Wednesday, May 31, 2006

பேர் படும் பாடு

இது நிஜமாகவே நொந்து போன ஒருவரின் ஆங்கில வலைப்பூவில் இருந்து எடுக்கப் பட்டது. எனக்கு மின்னஞ்சலில் வந்தமையால் சரியான வலைப்பதிவைக் கண்டறிய இயலவில்லை. வலைப்பதிவர் அமெரிக்காவில் வாழ்பவர் என்று மட்டும் அறிகிறேன்.

இப்போது அவர் மூலமாகவே இதைச் சொல்கிறேன்.

என் முழுப்பெயர் கலைவாணி– கலைக்கு அதிபதியின் பெயர். தூய தமிழ்ப் பெயர். நான் என்னைக் கலை என்று அழைத்துக் கொள்வேன் – உடனே அன்பே சிவம் மாதவன் அன்பரசை அர்ஸ் என்று அழைப்பது போலா என்று கேட்காதீர்கள். அது பெரிய கதை.

என் பெயரின் பல்வேறு வடிவங்களை இந்த டாலர் தேசத்துக்கு வந்து அறிந்தபின்னரே தங்கத் தமிழில் இவ்வெழுத்துகளை இஷ்டத்திற்கு மாற்றியமைத்தால் கிடைக்கும் அருமையான சொற்களை அடையாளம் காண முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு வடிவத்திற்கும் அடைப்புக் குறிக்குள் என் தனிப்பட்ட கருத்துகளை இணைத்திருக்கிறேன்.

முதல் அடி பல்கலைக் கழகத்துக்குள் நுழையும் முன்னரே விழுந்தது. பேராசிரியரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்படித் துவங்கியது:“செல்வி. கலவாணிக்கு,” (உபயோகம்: களவாணிப் பய!)

சரி அதையாச்சும் பெருசுக்காகவும் அது குடுக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்புக்காகவும் பெருசுபடுத்தாம ஃப்ரீயா விட்டுட்டேன்…

ஒரு வருஷம் கழிச்சு ஒரு நிறுவனத்தில நேரடித் தொழில் அனுபவத்துக்காக (intern அப்படிங்கறதுக்கு என்ன யோசனை செய்ய வேண்டியிருக்கு மக்கா) சேர முடிவு செஞ்சேன். அதுக்கு முன்னாடி அந்தப் பயக நான் அங்கு சேர்வதற்கு முன் எடுக்க வேண்டிய தேர்வுகள் பற்றிச் சொல்லக் கூப்பிட்டாங்க.
“ஹலோ அது செல்வி. கிலவாணிங்களா?”(உம்: கிழபோல்ட்டு, எட்செட்ரா – இந்த செல்விக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை!)
“இல்லைங்க இது கலைவாணி”
“ஓ… மன்னிச்சிக்கிருங்க களவாணி”(மறுபடியும்… இப்படி எத்தனை பேருடா கெளம்பீருக்கீங்க?)

சரி என் பேரு பெத்த பேரா இருக்கிறதுனாலதானே இத்தனை குழப்பம்னு நானே ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சேன். அங்க புடிச்சது புதுச்சனி. என்னை நானே “கலை”ன்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சேன். காலைப் புடிச்ச பாம்பு கழுத்தைக் கவ்வாம விட்டிருமா என்ன?

ஒரு வழியா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் அறிமுகப் படலம். டொக்கு மேனேஜர் என்னைக் கூட்டத்துக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறாரு!
“உங்கள் அனைவரின் சார்பிலும் நமது அலுவலகத்திற்குப் புதிதாக அங்கம் வகிக்க வந்திருக்கும் செல்வி. குலையை வரவேற்கிறேன். (உ.ம்: குலை குலையாய் வாழைப்பழம்)
கைதட்டல்கள் – சிரிப்பொலிகள் (டேய் என்னாங்கடா எல்லாரும் சேந்து காமெடி பண்றீங்களா?)

அன்னைக்கு ஆரம்பிச்சது…ஒரு நாள் என் பாஸும் நானும் ஒரு ப்ராஜக்ட் பத்திப் பேசிட்டு இருந்தோம். மீட்டிங் முடிந்தவுடன், அவரு,
“சரி கலி, நீ இங்கு வந்ததில் சந்தோஷம்!” (உ.ம்: கலி முத்திப் போச்சு)
நான் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருக்காம,
“அது கலி இல்லைங்க, கலை!”(எனக்கு இது தேவையா)
“ஓ…காலி”(உம்: பத்திரகாளி – அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த அவதாரம்தான் எடுக்கப் போறேன், அப்புறம் நீ காலி!)
நான் உடனே “ ஹி ஹி.. வெரி க்ளோஸ்…”(போடாஆஆஆஆஆஆஆங்…)

அன்றிலிருந்து என் பெயரைத் திருத்துவதை நிறுத்திவிட்டேன்.கவிஞர்கள் அரைத்தூக்கத்திலும் துக்கத்திலும் வர்ணிக்கும் ஒரு இளம் காலை, நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தேன் (ஒரு மாற்றத்துக்கு அலுவலக வேலை)
“ஹேய் கிலை! எப்படிப் போவுது? Howzat goin?”(உ.ம்: மரக்கிளை) (எனக்குத் தண்ணி தண்ணியாப் போவுதுடா ராஸ்கல்!)
“ஹ்ம்ம்… நல்லாப் போவுது”(சொல்லிட்டுத் திரும்பிட்டேன். நமக்கு எதுக்கு இந்த பேர் திருத்துர பிசினஸ்ஸூ?)
“நீ உன் பேரை இப்படித்தான் சொல்லுவியா?” (ஆகா, ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா)
“உஹ்… அது கலை”
கொலாய்?” (உம்: கொழாயடிச் சண்டை) (வேணாம்….)
கொலை?”(உன்னை அதைத்தாண்டா செய்யப் போறேன் முண்டம்!) (வேணாம்…)
களை?”(உம்: களை புடுங்குறது) (வலிக்குது... அழுதுருவேன்…)
“மேபீ, உன் பேரை நான் நல்லாச் சொல்றதுக்குப் பயிற்சி எடுத்துக்குறேன்”(டேய்… இதெல்லாம் ரொம்ப ஓவருடா… தமிழில் பாத்தா இது ரெண்டே ரெண்டு எழுத்துதாண்டா வெள்ளைப் பன்னி!)

என்னடா சந்திரமுகியில தலைவர் துர்கா பேரை நக்கலடிக்கிற மாதிரி நம்ம பேர் ஆயிருச்சேன்னு நெனைக்கும் போது என் நண்பன் ஒருத்தன் ஒரு புத்திசாலித்தனமான யோசனை சொன்னான்.அதாவது என் பேரை ஆங்கிலத்தில இருக்கிற அதே ஒலி வருகிற இன்னொரு வார்த்தையோட ஒப்பிட்டுச் சொல்லச் சொல்றது.நான் உடனே “கலைடாஸ்கோப்” ல இருக்கிற மாதிரி கலைன்னு சொல்ல ஆரம்பிச்சேன். அங்கயும் வந்தது சனி. பயலுவ “கலாய்”னு தைரியமா நேராவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

“ஹேய் கலாய்!”
“ய்யா?”
“சும்மா உன் பேரைக் கூப்பிட முயற்சி பண்ணிப் பாத்தேன். ஹா ஹா ஹா”
“ஓ.. ஹௌ ஸ்வீட்?”(தூத்தேறி!)

ஏதோ வாந்தி எடுக்கிற எஃபெக்டுல பேர் இருந்தாலும், என் வாழ்க்கை சுகமாகத்தான போயிட்டு இருந்துச்சு… ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும்…என் இண்டர்நெட் கனெக்சன் அவுட்டு. ஒரு கஸ்டமர் சர்வீசைக் கூப்பிட்டேன் என் கிரகம், அது சென்னை கால் செண்டருக்குப் போச்சு! எனக்கு அந்த விசயமே தெரியலை. நேரா என் அமெரிக்க பாணியிலயே பேச ஆரம்பிச்சேன். முன் செய்த ஊழ்வினை!

“உங்க பேரு மேடம்?”
“கலாய்!”
“என்னது? இன்னொரு முறை சொல்லுங்க!”(விளம்பரம் நினைவுக்கு வருதா)
“கலைடாஸ்கோப்பில வருமில்லங்க கலாய்”
“உங்க பேரு புரியலை, உங்க நம்பர் குடுங்க, நான் ரெக்கார்டுகளைப் பாத்திட்டுச் சொல்றேன்”

பெருமூச்சோடு நம்பரைக் குடுத்தேன்.

“ஓ… கலைவாணி, சரியாங்க?”(ஒரு குத்தலான குரலில் கேட்டான்)

அடப் பாவி மக்கா, நீ நம்மூரா???? எல்லா அமெரிக்கத்தனத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா இந்தியன் மாதிரி பேசினேன்.மறுமுனையில அவன் என்ன நினைச்சான்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுது. பேரப் பாத்தா 'urs pammingly' னு போடற கூட்டம் மாதிரி இருக்கு, ஆனா சீன் போடுறது மட்டும் இளவரசி டயானா ரேஞ்சுக்கு இருக்கே…அண்ணா, சத்தியமா நான் அந்த மாதிரி இல்லீங்ணா!

20 comments:

கஸ்தூரிப்பெண் said...

அய்யகோ! உமக்கும் அதே பிரச்சனைதானா??

அழகு தமிழில் அமைதியை தரும்
எனது சாந்தி என்ற பெயர்
உள் நாட்டிலேயே
ஷான்டி என்று எழுதப்ப்ப்ட்டு
வெளிநாட்டில்
சேந்தி (தண்ணீர் தெளித்து)
சேண்டி என்று ஆங்கிலப்படுத்தப்பட்டுள்ளது!!!

பிரதீப் said...

நல்ல வேளை,
உங்க பேர் பாண்டின்னு இருந்தா இன்னேரம் போண்டின்னு ஆக்கிருப்பாங்க :))

சிவமுருகன் said...

இதை எங்கோ படித்த ஞாபகம்.

ஆனால் பாருங்க கலைவாணி என்பது கொஞ்சம் கடினமான பெயர் தான்.

என்னுடைய பெயர் என்ன பாடு படுமோ!

பிரதீப் said...

அதான் சொன்னேனே சிவா...
இது எம் எஸ் என் பிளாக்கில் கொஞ்ச நாள் முன்னாடி படித்து எழுதி வைத்தது.

ஒவ்வொரு முறை அமெரிக்கா போகும்போதும் இம்மிகிரேஷன்ல பிரதீப் குமார் திருமலை அரசன்னு என் பேரை முழுசாப் படிக்கிறதுக்கு பயப்பட்டுக்கிட்டே என் மூஞ்சியில் குத்துறதா நினைச்சு "சப்பக்"குனு குத்தித் தொரத்தி விட்டுருவாய்ங்க!

குமரன் (Kumaran) said...

பிரதீப். நல்ல சிரிப்பூட்டும் பதிவு. :-)

அப்புறம் மேலே வந்து போயிருப்பவர் டோண்டு ஐயா இல்லை. அவர் டோண்டுவைப் போல் எழுத முயற்சிக்கும் ஆனால் படுபயங்கரமாகத் தோல்வியடையும் ஒரு 'நல்லவர்'. பின்னூட்டம் நன்றாக இருக்கின்றது என்று நீங்களும் அனுமதித்துவிட்டீர்கள். ஆனால் அவர் பெயரை க்ளிக்கிச் சென்றால் தான் அது உண்மையான டோண்டு ஐயா இல்லை என்று தெரியும். விருப்பமிருந்தால் அந்த பின்னூட்டம் முழுமையும் லிங்க் கூட இல்லாமல் அழித்துவிடுங்கள்.

Nakkiran said...

இந்த கொடுமையை அனுபவிக்காத தமிழரே இல்லை எனலாம். என் 2 வயது குழந்தையின் பெயர் தமிழிசை. ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் அவள் பெயரை கூப்பிடும் போதும் நான் என் காதைப் பொத்திக்கொள்வேன்

பிரதீப் said...

//பிரதீப். நல்ல சிரிப்பூட்டும் பதிவு. :-) //
மிக்க நன்றி குமரன்,
அடிக்கடி வாருங்கள், இப்பத்தானே எழுத ஆரம்பிச்சிருக்கேன், அதுனால சில நீக்குப் போக்குகள் தெரியலை :)

பிரதீப் said...

//இந்த கொடுமையை அனுபவிக்காத தமிழரே இல்லை எனலாம். என் 2 வயது குழந்தையின் பெயர் தமிழிசை. ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் அவள் பெயரை கூப்பிடும் போதும் நான் என் காதைப் பொத்திக்கொள்வேன்//
தமிழிசை - அழகான பெயர் - பெயரிலேயே இசை இருக்கிறது. உண்மைதான், அந்தப் பெயரை அவர்கள் கூப்பிடும்போது நாராசமாகத்தான் இருக்கும். என்ன செய்ய?

நம்ம பேரை நம்மளாச்சும் நல்லபடியாக் கூப்பிட்டுக்கிருவம்

paarvai said...

மிக அனுபவித்து ரசித்து எழுதியுள்ளீர்கள்!
நிச்சயம்;அவர்கள் இயலாமையில் தான் இப்படிக் கூறுகிறார்கள். என்பதனை நீங்கள் புரிந்தே!!!இதை ரசித்தீர்கள் என நம்புகிறேன். என் பெயரைக்கூட அவர்களால் சொல்ல முடியாது. அவர்கள் கொத்திக்குதறு முன் ; நான் கூறு போட்டு "நடா" எனக் கொடுத்துவிட்டு இருக்கிறேன்.
யோகன் பாரிஸ்

dondu(#4800161) said...

பெயரை கொலை செய்வது எல்லா ஊரிலும் நடக்கிறதுதான். சுப்பிரமணிய சிவத்தை "ஹல்லோ சுப்ரமண்ய சவம்"ன்னு வெள்ளைக்காரன் கூப்பிடுவானே கப்பலோட்டியத் தமிழன்லே.

நான் வேலை செய்த ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு பிரெஞ்சுக்காரர் வந்தார். அவர் பெயர் Chaussier. அதை உச்சரிக்க வேண்டிய முறை ஷோஸ்ஸியே. ஆனால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் ஷோஷ்யூர் (ஷூ) என்று உச்சரித்தே அவரை வெறுப்பேறினார்கள். இன்னொரு முறை Grospellier (க்ரோபெல்லியே) என்று கூறவேண்டிய பெயரை க்ரோஸ்பெல்லி என்றனர் மற்றவர்.

போலி பின்னூட்டத்தை சுட்டிக் காட்டிய குமரன் அவர்களுக்கும், அதை சப்ஜாடாக எடுத்த கலைவாணி அவர்களுக்கும் என் நன்றி. இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைப் பார்க்க என் டிஸ்ப்ளே பெயர் மேல் எலிக்குட்டி பார்த்தால் என் சரியான ப்ரொஃபைல் எண் தெரிய வேண்டும், அதே நேரம் என் போட்டோவும் பின்னூட்டம் பப்ளிஷ் செய்யும் பக்கத்தில் தெரிய வேண்டும். இரண்டு சோதனைகளும் ஒரு சேர வெற்றி பெற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரதீப் said...

//அவர்கள் கொத்திக்குதறு முன் ; நான் கூறு போட்டு "நடா" எனக் கொடுத்துவிட்டு இருக்கிறேன்.//

சரியாகச் சொன்னீர்கள்.

இன்னொரு விஷயம், தமிழர்கள் பெரும்பாலும் தம் தந்தை அல்லது கணவர் பெயரைத் தமது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதுதான் வழக்கம். குடும்பப் பெயர் என்பது கிடையாது. ஆனால் எங்குமே மனைவியை மிஸஸ் போட்டு கணவரின் குடும்பப் பெயர் வைத்து அழைப்பதுதான் வழக்கம்.

அதே போல் என் நண்பனின் மனைவிக்கு வந்த அழைப்பிதழில் மிஸஸ் என்று போட்டு அவன் தந்தை பெயர் இருந்தது.

அதிர்ந்து போன அவன் உடனே பெயரை மாற்றினான். இது நடந்தது அமெரிக்காவில்!

வருகைக்கு மிக்க நன்றி!

பிரதீப் said...

டோண்டு சார்,
வருகைக்கு மிக்க நன்றி!
அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன்.

//பெயரை கொலை செய்வது எல்லா ஊரிலும் நடக்கிறதுதான்.//
சரிதான், மதுரையில் ராஜஸ்தானி சேட்டுகள் நம் பெயர்களைக் கொலை செய்வதைப் போல் வேறெங்கும் கண்டதில்லை :))

//போலி பின்னூட்டத்தை சுட்டிக் காட்டிய குமரன் அவர்களுக்கும், அதை சப்ஜாடாக எடுத்த கலைவாணி அவர்களுக்கும் என் நன்றி.//
அடுத்த முறை கவனமாக இருப்பேன். ஆனால் நான் "கலைவாணி" இல்லை. நான் பிரதீப்! இது இன்னொரு ஆங்கில பிளாக்கில் படித்தது, என் ரசனைக்கேற்ப மாற்றி எழுதினேன்.

நாகை சிவா said...

ஆமாங்க, இவனுங்க வாயில ஈயத்தை காய்ச்சி ஊத்தினாலும் நம்ம பெயரை கொலை செய்வதை நிறுத்த மாட்டானுங்க. என் பெயர் படும் பாட்டை கூடிய விரைவில் ஒரு பதிவாக போடும் எண்ணம் உள்ளது.

பிரதீப் said...

வணக்கம் சிவா,
உங்கள் வருகைக்கு நன்றி, அடிக்கடி வாருங்கள்.

// என் பெயர் படும் பாட்டை கூடிய விரைவில் ஒரு பதிவாக போடும் எண்ணம் உள்ளது. //

போடுங்க போடுங்க!

Kuppusamy Chellamuthu said...

பாபுங்கற(babu) பேரு பேபுன்னு ஆகிருச்சுங்க

பிரதீப் said...

அட ஆண்டவா,
அடுத்து பேபி ஆக்கிருப்பாங்க, நீங்க தப்பிச்சீங்க...

Dharan said...

அமெரிக்காவாது பரவாயில்லை..இந்த தைவான்ல என் அப்பா பேரோடு என் பெயரை சேர்த்து படித்து கூப்பிடும்போது..மக்கா அவன் கண்கலங்கி நிப்பான் பாருங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

செந்தழல் ரவி said...

நான்கூட இந்த ஒரிஜினல் இ-மெயிலை ஒரு ஆண்டுக்கு முன் படித்திருக்கேன்...

ஆனாலும் இந்த கலைவாணிக்கு ரொம்பத்தான் நக்கல் - நையாண்டி...

அப்பப்போ நினைச்சுக்குவேன்..இந்த கலைவாணி எல்லாம் தமிழ்மணத்தில் எழுதினா - சும்மா களை கட்டும்...

யாராவது கூட்டிவாங்கப்பா...

மற்றபடி - பொறுமையாக ஒரிஜினல் தரம் மாறாமல் - கொடுத்ததற்க்கு நன்றி..

பிரதீப் said...

////
இந்த தைவான்ல என் அப்பா பேரோடு என் பெயரை சேர்த்து படித்து கூப்பிடும்போது..மக்கா அவன் கண்கலங்கி நிப்பான்
////
தரண், நல்ல வேளை அவன் கண் கலங்கினான். அமெரிக்காவுலயும் ஐரோப்பாவிலயும் என் பேரைக் கூப்பிட்டதைக் கேட்டு நான் கதறிக் கதறி அழுதேன்! அவ்வப்போது வந்து நம்ம பக்கத்தைப் பாருங்க. எப்பயாச்சும் ஏதாச்சும் எழுதினாலும் எழுதுவேன் :) மிக்க நன்றி.


////
அப்பப்போ நினைச்சுக்குவேன்..இந்த கலைவாணி எல்லாம் தமிழ்மணத்தில் எழுதினா - சும்மா களை கட்டும்...
////
ரவி, எனக்கும் இதேதான் தோணுச்சு! இமெயிலைத் தலைகீழாப் புரட்டிப் பார்த்தும் சரியான வலைப்பதிவைக் கண்டறிய இயலவில்லை. எங்ஙனயாச்சும் பாத்தாக் கொத்திக்கிட்டு வந்துருவம். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி! ஆறு பற்றிய இதைப் படிச்சீங்களா?

யாத்திரீகன் said...

http://tatoonies.blogspot.com/

was Kalai's blog, she had discontinued blogging (atleast at this place i guess).. due to some personal constraints and problems she faced...