா, வயலின் என ஒரு கனமான பின்னணி இசை), தெளிவான உச்சரிப்பு, இத்தனையும் இருக்கையில் இந்தப் பாட்டு உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்வதில் ஆச்சரியம்தான் என்ன?
“நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?” – இப்படி வரிக்கு வரி பொறி பறக்கிறது பாட்டு முழுவதும். கடைசியில் “வானவில்லில் மட்டும் இங்கே வர்ணபேதம் இருக்கட்டும்” என்று முடிக்கிறார்கள். உணர வேண்டியவர்களுக்கு இதை விடத் தெளிவான பாடந்தான் எது?

மதிப்பு: 6

4. தை… தை… தை…
பாடியவர்: விஜயலட்சுமி, மாணிக்க விநாயகம்
நல்ல கர்நாடக இசைப் பின்புலத்தில் தேவதாசிகளின் (?!) வாழ்க்கை முறை சொல்லும் பாட்டு இது. ஏற்கனவே பலமுறை கேட்ட கருத்துகள். ஆனால் அவற்றைப் பாடல் வடிவமாக்கி இருப்பது சிறப்பு. விஜயலட்சுமியின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. ஜதிகளை மாணிக்க விநாயகம் குரலில் கேட்க அத்தனை சுகமாயில்லை.

மதிப்பு: 4

5. தாயும் யாரோ

பாடியவர்: ஜேசுதாஸ்
ராம் படத்திற்குப் பிறகு ஜேசுதாஸின் மயக்கும் குரலில் அடுத்த பாட்டு. இன்னும் பிசிறடிக்கவில்லை. எனவே இன்னும் சில வருடங்கள் பாடலாம். ஏற்கனவே சில பாடல்களை இதே படத்தில் மென்மையாகவே கேட்ட பிறகும் நன்றாகவே இருக்கிறது. வித்யாசாகரின் தாலாட்டு மெட்டு (கந்தா கந்தா.. ஜோ ஜோ கந்தா…) நிஜமாகவே தாலாட்டுகிறதே! வரிகளில் ஒன்றும் அத்தனை விசேஷமில்லை.
மதிப்பு: 5

மொத்தம்: 52%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

2 comments:

Nandha said...

எனக்கு இதில் ரொம்ப பிடிச்ச பாட்டு இடை தழுவிக்கொள்ள பாடல்தான்.

அப்ப்புறம் ஒரு சந்தேகம். பிரியா சுப்பிரம்ணியன்ங்கறது முன்னாடி பொதிகைலயும், இப்போ ஜெயாலயும் பழைய பாடல்களை பாடி தொகுத்து வழங்குவாரே அவரா?

இவ்வளவு நல்ல பாடகரை எப்படி சினிமா உலகம் விட்டு வைத்திருக்கிரறதுன்னு நினச்சுக்க்கிட்டு இருந்தேன்.

பிரதீப் said...

கருத்துக்கு நன்றி நந்தா!!

அந்தப் பாட்டு இந்தப் படத்தில் ஹைலைட்.

பிரியா சுப்பிரமணி பற்றி எனக்கு அவ்வளவு தெரியலையே... வித்யாசாகர் இது போல் பலரை அறிமுகப் படுத்தி இருக்கிறார். நீங்கள் கூறியது போல் இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம்.