Tuesday, July 24, 2007

ஹாரி ஓம்... ஹாரி ஓம்...

ஹூம்... ரொம்ப நாள் கழிச்சு வந்து ஒரு புதுப் பதிவு... அது நம்ம ஹாரி பாட்டரைப் பற்றி என்று நினைக்கையிலேயே புளகாங்கிதப் புன்னகை பூக்கிறேன்.

புத்தகத்தைக் கடந்த மார்ச் மாதமே ப்ரீ புக்கிங் செய்து வைத்திருந்தேன். புத்தகம் வருமுன் கடந்த ஒரு வாரமாகவே நான் தேன் குடித்த நரி போல் திரிந்து கொண்டிருந்தேன். அதே வாரம் ஐந்தாவது பாகப் படம் வேறு வந்து விட்டதா? கள் குடித்த குரங்கிற்குக் கவட்டையில் குளவியும் கொட்டியதைப் போல் ஆகி விட்டிருந்தது (அட என்ன கவிதை...என்ன கவிதை)! வீட்டில் அனைவரும் வேக வேகமாக ஒரு மனநல மருத்துவரைக் காணும் முன் படத்திற்கு அதுவும் ஐமேக்ஸ் 3டி −− முன்பதிவு செய்து வீட்டில் அனைவரும் சென்று பார்த்தோம்.

அன்றிலிருந்து புத்தகம் வரும் நாள் பற்றி தினமும் கற்பனை செய்து கொண்டே இருந்தேன். வீட்டில் புத்தகமே இல்லாமலும் புத்தகம் படிப்பது போல் பாவனையில் இருந்த என்னைப் பார்த்துக் கலவரம் ஏற்படாதது ஆச்சரியமே...

ஒரு வழியாக சனிக்கிழமை ஜூலை 21ம் தேதி வந்து சேர்ந்தது. அதாவது நானே அதைத் தரதர என்று பல கோடி ஹாரி விசிறிகளுடன் இணைந்து இழுத்து வந்திருந்தேன். என்றைக்கும் எட்டு மணிக்குக் கூட எழுந்திருக்காத நான் ஐந்தரை மணிக்குக் குளித்து முழுகிக் கிளம்பி இருந்ததைப் பார்த்து எங்க அம்மா பிளந்த வாயில் அரைக்கிலோ சர்க்கரை போடலாம் :)

ஆறரை மணிக்குக் கடை திறக்கும் என்று போட்டிருந்ததை நம்பி ஆறே காலுக்குப் போயிக் கால் கடுக்கப் பார்த்தால் எனக்கு முன்னால் ஒரு 200 பேர்... வயது வித்தியாசமில்லாமல் ஆறிலிருந்து அறுபது வரை. என்னால் ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் இன்னொரு பக்கம் இவ்வளவு நேரம் ஆகிறதே என்ற துக்கக் கண்ணீர்... ஆக மொத்தம் நான் அழுது கொண்டே அழுகின்றேன்.

ஏதோ பெரிய விழாவைப் போல் ஈ டிவி, CNN IBN கேமிராக்கள் கடை வாசலைத் துளைத்து கொண்டு நின்றன.


ஏதோ காதலர்கள் ஒரு நிமிடம் ஒரு யுகம் என்றெல்லாம் சொல்வார்களே... அதெல்லாமெனக்கு அப்போது மிகச் சாதாரணமாகப் பட்டது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். முதன் முதலில் ஒரு பொடிசு ஆர்வமாகப் புத்தகத்தை வாங்கி வெளியே வந்தவுடன் தன்னுடைய 26-ஐயும் காட்டியது (மீதி ஆறு விழுந்து விட்டது). காத்திருந்த டிவி கேமிராக்காரர்கள் பின் லேடனைப் பார்த்த அமெரிக்க ராணுவத்தினரைப் போல் பாய்ந்து ஓடினார்கள். பொடிசு அரண்டு போய்ப் புத்தகத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு அதன் தந்தையின் பின்புறம் ஒட்டிக் கொண்டது. புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கச் சொல்லி அனைவரும் அதன் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினர். ஒரு வழியாக அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பொடிசு போஸ் கொடுத்த கையோடு என்னைக் கடந்து செல்லும்போது புத்தகத்தின் முதல் வரிகளைச் சத்தம் போட்டுப் படிக்கத் துவங்கியது. யாருக்கும் தெரியாமல் என் ஆத்திரம் தீர ஒரு கிள்ளு கிள்ளி விட்டேன்.

வழக்கம் போல் என் முறை வர ஒரு மணி நேரம் ஆகியது. சரியாக என் வரிசை எண் வரும்போது புதிய பண்டல் பிரிக்க வேண்டி இன்னும் பத்து நிமிடம் இழுத்தடித்தது -- இதை எல்லாம் போக்கிப் புத்தகம் கிடைத்தது. வராது வந்த மாமணி போல் என்றெல்லாம் சொல்கிறார்களே... அது இதற்கு முன் எம்மாத்திரம். அப்புறம் எப்படி வண்டியை ஓட்டி எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எப்படிப் படிக்க ஆரம்பித்தேன் என்பதெல்லாம் நினைவில்லை. அவ்வப்போது வீட்டில் அதை வாங்கு இதைச் செய் என்ற "இக"க் கட்டளைகள் எல்லாம் "பர" உலகத்தில் இருந்த என் காதில் விழ நியாயமில்லை.

புத்தகம் படிக்கும் போதே அங்கங்கு சிரிப்புகளும் மௌனமான அழுகைகளும் பெருமூச்சுகளும் என் உள்ளே முட்டி முட்டி எழுந்தன. ஒரு வழியாகப் படித்து முடிக்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகி விட்டிருந்தது. அதற்குப் பிறகு உள்ளோடிய எண்ணங்களில் ஒரு சில மணி நேரங்கள் பிரமை பிடித்து இருந்தேன்.

வீட்டில் அனைவரும் ஒரு வழியாக நான் படித்து முடித்தது அறிந்தவுடன் அந்தப் புத்தகத்தை என் கையிலிருந்து பிடுங்கி ஒரு மூலையில் வைத்த பின்புதான் பெருமூச்சு விட்டனர். பிறகு வழக்கம் போல் இக வாழ்வின் நிதர்சனங்கள் என்னை ஹாக்வார்ட்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருந்த வேளை மீண்டும் வழக்கம் திரும்பியது.

அன்று இரவு விளக்கைப் போட்டுக் கொண்டு திரிந்த என்னை மீண்டும் பார்த்த எங்க அம்மாவின் பார்வையில் தெரிந்த பீதியை யாராவது முழுவதுமாக விளக்கினால் அவர்களுக்குச் சாகித்ய அகாடமிப் பரிசு நிச்சயம்.

காரணம்...

இப்போது மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பி.கு.: என்றைக்காவது இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும். இப்போது எழுதினால் சில விஷயங்களைச் சொல்லப் போய் ஹாரி வெறியர்கள் ஆட்டோ என்ன ஆட்டம் பாமையே அனுப்புவார்கள் என்பதால் அவர்கள் சொன்னவுடன் போடுகிறேன்.

No comments: