Friday, December 02, 2005

வெள்ளிப் பனிமலையின் மீது - 1

பாகம் 1
ஒரு சுகமான மதிய (உணவுக்குப் பின்) வேளையில்தான் இது எல்லாமே இப்படித்தான் ஆரம்பித்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் குழுவே சேர்ந்து ஒரு வேலையை ஒரு நாளைக்கு 16 மணி நேரங்கள் வேலை செய்தால் முடிக்கலாம். அப்படிச் செய்தால் ஒரு சிறந்த பரிசு தரப்படும், என்றார் எங்கள் டேமேஜருக்கு டேமேஜர் (அப்படி என்றால் பெரிய தில்லாலங்கடி என்று கொள்க). இது இல்லை என்றாலே எப்படி வேலை இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. எனவே அபிலாஷ் பெரிசா எங்களை இமயமலைக்கே அனுப்பீருவீகளாக்கும் என்றான். ஏற்கனவே ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்த டேமேஜர் ஸ்கொயரின் முகம் இன்னொரு பல்ப்பும் சேர்த்தது. தானும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இந்த உள்நோக்கங்கள் குறித்து பின்னால் சொல்கிறேன். ஆனால் இன்னும் சில முதுகெலும்புள்ளவர்கள் இதை எதிர்த்தார்கள். சரி என்று ஒரு கூட்டம் போட்டு லட்சத்தீவு, சிங்கப்பூர், குமாரகம் என்று பலவற்றையும் விவாதித்து வழக்கம் போல் பெரியவரின் தீர்ப்பில் இமயமலைக்குப் போவதென்று முடிவெடுத்தோம்.

அடுத்த ஒரு மாதமும் நாங்கள் செய்ததைக் கேள்வியுற்று மிருகவதைத் தடுப்பு மையத்தில் இருந்து கூட ஆட்கள் வந்து பரிதாபத்துடன் பார்த்துச் சென்றனர். சென்னை மொழியில் சொன்னால் “டங்குவாரு அந்தது”. எனக்குள் என்னவோ இது வழக்கமான டேகேஜர் பேச்சுத்தான் என்ற எண்ணம் இருந்தது. அதைப் பொய்யாக்கும் வண்ணம் சுற்றுலாத் திட்ட வரைவுகளை நானே முன்னின்று மேற்கொண்டேன்.

அதாவது ஹைதராபாதில் இருந்து தில்லிக்குப் போய் அங்கிருந்து ஏதாவது ஒரு நதிச் சங்கமத்துக்குப் போய்த் தங்கிக் கொள்வது. அங்கிருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் மட்டும் இமயமலையை ஹெலிகாப்டரில் (இதுக்கு ஒரு தமிழ்ச் சொல் கொடுங்கய்யா) சுற்றி வந்து பார்த்துவிட்டு அப்படியே அக்கம் பக்கத்தில் இருக்கும் ஊர்களுக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம். இதில் தில்லியில் இருந்து போவதற்கும் வருவதற்கும் தலா 4 பேருக்கு இடம் இருந்தது. அதில் திரும்பி வரும் கூட்டத்தில் நானும் ஒருவனாக ஒட்டிக் கொண்டேன்.

தங்கிக் கொள்வதற்கு ருத்ரபிரயாக் என்ற இடத்தைத் தேர்வு செய்தோம். பிரயாக் என்பதற்கு சங்கமம் என்று அர்த்தம். நான் இதற்கு முன்பு வரை கங்கை நதி கங்கோத்ரி என்ற பெரிய பனிக்கட்டியில் (glacier – இதுக்குத் தமிழில் என்னய்யா) இருந்து உருவாகிறது என்று மட்டும்தான் அறிந்திருந்தேன். ஆனால் தேவபிரயாக் என்ற இடத்தில் இருந்துதான் கங்கை என்று அழைக்கப் படுகிறது. மேலும் சில பிரயாக்குகள் கீழே:
தேவபிரயாக் – அலகாநந்தா மற்றும் பாகீரதி நதிகள் இணைந்து கங்கையாக!
ருத்ரபிரயாக் – மந்தாகினி நதி அலகாநந்தாவில் இணைவது
கர்ணபிரயாக் – பிண்டரி நதி அலகாநந்தாவில் இணைவது
நந்தபிரயாக் – நந்தாகினி நதி அலகாநந்தாவில் இணைவது
இதில் இமயமலையில் உருவாகிக் கடைசியாக கங்கையை இணையும் பெரிய நதி யமுனை. இதில் புராண காலத்து சரஸ்வதி நதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த இடம்தான் பிரயாக் என்று புத்தர் காலத்தில் அழைக்கப் பட்டது. அதாவது தனியாகப் பெயர் எதுவும் தேவைப் படாத சங்கமம்! இன்று பிரயாக்கின் புதிய பெயர் அலகாபாத்! இது தவிர பல பிரயாக்குகள் இருப்பதாகப் பின் அறிந்தோம்.

சரி எங்கே விட்டேன்? இமயமலை என்றதும் ஆளுக்கொரு அறிவுரை கொடுத்தார்கள். குளிர்கால உடைகள், அத்தியாவசிய மாத்திரைகள் (மோஷன் சிக்னஸ் இரண்டு பட்டைகள்), கோல்ட் கிரீம் (என் மொகரைக்கட்டை வெந்தே போனது, பேசாமல் குளிரிலேயே இருந்திருக்கலாம்), புகைப்படக் கருவிகள் என்று பலவற்றையும் சேகரித்துக் கொண்டோம். இதில் முக்கியமானது தெர்மல்ஸ் எனப்படும் குளிர்கால உள்ளாடைகள். எல்லா பெருநகரங்களிலும் இப்போது கிடைக்கின்றன. இமய மலைக்குச் செல்ல இவை அத்தியாவசியம்.

ஹைதராபாத் – தில்லி ஜெட் ஏர்வேஸ் வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. உள்ளே நுழையக் காத்திருக்கையில் ஒரு அதிகாரி வந்து பணிவாக நாளைக்குச் செல்ல முடியுமா என்றார். என்னை மட்டுமே குறி வைத்து வருகிறார்களே என்று வடிவேலு மாதிரி கோபம் கொப்பளித்தது. அடக்கிக் கொண்டு ஏன் என்றேன். விமானத்தை ஓவர்லோடு செய்து விட்டோம் (என்னைப் பார்த்தே அப்படிச் சொல்ல என்ன தைரியம்?) அதனால் நீங்கள் தங்கிக் கொண்டால் ஏதோ காசும் நட்சத்திர ஓட்டலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார். நான் லேசாகச் சபலப்பட்டுப் பின் சொர்க்கத்தையே தந்தாலும் மாட்டேன் என்றேன். இறந்து நான்கு நாட்களான ஒரு பல்லியைப் பார்ப்பதைப் போல் பார்த்தார். எனக்கென்ன வந்தது?

ஒரு வழியாக இரவு 11 மணிக்கு தில்லியை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு 12 மணிக்குமேல் இரவு உணவை லைட்டாக (எல்லாம் பயம்தான்) முடித்துக் கொண்டு ரிஷிகேஷ் கிளம்பினோம். காலை ரிஷிகேஷில் குளித்துச் சாப்பிட்டுப் பின் ருத்ரபிரயாக் செல்வதாக எண்ணம். இரவில் சர்தார்ஜி ஓட்டுநர் ஒரு சடன் பிரேக் அடித்தார். திடுக்கிட்டு விழித்தவன் பின் தூங்கவேயில்லை. காரணம், சாலையில் அடுத்த 10 அடி கூடத் தெரியாத அளவு பனிப் பொழிவு. ஆனால் ஓட்டுநர் அசரவேயில்லை – ஜஸ்ட் லைக் தட் 60ல் போய்க் கொண்டிருந்தார். அவரிடம் தயங்கித் தயங்கிப் போய் எப்படி ஓட்டுகிறார் என்று விசாரித்தேன். தானும் ஒரு அரை நிமிடத்துக்குத் தூங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஜோக் அடிக்கிறார் என்று நானே முடிவு செய்து கொண்டு இரவெல்லாம் விழித்திருந்தேன்.

காலை 6 மணிக்கு ரிஷிகேஷை அடைந்தோம். தொலைவே இமயமலை தனது அனைத்து ரகசியங்களையும் உள்ளடக்கிக் கொண்டு எங்களைப் பார்த்துக் கண்ணடித்தது. எனக்கு இமயமலை உலகின் மூன்றாவது நீளமான மலைத் தொடர் என்று தெரியும். ஆனால் 240-330 கி.மி. அகலமான அதன் பிரமாண்டம் பழநி மலையையும் கொடைக்கானலையும் பார்த்திருந்த என்னைத் திகைக்க வைத்தது என்பதில் துளியும் ஐயமில்லை.

காலையில் அங்கேயே குளித்துச் சாப்பிட்டுவிட்டு மெல்லக் கிளம்பினோம். அங்கே முக்கால்வாசி ஓட்டல்கள் அசைவம் விற்பதில்லை. முதலிலேயே ஓட்டுநருக்கும் அவரது உதவியாளருக்கும் “சாய் பீனே கே லியே” ஒரு லம்ப்பான பணத்தைக் கொடுத்துவிட்டதால் அவர்களும் உற்சாகமானார்கள்.
ரிஷிகேஷ் மலை ஏற ஆரம்பித்தவுடன் கண்ணில் பட்ட ஒரு வாசகம் என்னை உலுக்கியது – “ஈஷ்வர் கோ யாத் கரோ – இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள்”. மலை முழுவதும் இப்படிப் பட்ட அதிரடி வாசகங்களை எழுதி வைத்திருக்கின்றனர். ஏனெனில் தப்பித் தவறி ஏதேனும் விழுந்தால் எடுப்பதற்குக் காஷ்மீரில் இருந்து ஹெலிகாப்டர் வர வேண்டுமாம். ஆனால் சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் மறக்கடித்ததது ருத்ரபிரயாக் நோக்கிய அந்த மலைப் பயணம்.

மலை ஏற ஆரம்பித்த சில நேரத்தில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தால் மயக்கம் வந்தது. கீஈஈஈஈஈஈஈஈஈஈஈழே ஒரு சிறு (!) நதி (நம்ம ஆடிக் காலத்துக் காவேரி மாதிரி) ஓடிக் கொண்டிருந்தது. அது என்ன என்றேன். என்னை நேரடியாக எல்கேஜியில் சேர்த்து விடும் யோசனைக்குப் போன ஓட்டுநர் சொன்னார். அது கங்காஜி! நமது சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர் கூட அந்த ஜீவ நதிக்குத் தரும் மதிப்பைக் கண்டு மகிழ்ந்தேன். இப்போது குளிர் காலமாதலால் பனி உறையத் துவங்கி இருப்பதால் தண்ணீர் குறைந்திருந்தது.

ஓட்டுநர் திடீரென்று வண்டியை ஒரு வளைவில் நிறுத்திவிட்டு எங்களை எல்லாம் இறங்கி ஒரு காட்சியைப் பார்க்கச் சொன்னார். அதைப் பார்த்து ஸ்தம்பித்ததில் அதிர்ச்சியில் அடுத்த ஒரு நிமிடத்தில் அனைவரும் ஒன்றுக்குப் போயினர்.


சில படங்கள்
ரிஷிகேஷ் மாலைக் கதிரில்

[IMG]http://i32.photobucket.com/albums/d9/pradeepkt/IMG_0585.jpg[/IMG]

நந்தாதேவி சிகரம்

[IMG]http://i32.photobucket.com/albums/d9/pradeepkt/IMG_0337.jpg[/IMG]

3 comments:

சுல்தான் said...

//நான் லேசாகச் சபலப்பட்டுப் பின் சொர்க்கத்தையே தந்தாலும் மாட்டேன் என்றேன். இறந்து நான்கு நாட்களான ஒரு பல்லியைப் பார்ப்பதைப் போல் பார்த்தார். எனக்கென்ன வந்தது?//
'அ' விலிருந்து 'ஃ' வரை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு 'சரி. இவ்வளவு கேட்டிருக்கிறான். பையன் ஒத்துக் கொள்வான்' என்று நினைத்து அவர் பேசிக்கொண்டிருக்க, முதலில் ஒப்புக்கொள்வது மாதிரி இருந்து விட்டு கடைசியில் 'முடியாது' என்று சொன்னால் செத்த பல்லியை பார்ப்பது போல்தான் பார்க்கத் தோன்றும்.

அந்த உவமை ரொம்ப சூப்பர் சார். நினைத்து நினைத்து சிரித்தேன்.

சயந்தன் said...

//ஹெலிகாப்டரில்//

கேட்டதாலை சொல்லுறன்.. விளக்கமெல்லாம் கேட்கப்படாது..

உலங்கு வானூர்தி

பிரதீப் said...

//கேட்டதாலை சொல்லுறன்.. விளக்கமெல்லாம் கேட்கப்படாது..

உலங்கு வானூர்தி//
ரொம்ப டாங்க்ஸூங்க,
வந்ததுக்கும் தமிழ்ச் சொல்லுக்கும்.
நானும் பெரியவங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன், அடுத்த பாகத்தையும் படிச்சு உங்க கருத்தைச் சொல்லுங்க.