Wednesday, November 29, 2006

சிவப்பதிகாரம் - தலையெழுத்து

ரொம்ப நாள் கழிச்சு பெங்களூர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமேன்னு நினைச்சோம். அங்ஙன புடிச்சுதுய்யா காலச் சனி. கொள்ளக் காசு குடுத்து அந்தா இந்தான்னு கஷ்டப்பாடு பட்டு நம்ம நண்பர் செல்வன் சீட்டு வாங்கிப்பிட்டாரு. நல்லாத் தின்னுப்புட்டு எல்லாருமா போயி ஒக்காந்துட்டோம். முதல்ல இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கான விவரணப் படம் ஒண்ணு ஓடுச்சு. சரி, ரொம்ப நாளாயிப்போச்சு, இந்த மத்தியத் திரைப்படக் கழகத்துல இருந்து திரையரங்குகளில் இதைப் போடச் சொல்லிருக்காக போலன்னு நினைச்சோம். அதிலயும் பெங்களூர் தியேட்டர்ல எதுக்கு தமிழில போடுறான்னு யோசிக்கலை... நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே! சரி விஷயத்துக்கு வருவோம். அதுதேன் படத்தின் ஆரம்பம்.

நாட்டுக்கு நல்லது நடக்க (?!) புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்!) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு! நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக! அப்புறம் என்ன? சின்ன ரோல்ல வந்த மணிவண்ணனும் (நல்ல வேளை) சில பல மாணவர்களும் கொல்லப் படுறாக. வேற வழியில்லாம பாரதிதாசன் பாட்டைப் பாடிக்கிட்டே ரமணா ஸ்டைல்ல விஷால் வரிசையாக் கொலை பண்றாரு. அப்புறம் அட்வைஸ் பண்றாரு (இதுக்குப் பதிலா கொலை தேவலாங்கறீங்களா? அதுவுஞ் சரிதேன்) அப்புறம் “ஏதாச்சும் பண்ணனும்”னு (இதுக்கு அப்புறம் வரேன்) படத்தை முடிச்சுப்புடுறாக!

விஷால் ஹீரோவா சண்டைக் காட்சிகளில் ஓகேதான்! ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் மசோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு! அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்)! ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம்! அதை அவரு படுத்துற பாட்டைப் பாத்தா எனக்கு கொலை நடுங்கிருச்சு!

கதாநாயகி (கதை எங்ஙன இருக்குங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்) அருமையா வந்துருக்காக! வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக! இதுக்கு மேல என்ன வேலைங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

படத்தோட உண்மையான கதைநாயகன் (நன்றி: தங்கர்) நம்ம கஞ்சாக் கருப்புதேன்! “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா?” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்! தொப்பியைத் தூக்கிட்டேன் கஞ்சா!

சொரணையே இல்லாத கதைக்குப் பின்னணி இசை ஒரு கேடான்னு நினைச்சிருக்காரு வித்யாசாகர்! தப்பில்லைங்க! ஆனா பாட்டுகளில தான் யாருன்னு காட்டியிருக்காப்புல! அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது! ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க! நானே நொந்து நூடுல்ஸாகிட்டேன்! அதிலயும் அந்தக் கரகாட்டப் பாட்டுக்கு ஏதோ ஒரு டுபுக்கு டான்ஸரையும் ஷர்மிலியையும் (ஏய்யா இயக்குநரே! மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா?) ஆட விட்டது இருக்கு பாருங்க... சரி ஒண்ணும் பிரயோசனம் இல்லைங்கறீங்களா, அதுவுஞ் சரிதேன்!

ஒளிப்பதிவு! இப்பல்லாம் தமிழ்நாட்டுக் காரவுகள பம்பாய் டெல்லியில இருந்தெல்லாம் பிளைட்டு சார்ஜூ குடுத்துக் கூப்பிட்டுப் படம் புடிக்கச் சொல்றாகளாம். இங்ஙன என்னடான்னா, டெக்னிகல் சமாச்சாரம் தெரியாத எனக்கே பல காட்சிகளில் ஒளிப்பதிவு பல்லிளிக்கிறது அப்பட்டமாத் தெரியுது!

படத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக! அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு! யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா! ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

15 comments:

Hariharan # 03985177737685368452 said...

முன் எச்சரிக்கைக்கு நன்றி! நேரத்தை மிச்சப்படுத்தலாம்! :-))

hosuronline.com said...

எச்சரிதமைக்கு மிக்க நன்றி

hosuronline.com said...

சிந்திக்க தூண்டுகிறது

Sud Gopal said...

வாங்க.பிரதீப்பூ....ரொம்ப நாளைக்குப் பொறகால இந்தப் பக்கம் வந்திருக்கீக போல.

//நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே! //

ஹா..ஹா..ஹா...

முதல் தலைமுறை மாணவர்கள் நல்லாப் படிப்பதன் காரணம்,அன்பே சிவம்னு வரும் க்ளைமாக்ஸ் வசனம் போன்றவை மனசில நிக்குது.

அதே மாதிரி நாட்டுபுற பாடல்களை அம்போன்னு விட்டுட்டாங்களே..

முதல் பாதியில் தொய்வான திரைக்கதை,நீ...ளமாயிருக்கும் பல வசனங்கள்,தேவையில்லாத இடங்களில் பாடல் செருகல்கள்,க்ளைமாக்ஸ் பாடல் இல்லாமை இப்படி எல்லாமும் சேர்ந்து ஒரு அருமையா வந்திருக்க வேண்டிய படத்தை சொதப்பலாக்கியிருக்கு.

பாடல்களில் வித்யாசாகர்,கோபிநாத் கலக்கியிருக்காங்க.பழனியப்பன் தான் படமாக்கிய விஷயத்தில கோட்டை விட்டுட்டார்.அதுவும் விஷால் அறிமுகமாகும் அந்தப் பாடலில் ஷர்மிலியா???
பேட் டேஸ்ட் டைரக்டர் சார்...

மு.கார்த்திகேயன் said...

நல்ல விமர்சன பதிவு ப்ரதீப்.. வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

தல

உங்க விமர்சனத்தில கரு.பழனியப்பனைக் கடிச்சுக் குதறிச் சிவப்பதிகாரம் பண்ணீட்டிங்க போங்க

பிரதீப் said...

// முன் எச்சரிக்கைக்கு நன்றி! நேரத்தை மிச்சப்படுத்தலாம்! :-))

//
வருகைக்கு மிக்க நன்றி ஹரிஹரன். ஏதோ நம்மளால ஆனது. அதுவுமில்லாம படத்துக் கடைசியில மறக்காம "ஏதாச்சும் செய்யணும்"னு டைட்டில் கார்டு வேற போட்டு ஞாபகப் படுத்தினாங்க. :)

hosuronline.com
// எச்சரிதமைக்கு மிக்க நன்றி //
அது என் பாக்கியம்! :)

// சிந்திக்க தூண்டுகிறது //
இதுதாங்க புரியலை. ஏதாச்சும் உள்குத்தா?

பிரதீப் said...

அப்துல்லா,

சிகப்பு சிக்னல் போடக் கூடாதுன்னுதான் நினைச்சேன். என்ன பண்றது? தமிழ் மக்களுக்குச் சேவை செய்யிறதே நமக்கு வேலையாப் போச்சு :)

உங்க கருத்துக்கு நன்றி!

பிரதீப் said...

சுதர்சன்,
ரொம்ப நாளைக்குப் பொறகால வரதுக்கு நம்ம படம் ஒதவிருக்குப் பாருங்க :)

நீங்க சொன்ன மாதிரி படத்துல அங்கங்க சில பல நல்ல விஷயங்கள் இருந்துச்சு. ஆனாப் பாருங்க இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு மாதிரி சின்ன விஷயங்களால எல்லாமே அடிபட்டுப் போச்சு :)

கார்த்திகேயன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பிரதீப் said...

//
தல

உங்க விமர்சனத்தில கரு.பழனியப்பனைக் கடிச்சுக் குதறிச் சிவப்பதிகாரம் பண்ணீட்டிங்க போங்க //

நமக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லைங்க. ரொம்ப நாள் கழிச்சு நண்பர்களோட ஏகப்பட்ட எதிர்பார்ப்போட போயிப் பாத்த படம். இப்படி வெளங்காமப் போயிருச்சேங்கற ஆதங்கம்தேன்.

Divya said...

பிரதீப், உங்க விமர்சனத்தை படிச்சுட்டு 'சிவபதிகாரம்' பார்க்கனும்ன்ற ஆசை போயிந்தே!!

G.Ragavan said...

படமா இது! படமா இது! படமா இதெல்லான்மேன்! சும்மா வீட்டுல இருந்த பயல தரதரன்னு இழுத்துட்டுப் போயி பிரியாணி வாங்கிப் போட்டப்பயே தெரியும்....எங்கேயோ இடிக்குதுன்னு. இப்படியொரு படத்த பாக்க வெச்சிட்டீகளேய்யா! :-(((((((((((((((((((((((((((

என்னது..பாட்டெல்லாம் நல்லாயிருக்கா? மக்களே நம்பாதீங்க....பாரதிதாசன் பாட்டக் கூட கொடுமைப் படுத்திக் கொதறியிருக்காங்க. நாட்டுப்புறப் பாட்டுன்னு நல்லா ஸ்கோப் இருக்குற பாட்டுகளக் கூட டி.கே.கலா மாதிரி நல்லாவே பாடுற பாடகி இருந்தும் கூட பாட்டுகள்ளாம்.....ம்ம்ம்ம்ஹூம்.

சிவமுருகன் said...

டாய் இனிமே படம் பாப்பியா?
டாய் இனிமே படம் பாப்பியா?

விகடன்ல 40 மார்க் போட்டாலும் இனிமே படம் பாப்பியா?

என்று யாரோ அடிக்க வர்ர மாதிரி தெரியுது.

நல்ல இருக்கு உங்க விமர்சனம். எச்சரிக்கைக்கு நன்றி.

(பூங்கா இதழில் இப்பதிவு வந்துள்ள்து வாழ்த்துக்கள்)
http://poongaa.com/content/view/717/10043/

பிரதீப் said...

மிக்க நன்றி சிவமுருகன்.

அதிலயும் இந்தப் பூங்கா இதழில் வந்ததைக் காமிச்சதுக்கு மிக்க நன்றி.

இந்தப் பிளாக்கர் பீட்டாவுக்குப் போயி எனக்கு உள்ளதும் போச்சுங்க. தமிழ்மணத்துக்குள்ள வரதுக்கு ஏதாச்சும் வழி சொல்லுங்க

சிவமுருகன் said...

பீட்டா பிளாகர் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. போன வாரம் பொன்ஸ் இது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க அத பார்த்த புரியும் என்று எண்ணுகிறேன். கடந்த வார நட்சத்திர பதிவு பகுதியில பாத்தீங்கன தெரியும்.