Wednesday, February 28, 2007

சிதம்பர ஜாலம் - பலிக்கவில்லை

நிதிநிலை அறிக்கையை முழுமையாகக் கண்டேன். ரசித்தேன்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்திய மூன்று தேர்தல்களில் இரண்டில் காங்கிரஸை மண் கவ்வ வைத்த ஜோரில் தயாராக இருந்தார்கள். அத்தோடு குவாத்ரோச்சி வேறு அவர்களுக்கு ரகசிய உற்சாகம் அளித்து வந்தாரல்லவா? அவ்வப்போது அந்த உற்சாகம் சத்தமாக வெடித்து சபாநாயகர் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அதட்டலாகவும் அடக்க வேண்டி வந்தது. சோனியாவும் மன்மோகனும் அதைவிடப் பெரிய ஆச்சரியமாக அத்வானியும் வாய்மூடி மௌனிகளாக நிதிநிலை அறிக்கை முழுவதும் இருந்தனர். வாஜ்பாயைக் காணவில்லை.

ஆயிரங்கோடிக்கணக்கில் வரி போட்டார், ஆயிரங்கோடிக்கணக்கில் வரி எடுத்தார் ... அதற்கெல்லாம் அசராத பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாய் மற்றும் பூனை உணவுகளுக்கு வரிவிலக்கு என்றதும் கொதித்து எழுந்தார்கள். எப்போதுமே இப்படி ஒரு அஸ்திரத்தை வைத்து அவர்களைத் திசை திருப்புவதை சிதம்பரம் ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம் அவ்வப்போது ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து எழுந்த கூச்சல்களை சும்மா "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்" என்று சிதம்பரமே அடக்கினார். சோனியா மர்மமான புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தார்.

பட்ஜெட்டில் மாதச் சம்பளம் வாங்குவோருக்குப் பெரிய மாற்றமில்லை. ஒரு பக்கம் 1000 ரூ. வரிவிலக்கு அளித்துவிட்டு இன்னொரு பக்கம் 1% அதிக சர்சார்ஜ் ஏற்றி விட்டார் சிதம்பரம். இந்த 1% உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கானது என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலர் கல்விக்கான 2% இன்னும் தொடரும். இதை யாராலும் மறுத்துப் பேச இயலாது. எப்படிப் பார்த்தாலும் உங்கள் வரி ஒரு பைசா கூடக் குறையாது. அதிகரிக்க மட்டுமே செய்யும்.

விவசாய அறிவிப்புகள் தவிர சிதம்பரத்தின் முழு நோக்கமும் விலைவாசி மற்றும் பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் மட்டுமே இருந்தது. பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பால் எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தை ஈடு கட்டக் கூட ஒரு சிறு திட்டம் வைத்திருக்கிறார். தேயிலை, காப்பி மற்றும் தென்னை மறுபயிருக்கு வேறு வரிவிலக்கு அளித்திருக்கிறார்.

வாட் வரிகளும் பல பொருட்களுக்குக் குறைக்கப் பட்டு இருக்கின்றன.

தொலைத் தொடர்பு வரிகளை ஒருமுகப் படுத்த ஒரு திட்டத்தைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் அளிக்கும்.சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி (ITI) களுக்கு சிறப்புச் சலுகைகளும் இரண்டு வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு (அதில் ஒன்று கோவையில்) சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியும் அளித்திருக்கிறார்.

எனக்கு அனைத்து அம்சங்களிலும் மிகப் பிடித்தது ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு. எந்த ஒரு ஊனமுற்றோருக்கு நிரந்தர வேலை அளிக்கும் நிறுவனத்திற்கும் பரிசாக நிறுவனத்தின் சார்பாக அவருக்கு அளிக்க வேண்டிய நிரந்தர வைப்பு நிதியை மூன்று வருடங்களுக்கு அரசாங்கமே அளிக்கும் என்றார். அதிலும் சிறப்பு இது மாதம் ரூ. 25000 சம்பாதிப்பவர் வரைக்கும் பொருந்தும்... யாரும் ஏமாற்றாத வகையில் பயந்தரும் நல்ல திட்டம். வாழ்க!


ராணுவ நிதியாக 96000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பாஜக வாய் அடைக்கப் பட்டிருக்கிறது.

மற்றவை எல்லாம் ஒன்றும் அவ்வளவு பெரிதாகச் சொல்லக் கூடிய ஒன்றுமில்லை. பங்குச்சந்தை காலங்கார்த்தாலேயே 500 புள்ளிகள் கம்மியாகத் தொடங்கியது. சேவை வரி வலை பெரிதாக்கப் பட்டதும் பெரிதாக வரிச் சலுகைகள் இல்லாமல் போனதும் தலைகீழாக ஆக்கி விட்டன. கடைசியாகப் பார்த்தபோது ஒரு 350 புள்ளிகள் டைவ் அடித்திருந்தது.

6 comments:

✪சிந்தாநதி said...

பட்ஜெட்டை நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

நாங்கள் செய்தியாளர்கள். செய்தி தர மட்டுமே செய்வோம். கருத்தெல்லாம் நீங்க தான் சொல்லணும்.... சொன்னதுக்கு நன்றி.

:)

சென்ஷி said...

//எனக்கு அனைத்து அம்சங்களிலும் மிகப் பிடித்தது ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு. எந்த ஒரு ஊனமுற்றோருக்கு நிரந்தர வேலை அளிக்கும் நிறுவனத்திற்கும் பரிசாக நிறுவனத்தின் சார்பாக அவருக்கு அளிக்க வேண்டிய நிரந்தர வைப்பு நிதியை மூன்று வருடங்களுக்கு அரசாங்கமே அளிக்கும் என்றார். அதிலும் சிறப்பு இது மாதம் ரூ. 25000 சம்பாதிப்பவர் வரைக்கும் பொருந்தும்... யாரும் ஏமாற்றாத வகையில் பயந்தரும் நல்ல திட்டம். வாழ்க!//


சிறப்பான செய்திதான்...

சென்ஷி

சிவமுருகன் said...

ரொம்ப நல்ல சொல்லியுள்ளீர்கள் பிரதீப்.

பட்ஜட் தான் நாட்டை பிரதிபலிக்கும் ஒரு மகத்தான சாதனம் அதை சிறப்பாக செய்தாலே போதும். ஆனால் எங்கே, மனிதர்கள் சாப்பிடும் சாப்பாடிற்க்கு வரி, நாய் பிஸ்கட்டுக்கு வரி விலக்கும். ஆண்டவா!

பிரதீப் said...

சிந்தாநதி,
நன்றி உங்கள் கருத்துக்கு. நம்மளும் அலசிப் பிழியுற அளவுக்குப் பெரிய ஆள் இல்லை. ஏதோ ஒரு வரி கட்டுநர் என்ற வகையில் நிதிநிலை அறிக்கையைப் பார்த்து ஏமாற்றமடைந்தேன். அவ்வளவுதான்.

வருகைக்கு நன்றி சென்ஷி.

சிவா,
நிதிநிலை அறிக்கை நாட்டைப் பிரதிபலித்தது எல்லாம் அந்தக் காலம். இப்ப கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப் படுத்தும் ஒரு சாதனமாகத்தான் இருக்கிறது. அதையும் இந்த முறை சரியாகச் செய்யவில்லை என்பதுதான் கூத்து.

G.Ragavan said...

இந்த பட்ஜெட் விவகாரங்கள் எல்லாம் சரியாப் புரியிறதில்லை. ஆனா பொதுவுல பட்ஜட் சுமாருக்கும் கீழதான் போல இருக்கு. என்னவோ போங்க...மாசச் சம்பளம் வாங்குறவந்தான் ஏமாளி.

பிரதீப் said...

////மாசச் சம்பளம் வாங்குறவந்தான் ஏமாளி.
///

அப்ப வாரச் சம்பளம் வாங்குறவங்க, தினச் சம்பளம் வாங்குறவங்க எல்லாம்...????

வரி கட்டுற எல்லாருமே ஏமாளிங்கதான் ... நீங்க பிழைக்கணுமின்னா ஒண்ணு பெரிய தொழிலதிபரா இருக்கணும் இல்லாட்டி கம்யூனிஸ்டா இருக்கணும்... :)