Wednesday, August 08, 2007

53வது தேசிய விருதுகள்

ஒரு வழியாக 53வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் படங்கள் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.

சிறந்த குடும்பப் படமாக சேரனின் "தவமாய்த் தவமிருந்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.


இப்போதுதான் ஆச்சரியம்!!!

சிறந்த ஒளிப்பதிவாளராக "சிருங்காரம்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மது அம்பாட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
சிறந்த இசையமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு இசையமைத்த "லால்குடி" ஜெயராமன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
சிறந்த நடன அமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு நடனம் அமைத்த சரோஜ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை எப்பாடு பட்டாவது பார்த்து விடுவது என்று நான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

சிறந்த குறும்படமாக வசந்த் தூர்தர்ஷனுக்கு இயக்கிய "தக்கையின் மீது நான்கு கண்கள்" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

தவிர அன்னியன் படத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

தமிழின் சிறந்த படமாக "ஆடும் கூத்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

மற்றபடி
சிறந்த படம்: கால்புருஷ் (பெங்காலி)
இந்திரா காந்தி விருது - இயக்குநரின் சிறந்த முதல் படம்: பரினீதா (பிரதீப் சர்க்கார் - இந்தி)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: ரங் தே பசந்தி (இந்தி)
நர்கீஸ்தத் விருது - தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம்: தைவனமதில் (மலையாளம்)
சிறந்த சமூக சிந்தனைத் திரைப்படம்: இக்பால் (இந்தி)
சிறந்த சுற்றுச் சூழல் திரைப்படம்: துத்தூரி (கன்னடம்)
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: ப்ளூ அம்ப்ரல்லா - நீலக்குடை (இந்தி)
சிறந்த இயக்குநர்: ராகுல் தோலக்கியா (பர்சானியா)
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிளாக்−இந்தி)
சிறந்த நடிகை: சரிகா (பர்சானியா − ஆங்கிலம்)
சிறந்த துணை நடிகர்: நஸ்ருதீன் ஷா (இக்பால்)
சிறந்த துணை நடிகை: ஊர்வசி (அச்சுவிண்டே அம்மா - மலையாளம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாய்குமார் (பொம்மலாட்டா - தெலுங்கு)
சிறந்த பின்னணிப் பாடகர்: நரேஷ் ஐயர் (ரங் தே பசந்தி)
சிறந்த பின்னணிப் பாடகி: ஷ்ரேயா கோஷல் (பஹேலி - இந்தி) -- இது இவருக்கு இரண்டாவது விருது
சிறந்த திரைக்கதை: பிரகாஷ் ஜா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி (அபஹரன் - இந்தி)
சிறந்த ஒலிப்பதிவு: நகுல் கம்தே (ரங் தே பசந்தி)
சிறந்த எடிட்டிங்: பி எஸ் பாரதி (ரங் தே பசந்தி)
சிறந்த கலை இயக்குநர்: சி பி மோரே (தாஜ்மகால் - இந்தி)
சிறந்த உடை அமைப்பாளர்: அன்னா சிங் (தாஜ்மகால்) & சபயாச்சி முகர்ஜி (பிளாக்)
சிறந்த பாடலாசிரியர்: பர்கூரு ராமச்சந்திரப்பா (தாயி - கன்னடா)
சிறப்பு விருது: அனுபம் கெர் (மைனே காந்தி கோ நஹி மாரா - இந்தி)

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

Tuesday, July 24, 2007

ஹாரி ஓம்... ஹாரி ஓம்...

ஹூம்... ரொம்ப நாள் கழிச்சு வந்து ஒரு புதுப் பதிவு... அது நம்ம ஹாரி பாட்டரைப் பற்றி என்று நினைக்கையிலேயே புளகாங்கிதப் புன்னகை பூக்கிறேன்.

புத்தகத்தைக் கடந்த மார்ச் மாதமே ப்ரீ புக்கிங் செய்து வைத்திருந்தேன். புத்தகம் வருமுன் கடந்த ஒரு வாரமாகவே நான் தேன் குடித்த நரி போல் திரிந்து கொண்டிருந்தேன். அதே வாரம் ஐந்தாவது பாகப் படம் வேறு வந்து விட்டதா? கள் குடித்த குரங்கிற்குக் கவட்டையில் குளவியும் கொட்டியதைப் போல் ஆகி விட்டிருந்தது (அட என்ன கவிதை...என்ன கவிதை)! வீட்டில் அனைவரும் வேக வேகமாக ஒரு மனநல மருத்துவரைக் காணும் முன் படத்திற்கு அதுவும் ஐமேக்ஸ் 3டி −− முன்பதிவு செய்து வீட்டில் அனைவரும் சென்று பார்த்தோம்.

அன்றிலிருந்து புத்தகம் வரும் நாள் பற்றி தினமும் கற்பனை செய்து கொண்டே இருந்தேன். வீட்டில் புத்தகமே இல்லாமலும் புத்தகம் படிப்பது போல் பாவனையில் இருந்த என்னைப் பார்த்துக் கலவரம் ஏற்படாதது ஆச்சரியமே...

ஒரு வழியாக சனிக்கிழமை ஜூலை 21ம் தேதி வந்து சேர்ந்தது. அதாவது நானே அதைத் தரதர என்று பல கோடி ஹாரி விசிறிகளுடன் இணைந்து இழுத்து வந்திருந்தேன். என்றைக்கும் எட்டு மணிக்குக் கூட எழுந்திருக்காத நான் ஐந்தரை மணிக்குக் குளித்து முழுகிக் கிளம்பி இருந்ததைப் பார்த்து எங்க அம்மா பிளந்த வாயில் அரைக்கிலோ சர்க்கரை போடலாம் :)

ஆறரை மணிக்குக் கடை திறக்கும் என்று போட்டிருந்ததை நம்பி ஆறே காலுக்குப் போயிக் கால் கடுக்கப் பார்த்தால் எனக்கு முன்னால் ஒரு 200 பேர்... வயது வித்தியாசமில்லாமல் ஆறிலிருந்து அறுபது வரை. என்னால் ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் இன்னொரு பக்கம் இவ்வளவு நேரம் ஆகிறதே என்ற துக்கக் கண்ணீர்... ஆக மொத்தம் நான் அழுது கொண்டே அழுகின்றேன்.

ஏதோ பெரிய விழாவைப் போல் ஈ டிவி, CNN IBN கேமிராக்கள் கடை வாசலைத் துளைத்து கொண்டு நின்றன.


ஏதோ காதலர்கள் ஒரு நிமிடம் ஒரு யுகம் என்றெல்லாம் சொல்வார்களே... அதெல்லாமெனக்கு அப்போது மிகச் சாதாரணமாகப் பட்டது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். முதன் முதலில் ஒரு பொடிசு ஆர்வமாகப் புத்தகத்தை வாங்கி வெளியே வந்தவுடன் தன்னுடைய 26-ஐயும் காட்டியது (மீதி ஆறு விழுந்து விட்டது). காத்திருந்த டிவி கேமிராக்காரர்கள் பின் லேடனைப் பார்த்த அமெரிக்க ராணுவத்தினரைப் போல் பாய்ந்து ஓடினார்கள். பொடிசு அரண்டு போய்ப் புத்தகத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு அதன் தந்தையின் பின்புறம் ஒட்டிக் கொண்டது. புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கச் சொல்லி அனைவரும் அதன் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினர். ஒரு வழியாக அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பொடிசு போஸ் கொடுத்த கையோடு என்னைக் கடந்து செல்லும்போது புத்தகத்தின் முதல் வரிகளைச் சத்தம் போட்டுப் படிக்கத் துவங்கியது. யாருக்கும் தெரியாமல் என் ஆத்திரம் தீர ஒரு கிள்ளு கிள்ளி விட்டேன்.

வழக்கம் போல் என் முறை வர ஒரு மணி நேரம் ஆகியது. சரியாக என் வரிசை எண் வரும்போது புதிய பண்டல் பிரிக்க வேண்டி இன்னும் பத்து நிமிடம் இழுத்தடித்தது -- இதை எல்லாம் போக்கிப் புத்தகம் கிடைத்தது. வராது வந்த மாமணி போல் என்றெல்லாம் சொல்கிறார்களே... அது இதற்கு முன் எம்மாத்திரம். அப்புறம் எப்படி வண்டியை ஓட்டி எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எப்படிப் படிக்க ஆரம்பித்தேன் என்பதெல்லாம் நினைவில்லை. அவ்வப்போது வீட்டில் அதை வாங்கு இதைச் செய் என்ற "இக"க் கட்டளைகள் எல்லாம் "பர" உலகத்தில் இருந்த என் காதில் விழ நியாயமில்லை.

புத்தகம் படிக்கும் போதே அங்கங்கு சிரிப்புகளும் மௌனமான அழுகைகளும் பெருமூச்சுகளும் என் உள்ளே முட்டி முட்டி எழுந்தன. ஒரு வழியாகப் படித்து முடிக்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகி விட்டிருந்தது. அதற்குப் பிறகு உள்ளோடிய எண்ணங்களில் ஒரு சில மணி நேரங்கள் பிரமை பிடித்து இருந்தேன்.

வீட்டில் அனைவரும் ஒரு வழியாக நான் படித்து முடித்தது அறிந்தவுடன் அந்தப் புத்தகத்தை என் கையிலிருந்து பிடுங்கி ஒரு மூலையில் வைத்த பின்புதான் பெருமூச்சு விட்டனர். பிறகு வழக்கம் போல் இக வாழ்வின் நிதர்சனங்கள் என்னை ஹாக்வார்ட்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருந்த வேளை மீண்டும் வழக்கம் திரும்பியது.

அன்று இரவு விளக்கைப் போட்டுக் கொண்டு திரிந்த என்னை மீண்டும் பார்த்த எங்க அம்மாவின் பார்வையில் தெரிந்த பீதியை யாராவது முழுவதுமாக விளக்கினால் அவர்களுக்குச் சாகித்ய அகாடமிப் பரிசு நிச்சயம்.

காரணம்...

இப்போது மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பி.கு.: என்றைக்காவது இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும். இப்போது எழுதினால் சில விஷயங்களைச் சொல்லப் போய் ஹாரி வெறியர்கள் ஆட்டோ என்ன ஆட்டம் பாமையே அனுப்புவார்கள் என்பதால் அவர்கள் சொன்னவுடன் போடுகிறேன்.

Tuesday, May 01, 2007

பாட்டு எப்படி? - நான் அவன் இல்லை

பாடல்கள்: பா. விஜய், ???

1974-ல் ஜெமினி நடிக்க பாலசந்தரின் இயக்கத்தில் வந்த சினிமாவின் தழுவல் இந்தப் படம். படமே வெளிவந்தபின் அதுவும் படம் கொஞ்சம் பேசப்பட்டபின் இப்போதுதான் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. எந்தவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தாத படமாக இருந்தது இந்தப் பட்த்தின் பெரிய பலம் என்பேன். ஏனெனில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கேட்கும் போது இந்தப் பாடல்கள் கவர்ச்சியாகத்தான் இருக்கின்றன. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை வைத்து அவர்மீது இருக்கும் மதிப்பை இந்தப் பாடல்கள் காப்பாற்றுகிறது என்றே சொல்வேன்.

1. ஏன் எனக்கு மயக்கம்
பாடியவர்: ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
ஜெயதேவை ஒரு அசத்தல் பாட்டு மூலம் “டிஷ்யூம்”-ல் அறிமுகம் செய்தவர் விஜய்தான். இந்தப் படத்திலும் ஜம்முனு ஒரு பாட்டு கொடுத்திருக்கிறார். மிகச் சாதாரண தாளம் போட வைக்கும் மெட்டு – நடு நடுவே வயலின்கள்! அவ்வளவுதான்! மற்றபடி தெளிவான உச்சரிப்புகளுடன் இந்தப் பாடல் கவர்கிறது.

மதிப்பு: 5

2. காக்க காக்க
பாடியவர்: சாருலதா மணி, மாயா, மேகா, மணி, விஜய் ஆண்டனி
ஒரு கூட்டமே பாடி இருப்பதால் விஜய் குரல் தவிர வேறெதுவும் அடையாளம் தெரியவில்லை. ஆச்சரியம் அனைத்துக் குரல்களும் உச்சரிப்பில் சுத்தம்! நடுவில் குத்துடன் கூடிய கனமான மேற்கத்திய இசை தாளம் போட வைக்கிறது. முதல் முறை கேட்கும்போதே பிடிக்கக் கூடிய பாடல். ஏற்கனவே “நா நா நா நான் அவன் இல்லை” இளசுகளைக் கவர்ந்து விட்டதாகக் கேள்வி.

மதிப்பு: 6


3. மச்சக் கன்னி

பாடியவர்:ஜெயா ராஜகோபாலன், சத்யாலட்சுமி, விஜய் ஆண்டனி
இந்தப் படத்தில் மட்டும் எக்கச்சக்கமான புதுப் பாடகிகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார் விஜய். இதற்கு முன் வந்த பல டப்பாங்குத்துப் பாடல்களைப் போலவே இதிலும் அர்த்தம் புரியாத வார்த்தைகள் அங்கங்கு உண்டு. கொஞ்சம் முன்னேற்றம் இருப்பினும் விஜய் ஆண்டனி எப்போதும் போல் கத்தியால் குத்தியது போலவே பாடுகிறார். இத்தனை இருப்பினும் என்னமோ உள்ளே இழுக்கிறதே, அது என்ன???

மதிப்பு: 6


4. நீ கவிதை

பாடியவர்:கிரிஷ், மேகா
காதல் பாட்டுதான். ஏற்கனவே எங்கேயோ கேட்டது போல் மெட்டு. சொல்ல அப்படி ஒன்றுமில்லை. முக்கல் முனகலைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மதிப்பு: 4


5. ராதா காதல் வராதா
பாடியவர்:பிரசன்னா, மாயா, சங்கீதா ராஜேஸ்வரன், வினயா
ரீமிக்ஸ் காலத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லைன்னா எப்படிங்க? ஆனா அந்த டப்பாங்குத்தையும் கொஞ்சம் சுகமாத்தான் போட்டிருக்காப்புல விஜய். ரீமிக்ஸ்னாலே நடுநடுவில் “look at this” அப்படி இப்படின்னு கத்துறவங்களைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்தாலென்ன?

மதிப்பு: 4


6. தேன் குடிச்ச
பாடியவர்:நரேஷ் ஐயர், தீபா மரியம், விஜய் ஆண்டனி
இந்தப் படத்திலேயே மூன்றாவது குத்துப் பாட்டு. இரண்டாவது ரீமிக்ஸ் பாட்டு! எவ்வளவுதான் தயாரிப்பாளருக்கு மிச்சம் பிடிக்க வேண்டி வந்தாலும் நிறைய பாடல்களைத் தானே பாடுவதை விஜய் குறைப்பது அவருக்கு மட்டுமல்ல, கேட்கும் நமக்கும் அதுதான் நலம்.

மதிப்பு: 4


மொத்தம்: 45%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “கேட்கலின் கேட்காமை நன்று”

Friday, April 20, 2007

ஆ(ற்)று அழகுகள்

வழக்கம் போல இந்த மாதிரி ஆற்றாமைகளைக் கூட ஆறு ஆறாச் சொல்லும் தொடர் பதிவுக்கு நம்மப் பதிவுலகச் சிவமுருகன் கூப்பிட்டுட்டாரு. தலைவர் கூப்பிட்டு நம்ம முடியாதுன்னு வேற சொல்ல முடியுமா என்ன?

அதுனால ஆறு அழகுகள் பற்றி இல்லாத மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்த போது தோன்றியதுதான் இது. இவ்வுலகின் உயிர்களின் தீராத தாகத்தைக் கூடத் தீர்க்கும் வல்லமை கொண்ட நீர்நிலைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சமுத்திரமாக மக்களின் இந்த உணர்வைத் தணிக்கப் பயன்படாது இருக்கின்றன. சில நீர்நிலைகளோ நிலங்களால் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே எவ்வளவு பெரியதாக ஏரி குளம் என்று இருந்தாலும் அவை ஒரு பெரிய சைஸ் குட்டை என்றே கருத வேண்டும். அவ்வகையில் ஆறு என்பது நிலம் கொண்ட நிலத்திற்கும் கடல் கொண்ட நிலத்துக்கும் இயற்கை போட்ட பாலம் என்றே நான் கருதுகிறேன். ஓடும் தண்ணீரே சுகம், சுத்தம்!!! எனவே நான் கண்ட ஆறு ஆறுகள், அவற்றின் அழகுகள் குறித்துச் சொல்ல விழைகிறேன். எந்த ஆற்றுக்கும் அது மக்களுக்கு எத்தனை உபயோகமாயிருக்கிறது என்பதில்தான் ஆன்மா அடங்கி இருக்கிறது. அது தவிர மீதி அழகுகளை மட்டுமே காண்கிறேன் நான்!


1. நயாக்ரா
முதலில் இண்டர்நேஷனல் லெவல்ல ஆரம்பிப்போம். நயாக்ரா நதி அமெரிக்காவின் ஈரி (Erie) ஏரியில் இருந்து கனடாவின் ஒண்டாரியோ ஏரிக்குப் பாய்கிறது. எனக்குத் தெரிந்து ஏரியில் இருந்து ஏரிக்குப் பாயும் நதி இதுவே! ஆறு என்பதற்கு இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புத் தகுதி வேகம். அது இந்நதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது. முதன் முதலில் நயாக்ராவை நேரில் பார்த்த போது என் மனதில் இனம்புரியாத உற்சாகமே துள்ளியது. இதிலிருந்து நான் கண்டது இது.
நயாக்ராவுக்கு வேகம் அழகு!

2. கங்கை
அடுத்து நான் கண்டு வியந்த நதி கங்கை! சென்ற வருடத்தில் ஒரு முறை இமயமலைக்குச் சென்றிருந்த போது கங்கையின் ஆரம்பமான கங்கோத்ரியில் இருந்து ஹரித்வார் வரை ஹெலிகாப்டரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து. மெல்ல ஒரு மலைதேன் கூட்டில் இருந்து வெண்மையான தேனைப் போல் மெல்ல வழிந்து கொண்டிருந்த பேதைப் பருவ கங்கை மெல்ல மெல்ல தன் தங்கைகள் கலக்க கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து ஹரித்வாரில் அலங்காரம் கொண்ட தெரிவைப் பெண்மையாக மாறுவதைக் கண்டேன். முக்கியமாக முடி முதல் அடி வரை எங்கணும் நீரின் தெளிவு காணும் எவரையும் சிலிர்ப்போடு பற்றும் வியப்பு, ஒரு சிலிர்ப்பு!
கங்கைக்கு அழகு தெளிவு!

3. யமுனை
கங்கையின் தங்கை இந்த நங்கை! ஒவ்வொரு கிளை நதியும் கங்கையில் கலக்கும் இடத்திற்கும் ஒரு புராணக் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டு பிரயாகை (கர்ணப் பிரயாகை, தேவப் பிரயாகை) என்று பெயர் சூட்டினர் வடநாட்டார். ஆயின், எந்தப் பெயரும் தேவைப்படாத பிரயாகை யமுனை கங்கையில் அணையும் போதே உருவானது. யமுனை இன்றைய நிலையில் வடநாட்டு அரசியலில் எத்தனை பிரச்சினைகளை உருவாக்கினாலும் தாஜ்மகால் சென்றாலும் யமுனை உங்களைத் தேட வைக்கிறது.
யமுனைக்கு அழகு நீள்வடிவம்!

4. கோதாவரி
அதிகபட்சம் காவிரியின் அகலத்தைக் கண்டிருந்த எனக்கு கோதாவரியைக் கண்டவுடன் திறந்த வாய் மூடவில்லை என்பதில் என்ன ஆச்சரியம். கோதாவரியின் வெறும் 20% நீர் மட்டுமே 3 மாவட்டங்களை எங்கெங்கு காணினும் பசுமை ஆக்கி இருக்கிறது என்றால் அதன் பயன் பற்றிச் சொல்ல வேறென்ன உண்டு. ராஜமுந்திரிக்குள் நுழையும் முன் முதன் முதலில் 3 கிலோமீட்டர் நீளமுள்ள கோதாவரிப் பாலம் உங்கள் கண்களை மட்டுமல்ல உள்ளத்தையும் வெகு சீக்கிரம் கொள்ளை கொள்ளும்.
கோதாவரிக்கு அழகு அகலம்!

5. காவிரி
ஒவ்வொரு முறை திதி கொடுக்கும் போதும் அகண்ட காவிரியில்தான் கொடுப்பது வழக்கம். அன்று சோழ மன்னர்களின் அந்தப்புரங்கள் வரை நீண்டிருந்த காவிரி இன்று இரண்டு மாநிலங்களின் சட்டமன்றங்கள் வரை நீண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. ஒரு பக்கம் சிவசமுத்திரத்தில் பொங்குமாங்கடலாகப் பெருவீழ்வு கொள்ளும் காவிரி இன்னொரு புரத்தில் தஞ்சை தாண்டி ஆடிச் செல்லும் அழகே அழகு. பிறந்த வீட்டில் என்னதான் ஆட்டம் போட்டாலும் புகுந்த வீட்டில் ஒரு பெண் பொறுப்போடு நடந்து கொள்ளும் விதம் எத்தனை பொருத்தம் என்று காவிரியைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். இரண்டு மாநிலங்களிலும் எத்தனை எத்தனையோ புயல்களைக் கிளப்பினாலும் தன் வழியில் அமைதியாகச் செல்லும் காவிரிக்கு எது அழகு?
காவிரிக்கு அழகு அமைதி!

6. வைகை
இண்டர்நேஷனல் லெவலில் ஆரம்பித்துக் கடைசியில் லோக்கல். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா என்ன? வைகை! பேரைச் சொல்லும்போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடும். அந்த மேம்பாலமும் கீழ்ப்பாலமும் ஒரு காலத்தில் தண்ணீர் (நினைவில் நிறுத்துங்கள், நிஜமாகவே தண்ணீர்தான்) ஓடிய நினைவுகளும் என்றென்றும் மறக்காதவை. இன்று வெறும் ஓடுதண்ணீரில் அழகர் ஆற்றில் இறங்கும் அவலமும் என் நெஞ்சை விட்டு அகலாது. இதே வைகையில் வெள்ளம் வந்த போது மேம்பாலத்தில் இருந்து காலைக் கீழே வெள்ளத்தில் விட்டு விளையாடியது கூட நினைவுக்கு வரும். ஹூம் அது ஒரு பெருங்கனவு! சரி, அழகு என்று இன்றைய நிலையில் நான் எதைப் பற்றிச் சொல்லுவேன்? என்றாவது வைகைக் கரையில் அமைந்த ஒரு பூங்காவில் நான் என் பேரனுடன் உல்லாசமாக அமர்ந்திருப்பேன் என்று கனவு மட்டுமே காண்கிறேன்.
வைகைக்கு அழகு வைகைதான்!

என்னமோ சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன். நீங்க படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க மக்கா!

Thursday, April 19, 2007

பாட்டு எப்படி? - பெரியார்

பாடல்கள்: வைரமுத்து

இளையராஜா இசையமைத்திருக்க வேண்டியது ஞான. ராஜசேகரனின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம். அந்தச் சர்ச்சைகள் எல்லாம் ஏற்கனவே எல்லாரும் எக்கச்சக்கமாக அலசி விட்டதால் இந்தப் பாடல்கள் ஸ்பெஷல் எதிர்பார்ப்பைப் பெறுகின்றன. அந்த எதிர்பார்ப்பை இவை நிறைவேற்றி இருக்கின்றனவா என்றால் ஓரளவுக்கு ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயின் பாரதியையும் மோகமுள்ளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கு வந்து விடுகிறது (தவறுதான் இது!) அப்படி ஒப்பு நோக்கையில்தான் இந்தப் பாடல்கள் கொஞ்சம் டல்லடிக்கின்றன. ஆனால் மொத்தமாக நோக்குகையில் நெருப்புத் தெறிக்கும் பாடல் வரிகளின் (வைரமுத்து) முக்கியத்துவம் பளிச்சென்று வெளியே தெரியும்படியாகவே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார் என்பது கண்கூடு. இது ஒரு பெரிய விஷயம், பாராட்டுகள்! தனித்தனியாகவும் பாடல்களைப் பார்த்துவிடுவோமே…

1. பகவான் ஒருநாள்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், சூர்யபிரகாஷ், குருசரண்
“கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ கண்கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?” – இது போன்ற பகுத்தறிவுவாதிகளின் அடிப்படைக் கேள்விகளைக் கவிதை வடிவமாக்கி இருக்கிறார் வைரமுத்து. வரிகளில் சர்ச்சை இருக்கும் அளவு சூடு இல்லாத்து நன்றே. கடைசியில் சீதை ராமர் பற்றிய சர்ச்சையும் உள்ளது. இசையைப் பொறுத்தவரை மொத்தமாக மென்மையான பாடல் இது. வெறும் மிருதங்கம் மட்டுமே பெரும்பான்மையாக வர மதுவின் குரல் உச்சரிப்பில் சுத்தபத்தமாக ஒலிக்கிறது.

மதிப்பு: 5

2. இடை தழுவிக்கொள்ள
பாடியவர்: ப்ரியா சுப்பிரமணியன்
அப்படியே தாளகதியில் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும் பாட்டு. முதல் முறை கேட்கையில் ஏதோ பழைய பாட்டு ரீமிக்ஸ் போல் இருந்தாலும் கேட்கையில் இனிக்கிறது. வரிக்கு வரி வார்த்தை விளையாட்டுதான், இந்தப் பாட்டு முழுவதும். அந்தப் புதுக்குரல் (இதற்கு முன் பரமசிவன் பட்த்தில்தான் பாடினார்) ப்ரியா நன்றாகவே இழைந்திருக்கிறார். ஆனால் பாட்டு முதலில் கேட்கும்போதே “ஓ ரசிக்கும் சீமானே” நினைவுக்கு வருவதுதான் பிரச்சினை.

மதிப்பு: 6

3. கடவுளா… நீ கல்லா…
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், ரோஷிணி, மாணிக்க விநாயகம்
சாட்டையால் அடிக்கும் வரிகள், சிலிர்க்கும் இசை (வீணை, தபலா, வயலின் என ஒரு கனமான பின்னணி இசை), தெளிவான உச்சரிப்பு, இத்தனையும் இருக்கையில் இந்தப் பாட்டு உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்வதில் ஆச்சரியம்தான் என்ன?
“நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?” – இப்படி வரிக்கு வரி பொறி பறக்கிறது பாட்டு முழுவதும். கடைசியில் “வானவில்லில் மட்டும் இங்கே வர்ணபேதம் இருக்கட்டும்” என்று முடிக்கிறார்கள். உணர வேண்டியவர்களுக்கு இதை விடத் தெளிவான பாடந்தான் எது?

மதிப்பு: 6

4. தை… தை… தை…
பாடியவர்: விஜயலட்சுமி, மாணிக்க விநாயகம்
நல்ல கர்நாடக இசைப் பின்புலத்தில் தேவதாசிகளின் (?!) வாழ்க்கை முறை சொல்லும் பாட்டு இது. ஏற்கனவே பலமுறை கேட்ட கருத்துகள். ஆனால் அவற்றைப் பாடல் வடிவமாக்கி இருப்பது சிறப்பு. விஜயலட்சுமியின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. ஜதிகளை மாணிக்க விநாயகம் குரலில் கேட்க அத்தனை சுகமாயில்லை.

மதிப்பு: 4

5. தாயும் யாரோ

பாடியவர்: ஜேசுதாஸ்
ராம் படத்திற்குப் பிறகு ஜேசுதாஸின் மயக்கும் குரலில் அடுத்த பாட்டு. இன்னும் பிசிறடிக்கவில்லை. எனவே இன்னும் சில வருடங்கள் பாடலாம். ஏற்கனவே சில பாடல்களை இதே படத்தில் மென்மையாகவே கேட்ட பிறகும் நன்றாகவே இருக்கிறது. வித்யாசாகரின் தாலாட்டு மெட்டு (கந்தா கந்தா.. ஜோ ஜோ கந்தா…) நிஜமாகவே தாலாட்டுகிறதே! வரிகளில் ஒன்றும் அத்தனை விசேஷமில்லை.
மதிப்பு: 5

மொத்தம்: 52%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

Tuesday, April 17, 2007

பாட்டு எப்படி? - உன்னாலே உன்னாலே

ஜீவாவும் ஹாரிஸ் ஜெயராஜூம் 12பி, உள்ளம் கேட்குமே படங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அருமையான கூட்டணி. ஜீவாவை ஒரு பெரிய இயக்குநர் வரிசையில் இன்னும் சேர்க்கும்படியான படங்கள் வரவில்லை. ஆனால் ஹாரிஸ் பல கட்டங்களை ஏற்கனவே தாண்டி விட்டார். ஜீவாவுக்கு ஒளிப்பதிவும் பாடல்களைப் படமாக்கும் வித்தையும் கைவந்த கலை! ஹாரிஸ் அதற்குக் கச்சிதமாகக் கைகோர்த்திருக்கிறார். இந்த வருடச் சிறந்த பாடல்களில் இவற்றில் சில இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. பாடல்களைக் கவிஞர் வாலியும் பா. விஜய்யும் எழுதி இருக்கிறார்கள். எந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியாமையால் சொல்லவில்லை. ரொம்ப எளிமையாகத் தாளம் போட வைக்கும் பாடல்கள் நிலைக்கும் என்று தெரிந்துதான் செயல்பட்டிருக்கிறார் ஹாரிஸ்.

1. ஹலோ மிஸ் இம்சையே

பாடியவர்: ஜி. வி. பிரகாஷ், அனுஷ்கா
ஹாரிஸின் இசையில் ஏற்கனவே பாடி இருந்தாலும் இசை அமைப்பாளர் ஆன பிறகு பிரகாஷ் பாடி இருக்கும் பாடல். ஹாரிஸ் டிரேட் மார்க் பாட்டு. அனுஷ்காவின் குரலை யுவன் உபயோகித்ததைப் பார்த்துப் பாடம் கற்றிருக்கிறார் ஹாரிஸ். ஆனால் பாட்டு ஏற்கனவே பல தடவை கேட்ட மாதிரியே இருப்பதுதான் பிரச்சினை. “அம்மான் மகளே” சில முறை கேட்டாலே பிடித்துப் போவாள்

மதிப்பு: 5


2. இளமை உல்லாசம்

பாடியவர்: கிரிஷ், ஷாலினி
சின்னப் பாட்டு. வாத்தியக் கருவிகளின் சத்தங்களைக் குறைத்து வார்த்தைகளுக்கும் குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கேட்கும்படியான இசையில் கேட்கும்படியான வரிகள். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

மதிப்பு: 6


3. ஜூன் போனா

பாடியவர்: கிரிஷ், அருண்
புதிய பாடகர்கள். இளமையான வரிகள். முன்பு சொன்னது போல் மெல்லிய பீட்டு. மெட்டுக்கே முக்கியத்துவம்! “நட்பாச்சு லவ்வில்லையே… லவ்வாச்சு நட்பில்லையே” என்பதோடு “இந்த உலகத்தில் எவனுமே ராமனில்லை” கவிஞர் – உண்மைதான்! சில முறை கேட்டவுடனேயே முணுமுணுக்க வைக்கும் வரிகளும் தாளம் போட வைக்கும் பின்னணி இசையும் பாடலுக்குப் பலம்.

மதிப்பு: 6


4. முதல் நாள் இன்று

பாடியவர்: கே கே, மகாலட்சுமி, ஷாலினி
கே கேயும் மகாலட்சுமியும் இதற்கு முன் ஹாரிஸ் 12பி படத்திலும் ஒரு ஜில்லுப் பாட்டு பாடி இருக்கிறார்கள். இந்தப் பாட்டும் மேற்சொன்ன சூத்திரத்தில்தான் அடங்குகிறது. தாளம் போட வைக்கும் டிரம்ஸ் ஒலி, லேசாகவே குரல்களோடு வரும் கிடார் இசை! நல்ல பாட்டு!

மதிப்பு: 6


5. முதல் முதலாக (உன்னாலே உன்னாலே)

பாடியவர்: கார்த்திக், கிரிஷ், ஹரிணி
ஹ்ம்ம்… ஹாரிஸ் ராஜ்ஜியம் இங்கே உச்சம். அவரது மிகப் பலம் பொருந்திய மெட்டு. கிரிஷின் குரல் மட்டும் கார்த்திக்கின் கம்பீரத்துக்கு (ப ப ப ப… ன்னு கலக்குறார் பாருங்க…) முன் லேசாகப் பெண்குரல் போல் ஒலிக்கிறது – நெருடல்! ஆனால் ஹரிணியின் குரலைச் சிறப்பாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் ஹாரிஸுக்கு முதலிடம்! வரிகளும் சுகமோ சுகம்! கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

மதிப்பு: 7


6. வைகாசி நிலவே

பாடியவர்: ஹரிசரண், மதுஸ்ரீ
ஒரு முறை கேட்டால் போதும்… உங்கள் மனதில் நச்சக்கென்று சம்மணம் கட்டி உட்கார்ந்து கொள்ளும் திறன் இந்தப் பாட்டுக்கு உண்டு. பாட்டு தொடங்கியதில் இருந்து முடியும் வரை அந்தக் கிறக்கம் தொடர்கிறது என்றால் அது “உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல”. “மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன” – என்ன கற்பனை!!! “மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராது” – அட அட!!! ஹரிசரணின் முன்னேற்றம் வியக்க வைக்கையில் இன்னும் மதுஸ்ரீ உச்சரிப்பில் மேம்படுவது அவசியம்!

மதிப்பு: 7


மொத்தம்: 62%

மதிப்பும் விளக்கமும்:

7 - 10: “இது பாட்டு”

6: “சூப்பர்”

5: “அட ... நல்லாருக்கே!”

4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”

0-3: “சுத்த திராபை”

Monday, April 16, 2007

பாட்டு எப்படி? - மாயக்கண்ணாடி

சேரனின் “தேசிய கீதம்” (இந்தப் பட்த்திற்கு வந்த எதிர்ப்பு நினைவிருக்கிறதா) பட்த்துக்குப் பிறகு மாயக்கண்ணாடியில் இளையராஜா இணைந்திருக்கிறார்! நல்ல இயக்குநர், நல்ல இசையமைப்பாளர் இருவரும் இணைகையில் நல்ல பாடல்களன்றி வேறென்ன வர இயலும்? ஆனால் இருவருக்குள்ளும் ஓடும் ஒத்த நினைவுகள் மட்டுமே காலத்தால் அழியாத கானங்களைத் தர முடியும். இந்தப் பட்த்தில் பாடல்கள் மோசம் என்று சொல்ல முடியவில்லைதான். ஆனால் 80-90களில் இசைஞானியின் பாடல்களில் இருந்த ஈர்ப்பைத் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எப்படியும் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருப்பார் என்று நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

1. காதல் இன்று இப்போது
பாடியவர்:இளையராஜா
இன்றைய காதலின் நிதர்சனத்தைச் சொல்லும் பாடல் இது. 80களில் வந்த எளிய இசை பாடலின் தரத்தைக் கூட்டுகிறது என்றால் இன்றைய காதலர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன பாடல் வரிகள். இன்று உண்மைக் காதல் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் கவிஞர்.

மதிப்பு: 5


2. காசு கையில் இல்லாட்டா
பாடியவர்:இளையராஜா
முதல் பாடல் காதல் நிலவரத்தைப் பேச இது காசு நிலவரத்தைப் பேசுகிறது. பாடும் குரலும் உச்சரிப்பும் மட்டுமே முக்கியத்துவம் பெறும் மெட்டு இது. எளிய தபலாவும் இடையில் அங்கங்கு புல்லாங்குழலும் வர, வரிகளில் மின்னுகிறது பாட்டு. “பட்டுப் பட்டுப் படிச்சவந்தான் மற்றவர்க்குப் பாடமாகிறான்” – உண்மை இது.

மதிப்பு: 5


3. கொஞ்சம் கொஞ்சம்
பாடியவர்:கார்த்திக், ஷ்ரேயா கோஷல்
பாட்டு தொடங்கும் போது இளையராஜா “பேசிக் லவ் ஃபீல் இருந்த்தென்றால் போதும்?” என்று கேட்டுக் கொள்கிறார். சேரன் ஆமென்றதும் வரும் பாட்டில் அது இருக்கிறது. இதுவும் 90களின் மெட்டுதான். ஒரே ஒரு பீட்டு பின்னால் வர மெட்டு மட்டுமே முக்கியத்துவம் பெறும் பாட்டு கார்த்திக்கின் கம்பீரமான குரலினாலும் ஷ்ரேயாவின் இனிய உச்சரிப்பினாலும் பலம் பெறுகிறது.

மதிப்பு: 6


4. ஒரு மாயாலோகம்
பாடியவர்:திப்பு, மஞ்சரி
இதுவும் நிறைய வாத்தியக் கருவிகள் வைத்து மெட்டைச் சுகமாக்க வைக்கப் பட்ட முயற்சி. ஆனால் அவ்வளவு சுகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் கேட்டால் பிடிக்கலாம்.

மதிப்பு: 4


5. ஓ! ஏலே எங்கே வந்தே
பாடியவர்: இளையராஜா
இந்தப் பாட்டு பட்த்துக்கு எவ்வளவு முக்கியம் என்று பட்த்தைப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். இவ்வளவு ஹை பிட்ச் பாடல்களை ஏற்கனவே இளையராஜா பாடி இருந்தாலும் இனிமேல் மற்றவர்களிடம் கொடுத்து விடுதல் நலம். ஆனா நடுவில் வரும் வசன உச்சரிப்பு.. ஹா! இது அவருக்கே உரியது!!!

மதிப்பு: 4


5. உலகிலே அழகி
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ், நந்திதா
இந்தப் பாட்டு இளையராஜா ஸ்பெஷல். அங்கங்கு “அது ஒரு கனாக்காலம்” என்று நினைக்கத் தோன்றும் பாட்டு இது. இளையராஜாவின் மெலடி மெட்டு என்றாலே ஒரு தனித்தன்மை இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். சரணத்தில் குரல்களோடு வயலின்கள் தொடர்ந்து வருவதைக் கொஞ்சம் கேளுங்கள். சின்ன விஷயம் கூட எப்படிப் பாட்டு அமைப்பை மாற்றும் என்று தெரிய வரும்.

மதிப்பு: 6

மொத்தம்: 50%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

Tuesday, April 10, 2007

பாட்டு எப்படி? - சென்னை 600028

கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசைக்க, ஒரு மாதிரி “குடும்ப்ப்” படம் இது. யுவன் சமீப காலமாகப் பட்டை கிளப்பும் வேகத்துக்கு இந்தப் படமும் ஒரு உந்தியாகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு புதிய சோதனையும் பாடல்களில் இல்லை. அதுவே ஒரு வெற்றியும் கூட!

1. நட்புக்குள்ளே

பாடியவர்:யுவன்
பாடல்: யுவன்???.
குட்டியாய் ஒரு பிட்டுப் பாட்டு. மெல்லிய மெலடி தாலாட்டுது. யுவனின் குரல் “பொய் சொல்ல” (ஏப்ரல் மாத்த்தில்) காலத்தில் இருந்து ஒரே மாதிரி இருக்குதே! நட்புப் பாட்டு -- காதல் பிரிவை விட நட்புப் பிரிவு வலி தரும் என்கிறது. இந்த்த் தளம் http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.9036/ இந்தப் பாட்டை எழுதியவர் யுவன் என்கிறது. என்னால் நம்ப முடியவில்லை.

மதிப்பு: 3

2. ஓ! ஓ! என்னென்னமோ

பாடியவர்:அனுஷ்கா
பாடல்: வாலி

அனுஷ்கா மீது அப்ப்டி என்ன நம்பிக்கையோ தெரியவில்லை. தீப்பிடித்த்துக்கு அப்புறம் பல தடவை யுவன் இசையில் பாடி விட்டார். உடம்பை “உடும்பாக்கி” இவர் படுத்தும் பாட்டில் தமிழன்னை டெல்லிக்கே ஓடுகிறாள். இதை எழுதுவதற்கு வாலி அவசியமா? ஆனால் பாட்டு மெட்டில் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. முக்கலும் முனகலும் இல்லாமல் இருந்தாலே இன்னும் சுகம் கூடியிருக்கும்.

மதிப்பு: 3

3. உன் பார்வை மேலே

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ்
பாடல்: வாலி
இதுவும் ஒரு மெலடியே. சின்னச் சின்ன பீட்டுகளுக்கு நடுநடுவே மேற்கத்திய இசை வடிவங்கள்! இது யுவனுக்குப் பழக்கமானதுதான். கேட்க்க் கேட்கப் பிடித்துப் போகும் மெட்டு இது. வாலியின் வரிகள் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

மதிப்பு: 5

4. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ஹரிசரண், ரஞ்சித், கார்த்திக், பிரேம்ஜி, திப்பு
பாடல்: கங்கை அமரன்
ரொம்ப நாளைக்கப்புறம் கங்கை அமரன் மகன் பட்த்தில் பாட்டு எழுத வந்து விட்டார். கானா மெட்டில் தாளம் போட வைக்கும் மேற்கத்திய இசையை உள் நுழைக்கும் முயற்சி. பரவாயில்லை.

மதிப்பு: 4

5. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ‘கானா’ பழனி, ‘கானா’ உலகநாதன், கருணாஸ், பிரேம்ஜி,சபேஷ்
பாடல்: கங்கை அமரன்

ஒரே மெட்டு என்பதால் மேற்கண்ட கருத்துகள் இதற்கும் செல்லுபடியாகும். ஆயின், சரியான கானா மெட்டு என்பதால் இதைப் பாடியவர்களுக்குச் சாலப் பொருத்தம்.

மதிப்பு: 4

6. வேர்ல்டு கப்பு ஜெயிக்க

பாடியவர்: யுவன், டி ஜே ஃபங்க்கி சத்யா
பாடல்: வாலி
நம்ம வேர்ல்டு கப்புக் கனவுகளே கானலாப் போனதுக்கப்புறம் சென்னை 28-ல் இருந்து கூட வேர்ல்டு கப்பு வெளையாடப் போகலாம். இந்தப் பாட்டில் இயல்பாகவே உள்ள துள்ளல் எல்லாரையும் தொற்றும். வாலியின் வரிகளில் வீடு தோறும் ச்ச்சின் திராவிட்டைத் தேடுகிறார்கள். யுவனுக்கு ஏற்ற பாடல் இது. ஆனால் ஏன் எப்போது பார்த்தாலும் யாரோ கத்தியால் குத்தியது போன்றே பாடுகிறார் என்றுதான் புரியவில்லை.

மதிப்பு: 5

7. யாரோ யாருக்குள் (நட்பு)

பாடியவர்: எஸ் பி சரண், வெங்கட் பிரபு
பாடல்: வாலி
ஹ்ம்ம்… ஒன்றுமே தேறாதோ என்ற வேளையில் வராது வந்த மாமணியாய் இந்தப் பாட்டு. நட்பின் பெருமையைப் பிற பாடல்கள் போலேதான் இதுவும் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் தாளம் போட வைக்கும் பின்னணி இசை யுவனின் இருப்பைக் கட்டியம் கூறுகிறது. சரணுக்கு சிறப்புப் பாராட்டுகள்.

மதிப்பு: 7

8. யாரோ யாருக்குள் (காதல்)

பாடியவர்: சித்ரா, எஸ் பி பாலசுப்பிரமணியம்
பாடல்: வாலி
அனேகமாகத் தமிழில் சித்ரா யுவனுக்குப் பாடிய முதல் பாடல் இதுதான். பாலசுப்பிரமணியத்துக்கும் சித்ராவுக்கும் அனுபவம் துணை கொடுக்கப் பின்னணியில் யுவனின் வயலின்கள் சிறக்க, வாலியின் வரிகள் காற்றில் கரையும் கற்பூரம் போல் இல்லை காதல் என்கின்றன. உண்மை! இந்தப் பாட்டும் அப்படித்தான். இது ஒரு இனிய அனுபவம்.

மதிப்பு: 7

மொத்தம்: 48%

பாட்டு எப்படி? - சிவாஜி

ஷங்கர் இல்லாமல் ரகுமான் வெல்ல முடியும் என்று வெகு நாட்களுக்கு முன்பே நிரூபித்திருந்தார். அதே போல் ரகுமான் இல்லாமலும் ஷங்கர் வெல்ல முடியும் என்று “அன்னியன்” நிரூபித்து விட்டது. இந்நிலையில் ரஜினி-ஷங்கர்-ரகுமான்-ஏ வி எம் என ஒரு மெகா கூட்டணிப் படம் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. இதற்கு முன் ரஜினி படங்களுக்கு ரகுமான் இசையமைத்தபோது பாடல்கள் ஹிட் ஆனாலும் ஒரு சிறு குறை இருந்து கொண்டே இருந்த்து. அது இப்போது நிவர்த்தி செய்யப் படுமா என்ற கேள்வி எழுகிறது. மொத்த்தில் யார் படமென்ற கேள்வி இல்லாமல் ஷங்கர் இயக்கும் ரஜினி பட்த்தில் ரகுமான் பாடல்கள் எப்படி என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருந்த்து. அது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்

1. தீம் இசை
முதலில் கேட்ட்து இதைத்தான். இதை வைத்துப் படம் பப்படம் என்ற முடிவுக்கே வந்திருந்தேன்.
மதிப்பு: 3

2. வாடா வாடா
பாடியவர்:பிளாஸி, நரேஷ் ஐயர், ரக்வீப் ஆலம்.
பாடல்: நா. முத்துக்குமார், பிளாஸி (ஆங்கிலம்)
தீம் இசை பாடாவதியாக இருந்த்தாலோ என்னவோ புதிதாக ஒரு தீம் பாடலைப் போட்டிருக்கிறார் ரகுமான். பாடல் முழுவதும் பஞ்சு (அதாங்க பஞ்ச்) பறக்கிறது. பிளாஸியின் வார்த்தைகளும் நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் பஞ்சு பஞ்சாய்ப் பறக்கின்றன! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல ஒரு மண்ணும் இல்லை!

மதிப்பு: 4

3. சூரியனும் சந்திரனும்

பாடியவர்: பாலசுப்பிரமணியம், ரெஹானா, பென்னி.
பாடல்: நா. முத்துக்குமார்
பாலசுப்பிரமணியத்துக்கு அல்வா சாப்பிடும் பாடல். சும்மா ஹை பிட்சில் பின்னி எடுக்கிறார். ரஜினியின் அறிமுகப் பாடலாக இதுதான் இருக்க வேண்டும். ஷங்கரின் பிரம்மாண்ட்த்தை இப்போதே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நா. முத்துக்குமாரின் வார்த்தை ஜாலம் கலக்க, சும்மா பீட்டுகளில் பெண்டு எடுத்திருக்கிறார் ரகுமான்! ரெஹானாவை இனிப் பாடாமல் அல்ல பேசாமல் கூட இருக்கச் சொல்வது நலம். இப்பவும் எப்பவும் பல்லேலக்கா!

மதிப்பு: 6

4. வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பாடியவர்: ஹரிஹரன், மதுஸ்ரீ
பாடல்: வைரமுத்து
இதுவும் ஒரு மெல்லிய பீட்டுப் பாட்டு. ரகுமான் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வயலின்களையும் டிரம்ஸையும் வைத்துப் பாட்டு முழுக்க வித்தை காட்டுகிறார். ஹரிஹரனைப் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. மதுஸ்ரீயின் உச்சரிப்பு நாளுக்கு நாள் மேற்படுவது குறித்து மகிழ்ச்சி!
ஆம்பல், மௌவல் – எனச் சங்க காலப் பூக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார் வைரமுத்து. அத்தோடு “பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்” என்கிறார். அது ரஜினிக்கு மற்றவர்களிடம் இல்லையா என்ன?
மதிப்பு: 6

5. சஹானா சாரல்
பாடியவர்:உதித் நாராயண், சின்மயி
பாடல்: வைரமுத்து.
ஒரு பாட்டு நச்சக்கென்று மனதில் போய்த் தைப்பதற்கு பல்லவியின் மெட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பாடலின் பல்லவி சும்மா ஒற்றைக் கம்பிப் பத்த்தில் வழியும் தேனைப் போல் இருக்கையில் நெஞ்சில் தங்க வலிக்கிறதா என்ன? நடுவில் வரும் ரகுமானின் ஜதி இன்னொரு சுகம். என் தினம் சில காலம் இப்பாடலில் துவங்கும். உதித்துக்குத் தமிழை “உதிர்த்த நாராயண்” என்று ஒரு பெரும் பெயர் உண்டு. அதைப் போக்க சின்மயியுடன் இணைந்து தவம் இயற்றி இருக்கிறார். ஓராயிரம் ஆண்டுகள் சேமித்து நூறாயிரம் ஆண்டுகள் வாழும் காதல் என வழக்கம் போல் உயர்வு நவிற்சியில் விளையாடி இருக்கிறார் வைரமுத்து. இத்திரையின் சிறந்த பாடல் இது!
மதிப்பு: 7

6. அதிரடிக் காலம்
பாடியவர்:ரகுமான், சயனோரா.
பாடல்: வாலி.
ஒரு ஹீரோயிசப் பாட்டுக்குத் தேவையான எல்லாமே குறைவரக் கிடைக்கும் பாடல் இது. பல்லேலக்காவும் இதுவும்தான் முதலில் இளசுகளின் நெஞ்சைத் தைக்கப் போகின்றன. ரகுமானுக்கு ஸ்பெஷாலிட்டியான ஹை பிட்ச் பாட்டு. ஆனாலும் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே, அதான் பிரச்சினை!
“இவன் பில்லா ரங்கா பாட்ஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்” – வரிகள் சொல்லவில்லையா வாலியென்று?!
மதிப்பு: 6

6. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்:ராக்ஸ், தன்வி, பிளாஸி, சுரேஷ் பீட்டர்ஸ்.
பாடல்: பா. விஜய்.
பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும் கலந்து கட்டும் இந்தப் பாட்டு ரகுமானின் ஆரம்பகால இஸ்டைல்… இன்று கேட்கும் போது என்னமோ உறுத்துகிறது. சுரேஷ் பீட்டர்ஸ் எங்கே போனார் இத்தனை நாட்களாக? என் கணிப்பு சரியாக இருக்குமானால் ரஜினி ராம்ப் வாக் போகத்தான் இந்தப் பாட்டு சரிப்படும்!
வித்தக்க் கவிஞர் இப்போதெல்லாம் ஆங்கில வித்தைதான் காட்டுகிறார். இப்பாடலில் எத்தனை தமிழ் வார்த்தைகள் என்று சொல்வோருக்கு (நடிகர் திலகம்) சிவாஜி போட்ட கோட்டு பரிசு! முதல்ல வார்த்தைகள் எங்கே என்று லேட்டரலாக்க் கேள்வி கேட்பவருக்கு முதல் பரிசு!
மதிப்பு: 4

7. சஹாரா பூக்கள்
பாடியவர்:விஜய் ஜேசுதாஸ், கோமதிஸ்ரீ.
பாடல்: வைரமுத்து.
ஜம்முன்னு ஒரு பாட்டு ரகுமான் போட்டவுடன் ஷங்கருக்கு மனதில் மின்னலடித்து இன்னொரு வெர்ஷன் வாங்கி வைத்துவிட்டார்! இதற்கு முந்திய உதாரணம் – குறுக்குச் சிறுத்தவளே. எவ்வித்த்திலும் சோடை போகாத பாட்டு இது. விஜய் அருமையாகப் பாடி இருக்கிறார். முன்பெல்லாம் கல்யாணி மேன்ன் (குலுவாலிலே, அலைபாயுதே) பாடிக் கொண்டிருந்த பிட்டுகளை இப்போது புதிதாக கோமதிஸ்ரீ பாடுகிறார். நன்றாகவே இருக்கிறது.
மதிப்பு: 7

மொத்தம்: 53%

Wednesday, February 28, 2007

சிதம்பர ஜாலம் - பலிக்கவில்லை

நிதிநிலை அறிக்கையை முழுமையாகக் கண்டேன். ரசித்தேன்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்திய மூன்று தேர்தல்களில் இரண்டில் காங்கிரஸை மண் கவ்வ வைத்த ஜோரில் தயாராக இருந்தார்கள். அத்தோடு குவாத்ரோச்சி வேறு அவர்களுக்கு ரகசிய உற்சாகம் அளித்து வந்தாரல்லவா? அவ்வப்போது அந்த உற்சாகம் சத்தமாக வெடித்து சபாநாயகர் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அதட்டலாகவும் அடக்க வேண்டி வந்தது. சோனியாவும் மன்மோகனும் அதைவிடப் பெரிய ஆச்சரியமாக அத்வானியும் வாய்மூடி மௌனிகளாக நிதிநிலை அறிக்கை முழுவதும் இருந்தனர். வாஜ்பாயைக் காணவில்லை.

ஆயிரங்கோடிக்கணக்கில் வரி போட்டார், ஆயிரங்கோடிக்கணக்கில் வரி எடுத்தார் ... அதற்கெல்லாம் அசராத பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாய் மற்றும் பூனை உணவுகளுக்கு வரிவிலக்கு என்றதும் கொதித்து எழுந்தார்கள். எப்போதுமே இப்படி ஒரு அஸ்திரத்தை வைத்து அவர்களைத் திசை திருப்புவதை சிதம்பரம் ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம் அவ்வப்போது ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து எழுந்த கூச்சல்களை சும்மா "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்" என்று சிதம்பரமே அடக்கினார். சோனியா மர்மமான புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தார்.

பட்ஜெட்டில் மாதச் சம்பளம் வாங்குவோருக்குப் பெரிய மாற்றமில்லை. ஒரு பக்கம் 1000 ரூ. வரிவிலக்கு அளித்துவிட்டு இன்னொரு பக்கம் 1% அதிக சர்சார்ஜ் ஏற்றி விட்டார் சிதம்பரம். இந்த 1% உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கானது என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலர் கல்விக்கான 2% இன்னும் தொடரும். இதை யாராலும் மறுத்துப் பேச இயலாது. எப்படிப் பார்த்தாலும் உங்கள் வரி ஒரு பைசா கூடக் குறையாது. அதிகரிக்க மட்டுமே செய்யும்.

விவசாய அறிவிப்புகள் தவிர சிதம்பரத்தின் முழு நோக்கமும் விலைவாசி மற்றும் பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் மட்டுமே இருந்தது. பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பால் எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தை ஈடு கட்டக் கூட ஒரு சிறு திட்டம் வைத்திருக்கிறார். தேயிலை, காப்பி மற்றும் தென்னை மறுபயிருக்கு வேறு வரிவிலக்கு அளித்திருக்கிறார்.

வாட் வரிகளும் பல பொருட்களுக்குக் குறைக்கப் பட்டு இருக்கின்றன.

தொலைத் தொடர்பு வரிகளை ஒருமுகப் படுத்த ஒரு திட்டத்தைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் அளிக்கும்.சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி (ITI) களுக்கு சிறப்புச் சலுகைகளும் இரண்டு வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு (அதில் ஒன்று கோவையில்) சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியும் அளித்திருக்கிறார்.

எனக்கு அனைத்து அம்சங்களிலும் மிகப் பிடித்தது ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு. எந்த ஒரு ஊனமுற்றோருக்கு நிரந்தர வேலை அளிக்கும் நிறுவனத்திற்கும் பரிசாக நிறுவனத்தின் சார்பாக அவருக்கு அளிக்க வேண்டிய நிரந்தர வைப்பு நிதியை மூன்று வருடங்களுக்கு அரசாங்கமே அளிக்கும் என்றார். அதிலும் சிறப்பு இது மாதம் ரூ. 25000 சம்பாதிப்பவர் வரைக்கும் பொருந்தும்... யாரும் ஏமாற்றாத வகையில் பயந்தரும் நல்ல திட்டம். வாழ்க!


ராணுவ நிதியாக 96000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பாஜக வாய் அடைக்கப் பட்டிருக்கிறது.

மற்றவை எல்லாம் ஒன்றும் அவ்வளவு பெரிதாகச் சொல்லக் கூடிய ஒன்றுமில்லை. பங்குச்சந்தை காலங்கார்த்தாலேயே 500 புள்ளிகள் கம்மியாகத் தொடங்கியது. சேவை வரி வலை பெரிதாக்கப் பட்டதும் பெரிதாக வரிச் சலுகைகள் இல்லாமல் போனதும் தலைகீழாக ஆக்கி விட்டன. கடைசியாகப் பார்த்தபோது ஒரு 350 புள்ளிகள் டைவ் அடித்திருந்தது.

Tuesday, December 05, 2006

வென்னித் தண்ணி வைக்கிறது எப்பிடி?

முதல்ல வென்னித் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வென்னித் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...

இந்த வென்னித் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வென்னித் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வென்னித் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது. எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வென்னித் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வென்னித் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வென்னி வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வென்னியில் “குடிக்கிற சூடு”, “கொதிக்கிற சூடு”, “ஆவி” அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.முதல்ல வென்னித் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.

சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வென்னித் தண்ணி இருக்குறது “குடிக்கிற சூடு”! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது “கொதிக்கிற சூடு” எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா “அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்”. இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வென்னி ஆவி பிடிக்க ஏற்றது, “ஆவி” என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.

கடைசியாச் சொல்ல வந்தது வென்னிய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வென்னிய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.

அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வென்னித் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?

Wednesday, November 29, 2006

சிவப்பதிகாரம் - தலையெழுத்து

ரொம்ப நாள் கழிச்சு பெங்களூர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமேன்னு நினைச்சோம். அங்ஙன புடிச்சுதுய்யா காலச் சனி. கொள்ளக் காசு குடுத்து அந்தா இந்தான்னு கஷ்டப்பாடு பட்டு நம்ம நண்பர் செல்வன் சீட்டு வாங்கிப்பிட்டாரு. நல்லாத் தின்னுப்புட்டு எல்லாருமா போயி ஒக்காந்துட்டோம். முதல்ல இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கான விவரணப் படம் ஒண்ணு ஓடுச்சு. சரி, ரொம்ப நாளாயிப்போச்சு, இந்த மத்தியத் திரைப்படக் கழகத்துல இருந்து திரையரங்குகளில் இதைப் போடச் சொல்லிருக்காக போலன்னு நினைச்சோம். அதிலயும் பெங்களூர் தியேட்டர்ல எதுக்கு தமிழில போடுறான்னு யோசிக்கலை... நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே! சரி விஷயத்துக்கு வருவோம். அதுதேன் படத்தின் ஆரம்பம்.

நாட்டுக்கு நல்லது நடக்க (?!) புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்!) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு! நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக! அப்புறம் என்ன? சின்ன ரோல்ல வந்த மணிவண்ணனும் (நல்ல வேளை) சில பல மாணவர்களும் கொல்லப் படுறாக. வேற வழியில்லாம பாரதிதாசன் பாட்டைப் பாடிக்கிட்டே ரமணா ஸ்டைல்ல விஷால் வரிசையாக் கொலை பண்றாரு. அப்புறம் அட்வைஸ் பண்றாரு (இதுக்குப் பதிலா கொலை தேவலாங்கறீங்களா? அதுவுஞ் சரிதேன்) அப்புறம் “ஏதாச்சும் பண்ணனும்”னு (இதுக்கு அப்புறம் வரேன்) படத்தை முடிச்சுப்புடுறாக!

விஷால் ஹீரோவா சண்டைக் காட்சிகளில் ஓகேதான்! ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் மசோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு! அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்)! ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம்! அதை அவரு படுத்துற பாட்டைப் பாத்தா எனக்கு கொலை நடுங்கிருச்சு!

கதாநாயகி (கதை எங்ஙன இருக்குங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்) அருமையா வந்துருக்காக! வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக! இதுக்கு மேல என்ன வேலைங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

படத்தோட உண்மையான கதைநாயகன் (நன்றி: தங்கர்) நம்ம கஞ்சாக் கருப்புதேன்! “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா?” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்! தொப்பியைத் தூக்கிட்டேன் கஞ்சா!

சொரணையே இல்லாத கதைக்குப் பின்னணி இசை ஒரு கேடான்னு நினைச்சிருக்காரு வித்யாசாகர்! தப்பில்லைங்க! ஆனா பாட்டுகளில தான் யாருன்னு காட்டியிருக்காப்புல! அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது! ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க! நானே நொந்து நூடுல்ஸாகிட்டேன்! அதிலயும் அந்தக் கரகாட்டப் பாட்டுக்கு ஏதோ ஒரு டுபுக்கு டான்ஸரையும் ஷர்மிலியையும் (ஏய்யா இயக்குநரே! மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா?) ஆட விட்டது இருக்கு பாருங்க... சரி ஒண்ணும் பிரயோசனம் இல்லைங்கறீங்களா, அதுவுஞ் சரிதேன்!

ஒளிப்பதிவு! இப்பல்லாம் தமிழ்நாட்டுக் காரவுகள பம்பாய் டெல்லியில இருந்தெல்லாம் பிளைட்டு சார்ஜூ குடுத்துக் கூப்பிட்டுப் படம் புடிக்கச் சொல்றாகளாம். இங்ஙன என்னடான்னா, டெக்னிகல் சமாச்சாரம் தெரியாத எனக்கே பல காட்சிகளில் ஒளிப்பதிவு பல்லிளிக்கிறது அப்பட்டமாத் தெரியுது!

படத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக! அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு! யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா! ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

Wednesday, September 20, 2006

வேட்டைக்கு நடுவில் விளையாட்டு!

ஏற்கனவே நிறைய பேரு படத்தின் நிறைகளைத் அலசித் துவைத்துப் பிழிந்துக் காயப் போட்டு விட்டார்கள். ஆனாலும் நம்ம கருத்துகளைச் சொல்லலைன்னாதான் நமக்குத் தலை வெடிச்சிருமே... படம் வந்து கொஞ்ச நாள் ஆனாலும் பாக்க நமக்குக் குடுத்து வைக்கலையே... இப்பத்தான் நண்பர் ராகவன் புண்ணியத்தில பெங்களூர்ல பாத்தேன்.

எனக்கும் படம் புடிச்சிருந்தது... மிகச்சில விஷயங்களைத் தவிர! அதையும் சொல்லீறணும்ல?

1. unmotivated serial killers என்ன விதத்தில் கதையில் பொருந்துகிறார்கள் என்றே புரியவில்லை. எந்த தொடர் கொலையாளிக்கும் ஒரு அழுத்தமான பின்னணி இருக்கும். யாரும் தொடர் கொலையாளியாகப் பிறப்பதில்லை (மேல் விவரங்களுக்கு மதன் எழுதிய "மனிதனுக்குள் மிருகம்" படிக்கவும்). "சிகப்பு ரோஜாக்கள்" கூட அனேகமாக இது போன்ற கதைதான். ஆனால் அதில் உள்ள பின்னணியைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள், வித்தியாசம் புரியும். போகிற போக்கில் கொலைகளும் ஒரு (சரியாகப் பார்த்தால் இரண்டு) தேசத்தின் ஒட்டு மொத்த காவல்துறையும் கையாலாகாமல் நிற்பதும், என்னய்யா இது? சரி சினிமாதானே, மன்னிச்சிருவோம்!

2. அடுத்தது அந்த பைசெக்ஸூவல் பிரச்சினை. கமல் ஒரு காட்சியில் காதலி என்று நக்கலாகச் சொல்வதையும் ஹோமோசெக்ஸூவல்ஸ் (இதுவும் டெக்னிக்கலாகப் பார்த்தால் தவறு) என்று கூறுவதையும் டென்மார்க் நார்வே அமெரிக்கா போல வேறொரு நாட்டில் எடுத்திருந்தால் படத்தைத் தடை செய்திருப்பார்கள்.

3. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சுகம்! குறிப்பாக "வெண்ணிலவே" பாட்டை தினமும் ஒரு தடவையாவது கேட்க வேண்டும் என்று எனக்கு வேண்டுதல். பின்னணி இசையில் நிறைய புத்திசாலித்தனம் கூடி இருக்கிறது. ஒரு காட்சியில் பின்னணியில் ஒருவர் செல்போன் பேசுவதைக் கூடச் சரியாகக் கணித்திருக்கிறார். பல காட்சிகளில் richness தேவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார். ரகுமானையும் சில காட்சிகளில் (குறிப்பாக அந்த கோட்டைக் காட்சி) உதவிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் பாருங்கள், கமல் - ஜோதிகா பரஸ்பரம் காதலைச் சொல்லிக் கொள்ளும் மென்மையான காட்சியில் கூட 100 வயலின்கள் எழுப்புவது இசை அல்ல, இரைச்சல் என்று புரிந்து கொள்ள ஹாரிஸ் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும்.

4. பாடல்களைப் பொறுத்தவரை தாமரைக்கு ஜே! பதாகை என்ற வார்த்தையை அறிமுகப் படுத்தியதில் இருந்து நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று பொங்கும் வரை தாமரையின் பங்களிப்பு சூப்பர், மன்னிக்க, அருமை!

5. இவை இருக்க, பாடல்கள் படத்தின் வேகத்துக்குப் பெரும் தடைக்கல். சில பாடல்கள் ஏன் வருகின்றன என்றே புரியவில்லை. கோவாவில் சிற்றுடை அணிந்த சிற்றிடைப் பெண்கள் ஆட வேண்டும் என்பதற்காகவே "நெருப்பே" பாடல், அங்கு கொலையாளிகள், என்பது அபத்தம். "பார்த்த முதல் நாளே" பாடலும் எதற்கு என்றே புரியவில்லை. அட, நீங்க வேற, அந்த ஃபிளாஷ்பேக்கே எதற்கு என்று புரியவில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்! இதே போல் இதே கமல் மனைவி இழந்த சோகத்தை மகாநதியிலும் காட்டி இருப்பார்கள். ஒரு போட்டோ கூட கிடையாது. வெறும் காட்சி அமைப்பு மட்டுமே!

6. ஹீரோவின் அனாவசிய ஹீரோயிசத்தைக் காட்டும் இயக்குநர் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் படத்தில் கடைசிக் காட்சி வரையில் ஹீரோவால் வில்லன்களை ஒரு மண்ணும் செய்ய முடியவில்லை என்பது உறுத்தி இருக்கும். கடைசிக் காட்சியில் வில்லனைக் கொல்லும் சினிமா போலீஸ் என்பது சரியாகத்தான் இருக்கு! சரி, யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்றால், என்ன எழவுக்குக் கண்ணை நோண்டச் சொல்லி ஒரு டப்பா வில்லனின் பக்கத்தில் போய் நிற்க வேண்டும்?

மொத்தத்தில் சினிமாத்தனத்துக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறார் கௌதம். ஆனால் ஆசை மட்டுமே பட்டிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் உலகத் தரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம்! பாராட்டுகிறேன், மனமார! ஆனால்... கதைன்னு பாத்தா என்ன செய்யிறது? எல்லாம் விதி!

ஆனா, மறக்காம ஒரு தடவையாச்சும் பாத்துருங்க!

Tuesday, July 18, 2006

கலைஞர்-ஜெ-வாஸ்து-காமெடி!!!

இன்றைய காமெடி!!!

நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை! இந்த அறிக்கையே சொல்லும்!!! முழுசாப் படிச்சு எஞ்சாய் பண்ணுங்க!

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தலைமைச் செயலக வளாகத்தினுள் பாரம்பரியம் உள்ள இடத்தில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மேற்படி சட்டமன்றப் பேரவை வளாகமும், அதன் அமைப்பும், ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு 1952-ம் வருடத்தில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த காலத்திலிருந்து நான் முதல்-அமைச்சராக இருந்த வரை தமிழக சட்டமன்றப் பேரவை மேற்படி இடத்தில் தான் நடைபெற்று வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஊட்டியில் நடைபெற்ற ஒரு தொடர் மற்றும் மராமத்துப் பணிகள் மேற்கொண்ட போது, இப்போது கலைவாணர் அரங்கம் என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சில தொடர்கள் நடைபெற்றதைத் தவிர, மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் மேற்படி வளாகத்தில் தான் நடைபெற்று வந்தது.

தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள் அனைத்தும் அங்கிருந்து தான் வெளிப்படுத்தப்பட்டது. எத்தனையோ தலைவர்கள், உதாரணமாக காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் அந்த சட்டமன்ற பேரவையில் தான் உரையாற்றி இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஆற்றும் சட்டமன்ற பணிகளை செய்துள்ளார்கள்.

மேற்படி சட்டமன்றப் பேரவையின் இருக்கைகள் மிகவும் தரம் வாய்ந்த மரச் சாமான்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்-அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டு இயங்கி வந்து இருக்கின்றது.
இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழக சட்டமன்றப் பேரவைக்கும் மற்றும் அதன் வளாகத்திற்கும் கருணாநிதியால் மிகப் பெரிய ஊறு இப்போது நேர்ந்துள்ளது. இதுகாறும் பின்பற்றப்பட்டு வரும் சட்டமன்ற நடைமுறையானது, முதல்-அமைச்சருக்கு எதிர்வரிசையில் அவருக்கு நேர் எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருப்பார்.


முதல்-அமைச்சரை ஒட்டி அவரது வலது பக்கத்தில் மற்ற அமைச்சர்களும், அதே போல எதிர்க்கட்சித் தலைவரை ஒட்டி அவரது இடது பக்கத்தில் மற்ற கட்சித் தலைவர்களும் அமர்ந்து இருப்பார்கள். எந்த ஒரு சூடான விவாதமும், உணர்ச்சிப்பூர்வமான விவாதமும், அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் பாங்கினை பார்க்கும் விதத்தில் தான் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அமரும் இருக்கைகள் இதுகாறும் இருந்து வந்தன.

தற்போது அவரது உத்தரவிற்கு இணங்க தமிழக சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகள் மற்றும் மேஜைகள் ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
காலம் காலமாக இதுவரை இருந்த தன்மையினை மாற்றி, தற்போது முதல்-அமைச்சர் உட்காரும் இடம் பேரவைத் தலைவரின் வலது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் அமர்ந்திருப்பதை பார்க்க முடியாத வகையில் பேரவைத் தலைவரின் இருக்கையால் மறைக்கப்பட்டு அந்த இருக்கைக்கு இடது புறத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

அதாவது, முதல்-அமைச்சரை எதிர்க்கட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்கள் பார்க்க இயலாது. அதே போல ஆளும் கட்சித் தரப்பில், எதிர்க்கட்சித் தலைவரையும் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்க்க இயலாது.

கருணாநிதி இவ்வாறு இருக்கைகளை மாற்றியதற்கு என்ன விளக்கம் தர இருக்கிறார்? எனக்குக் கிடைத்த தகவல்படி வாஸ்து சாஸ்திரத்தின் முழுப்பிடியில் கருணாநிதி தற்போது சிக்கியுள்ளார்.

முதல்-அமைச்சர் அறையிலும் கருணாநிதி அமர்ந்து அதிகம் பணியாற்றுவது இல்லை. அதற்குக் காரணம் அந்த அறை அமைந்துள்ள இடம் அவருடைய ராசிப்படி சரியாக இல்லை என்றும், இதுகாறும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற அறை தற்போது முதல்-அமைச்சர் பணியாற்றும் இடமாக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கெல்லாம் காரணம் வாஸ்து தான் என்றும் தெரிய வருகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடமும் அடியோடு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கும் வாஸ்து தான் காரணம் என்றும் தெரியவருகிறது.

சட்டமன்றப் பேரவை என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமும் அல்ல. அப்படி இருக்கும் போது யாரைக் கேட்டுக் கொண்டு இவ்வகை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை முதல்-அமைச்சருக்கும், சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கும் உள்ளது.
எந்த ஓர் எதிர்க்கட்சித் தலைவரையும் இதுகாறும் இது குறித்து கலந்து ஆலோசனை செய்ததாக தெரியவில்லை. ஏதோ தன் வீட்டு வாசல்படி, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது போல் முதல்-அமைச்சரும், சட்டமன்றப் பேரவைத் தலைவரும் நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்காக செலவழிக்கப்படும் பெரும் பணம் வீண் தானே?

இதுவரை என்ன நடைமுறை பழக்கவழக்கமோ அதனை திரும்பக் கொண்டுவருவது தான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
தினசரி கொலை, கொள்ளை என்று சட்டம்-ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் மணல் கொள்ளை; கள்ளச் சாராயம் தமிழகமெங்கும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதே வேகத்தில் சட்டமன்றப் பேரவையின் பாரம்பரியமும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைகள் இடமாற்றம். நாட்டு மக்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டோர் இதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இருக்கைகள் இடமாற்றம் மட்டுமே வாழ்க்கையை மாற்றி அமைத்து விடாது.

இதனால் மைனாரிட்டி அரசு நிலைத்து நின்று விடாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டமும், செயலாக்கமும் தான் ஓர் அரசுக்கு முக்கியம் என்பதை இனியாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, July 13, 2006

ஆறு பற்றி ஆறு

நம்ம சிவமுருகன் கொஞ்ச நாளைக்கு முன்னால உங்களுக்குப் புடிச்ச புடிக்காத ஆறு பத்தி எழுதுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. நானும் ரொம்ப யோசிக்க முடியாம, அல்லது யோசிக்கத் தெரியாம திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன். வேலை வேற கொஞ்சம் அதிகம். கடைசியா ஆறைப் பத்தியே ஆறையும் எழுதிட்டா என்னன்னு தோணிச்சு.

தமிழில் ஆறு என்னும் சொல் பல வகையான பொருள்களில் வழங்கப் படுகிறது. அதில் ஒரு ஆறு அர்த்தங்களை, அதாவது பொருட்களை எடுத்துக்கிட்டு சின்னச் சின்னதா வார்த்தைக் கோவைகள் (இதை நான் கவிதைன்னு சொல்லப் போயி நிஜமாவே கவிதை எழுதுறவங்க அடிக்க வந்துட்டா என்ன செய்யிறது? :) ) போட்டிருக்கேன். படிச்சுப் பார்த்து நல்லாருக்கான்னு சொல்லுங்க.

ஒன்று:

இது அனைவருக்கும் தெரிந்தது எண் 6! இந்த ஆறோட வடிவைப் பாத்தாலே எனக்கு என்ன தோணுதுங்கறதுதான் கீழே இருக்கு!

எண்களில் உனக்கு மட்டும்
அப்படியென்ன சோகம்?
வடிவே கயிறாய்!


இரண்டு:

நதி! நம்ம ஊருல ஆறுகள் ஒரு காலத்துல பாய்ந்தோடிக் கொண்டுதான் இருந்ததாம். ஏதோ ஒரு பழைய புத்தகத்துல ஆறுங்கறதுக்கு வழின்னு இன்னொரு பொருள் இருப்பதற்குக் காரணமே நதிகளின் அடையாளங்கள்தான்னு சொல்லிருந்தாங்க. ஆனாப் பாருங்க, இப்பப் பல நதிகளை இங்ஙனதேன் இருந்துச்சுன்னு அகழ்வாராய்ச்சிக்காரவுக மாதிரி சொல்றது மனசு வலிக்குது. எங்க ஊரு மதுரையில அழகர் ஆத்துல எறங்குறதுக்கு ஒரு காலத்துல லாரியில தண்ணி கொண்டு வந்து ஊத்துனாக! அங்ஙன ஆத்துக்குள்ள பம்பு போட்டு ஓடுதண்ணின்னு பேரும் வச்சுருக்காக! ஒரு காலத்துல ஆத்துத் தண்ணி ஊத்தாப் போயி இப்ப அந்த ஆத்துக்கே தண்ணி குடுக்குது!

தாய்க்குப் பாலூட்டும் மகள்!
வைகை ஆற்றில் அல்ல ஊற்றில்
இறங்குகிறார் அழகர்!


மூன்று:
தமிழில் ஆறு என்பதற்கு இன்னொரு முக்கியமான பொருள் வழி! வழி என்பதற்கு உபாயம் என்றும் பொருள் கொள்ளலாம்! அதாவது ஒரு செயலைச் செய்யும் வழி! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். இன்றைக்குப் பற்றி எரிந்தாலும் மாட்டராஸியைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் பற்றவைத்து
நெஞ்சில் முட்டுப்பட்டும்
துஞ்சாத வெற்றி!
- இது மாட்டராஸி ஆறு



நான்கு:

ஆறு என்ற சொல் தமிழில் “அந்த விதமாக” என்று பொருள்படும் பெயரெச்ச விகுதியாகவும் பயன்படுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் கூட “விதி” துவங்கி “சேது” வரையில் காதல் கனவான்கள் தங்கள் காதலிகளை வளைக்கும் விதங்கள் பல வகை! அதில் என் நண்பன் ஒருவன் கல்லூரிக் காலத்தில் பின்பற்றிய டெக்னிக், பரிதாபம்! காதல் பிச்சை கேட்கலாம், ஆனால் காதலைப் பிச்சை கேட்டால் என்ன நடக்கும்?

கண்கள் கலங்குமாறு
கேட்டான் இதயம் வழங்குமாறு
உள்ளக்கிடக்கை விளக்குமாறு
வந்தது விளக்குமாறு!

ஐந்து:

இன்னொரு முக்கியமான பயன்பாடு – “சூடு தணித்தல்”. நமக்கு உண்பதற்கு எல்லாமே சூடாக இருந்தால்தான் பிடிக்கும். எங்க ஊர்ல பிரேமவிலாஸ்னு ஒரு அல்வாக்கடை ரொம்ப பேமஸ்! எங்க தாத்தா காலத்துல இருந்து அங்க அல்வா விக்கிறாங்க. அப்பல்லாம் பொட்டலம் வாங்குபவர்களை விட அங்கேயே போய் சுடச்சுட அல்வாவை விரும்பி உண்பவர்கள்தான் அதிகம். தொன்னையில சூடா நெய் மணக்க அல்வா, கூடவே கொஞ்சம் காராச்சேவு! அடடா! இப்பயும் நாக்கு ஊறுது. அங்ஙன அந்தக் காலத்துல ரெண்டு மணிக்குத் தொடங்கி அரை மணி நேரத்துல அத்தனையும் வித்துருமாம். அல்வா ஆறி யாரும் பார்த்ததில்லை!

பிரேமவிலாஸ் வாசலில்
ஆரும் கண்டதில்லை
ஆறும் அல்வா!


ஆறு:

கடைசியாக நான் எடுத்துக் கொள்ளும் பொருள் “மன அமைதி அடைதல்”. இன்றைய சூழ்நிலையில் மன அமைதி என்பது பல பொருள் கொண்டதாக மாறிவிட்டது. பம்பாய் குண்டு வெடிப்பைப் பார்த்தபோது வருத்தம் இருந்தது. ஆனால் தலைவர்களின் போக்கும் பேச்சையும் கேட்ட போது எனக்குத் தோன்றியது இதுதான்.

ஆறு மனமே ஆறு!
தாலியறுத்தவன்
மீண்டும் வருவான்!
தலைவர்கள் மீண்டும்
நீ மீண்டு வந்தமைக்கு
வாழ்த்துவார்கள்!
ஆறு மனமே ஆறு!

இன்னும் கூட சில அர்த்தங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதிட்டா ஆறுக்கு மேல போயிருமேன்னு விட்டு வச்சுருக்கேன்… என்னங்கறீங்க?

Wednesday, May 31, 2006

பேர் படும் பாடு

இது நிஜமாகவே நொந்து போன ஒருவரின் ஆங்கில வலைப்பூவில் இருந்து எடுக்கப் பட்டது. எனக்கு மின்னஞ்சலில் வந்தமையால் சரியான வலைப்பதிவைக் கண்டறிய இயலவில்லை. வலைப்பதிவர் அமெரிக்காவில் வாழ்பவர் என்று மட்டும் அறிகிறேன்.

இப்போது அவர் மூலமாகவே இதைச் சொல்கிறேன்.

என் முழுப்பெயர் கலைவாணி– கலைக்கு அதிபதியின் பெயர். தூய தமிழ்ப் பெயர். நான் என்னைக் கலை என்று அழைத்துக் கொள்வேன் – உடனே அன்பே சிவம் மாதவன் அன்பரசை அர்ஸ் என்று அழைப்பது போலா என்று கேட்காதீர்கள். அது பெரிய கதை.

என் பெயரின் பல்வேறு வடிவங்களை இந்த டாலர் தேசத்துக்கு வந்து அறிந்தபின்னரே தங்கத் தமிழில் இவ்வெழுத்துகளை இஷ்டத்திற்கு மாற்றியமைத்தால் கிடைக்கும் அருமையான சொற்களை அடையாளம் காண முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு வடிவத்திற்கும் அடைப்புக் குறிக்குள் என் தனிப்பட்ட கருத்துகளை இணைத்திருக்கிறேன்.

முதல் அடி பல்கலைக் கழகத்துக்குள் நுழையும் முன்னரே விழுந்தது. பேராசிரியரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்படித் துவங்கியது:“செல்வி. கலவாணிக்கு,” (உபயோகம்: களவாணிப் பய!)

சரி அதையாச்சும் பெருசுக்காகவும் அது குடுக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்புக்காகவும் பெருசுபடுத்தாம ஃப்ரீயா விட்டுட்டேன்…

ஒரு வருஷம் கழிச்சு ஒரு நிறுவனத்தில நேரடித் தொழில் அனுபவத்துக்காக (intern அப்படிங்கறதுக்கு என்ன யோசனை செய்ய வேண்டியிருக்கு மக்கா) சேர முடிவு செஞ்சேன். அதுக்கு முன்னாடி அந்தப் பயக நான் அங்கு சேர்வதற்கு முன் எடுக்க வேண்டிய தேர்வுகள் பற்றிச் சொல்லக் கூப்பிட்டாங்க.
“ஹலோ அது செல்வி. கிலவாணிங்களா?”(உம்: கிழபோல்ட்டு, எட்செட்ரா – இந்த செல்விக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை!)
“இல்லைங்க இது கலைவாணி”
“ஓ… மன்னிச்சிக்கிருங்க களவாணி”(மறுபடியும்… இப்படி எத்தனை பேருடா கெளம்பீருக்கீங்க?)

சரி என் பேரு பெத்த பேரா இருக்கிறதுனாலதானே இத்தனை குழப்பம்னு நானே ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சேன். அங்க புடிச்சது புதுச்சனி. என்னை நானே “கலை”ன்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சேன். காலைப் புடிச்ச பாம்பு கழுத்தைக் கவ்வாம விட்டிருமா என்ன?

ஒரு வழியா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் அறிமுகப் படலம். டொக்கு மேனேஜர் என்னைக் கூட்டத்துக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறாரு!
“உங்கள் அனைவரின் சார்பிலும் நமது அலுவலகத்திற்குப் புதிதாக அங்கம் வகிக்க வந்திருக்கும் செல்வி. குலையை வரவேற்கிறேன். (உ.ம்: குலை குலையாய் வாழைப்பழம்)
கைதட்டல்கள் – சிரிப்பொலிகள் (டேய் என்னாங்கடா எல்லாரும் சேந்து காமெடி பண்றீங்களா?)

அன்னைக்கு ஆரம்பிச்சது…ஒரு நாள் என் பாஸும் நானும் ஒரு ப்ராஜக்ட் பத்திப் பேசிட்டு இருந்தோம். மீட்டிங் முடிந்தவுடன், அவரு,
“சரி கலி, நீ இங்கு வந்ததில் சந்தோஷம்!” (உ.ம்: கலி முத்திப் போச்சு)
நான் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருக்காம,
“அது கலி இல்லைங்க, கலை!”(எனக்கு இது தேவையா)
“ஓ…காலி”(உம்: பத்திரகாளி – அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த அவதாரம்தான் எடுக்கப் போறேன், அப்புறம் நீ காலி!)
நான் உடனே “ ஹி ஹி.. வெரி க்ளோஸ்…”(போடாஆஆஆஆஆஆஆங்…)

அன்றிலிருந்து என் பெயரைத் திருத்துவதை நிறுத்திவிட்டேன்.கவிஞர்கள் அரைத்தூக்கத்திலும் துக்கத்திலும் வர்ணிக்கும் ஒரு இளம் காலை, நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தேன் (ஒரு மாற்றத்துக்கு அலுவலக வேலை)
“ஹேய் கிலை! எப்படிப் போவுது? Howzat goin?”(உ.ம்: மரக்கிளை) (எனக்குத் தண்ணி தண்ணியாப் போவுதுடா ராஸ்கல்!)
“ஹ்ம்ம்… நல்லாப் போவுது”(சொல்லிட்டுத் திரும்பிட்டேன். நமக்கு எதுக்கு இந்த பேர் திருத்துர பிசினஸ்ஸூ?)
“நீ உன் பேரை இப்படித்தான் சொல்லுவியா?” (ஆகா, ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா)
“உஹ்… அது கலை”
“கொலாய்?” (உம்: கொழாயடிச் சண்டை) (வேணாம்….)
“கொலை?”(உன்னை அதைத்தாண்டா செய்யப் போறேன் முண்டம்!) (வேணாம்…)
“களை?”(உம்: களை புடுங்குறது) (வலிக்குது... அழுதுருவேன்…)
“மேபீ, உன் பேரை நான் நல்லாச் சொல்றதுக்குப் பயிற்சி எடுத்துக்குறேன்”(டேய்… இதெல்லாம் ரொம்ப ஓவருடா… தமிழில் பாத்தா இது ரெண்டே ரெண்டு எழுத்துதாண்டா வெள்ளைப் பன்னி!)

என்னடா சந்திரமுகியில தலைவர் துர்கா பேரை நக்கலடிக்கிற மாதிரி நம்ம பேர் ஆயிருச்சேன்னு நெனைக்கும் போது என் நண்பன் ஒருத்தன் ஒரு புத்திசாலித்தனமான யோசனை சொன்னான்.அதாவது என் பேரை ஆங்கிலத்தில இருக்கிற அதே ஒலி வருகிற இன்னொரு வார்த்தையோட ஒப்பிட்டுச் சொல்லச் சொல்றது.நான் உடனே “கலைடாஸ்கோப்” ல இருக்கிற மாதிரி கலைன்னு சொல்ல ஆரம்பிச்சேன். அங்கயும் வந்தது சனி. பயலுவ “கலாய்”னு தைரியமா நேராவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

“ஹேய் கலாய்!”
“ய்யா?”
“சும்மா உன் பேரைக் கூப்பிட முயற்சி பண்ணிப் பாத்தேன். ஹா ஹா ஹா”
“ஓ.. ஹௌ ஸ்வீட்?”(தூத்தேறி!)

ஏதோ வாந்தி எடுக்கிற எஃபெக்டுல பேர் இருந்தாலும், என் வாழ்க்கை சுகமாகத்தான போயிட்டு இருந்துச்சு… ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும்…என் இண்டர்நெட் கனெக்சன் அவுட்டு. ஒரு கஸ்டமர் சர்வீசைக் கூப்பிட்டேன் என் கிரகம், அது சென்னை கால் செண்டருக்குப் போச்சு! எனக்கு அந்த விசயமே தெரியலை. நேரா என் அமெரிக்க பாணியிலயே பேச ஆரம்பிச்சேன். முன் செய்த ஊழ்வினை!

“உங்க பேரு மேடம்?”
“கலாய்!”
“என்னது? இன்னொரு முறை சொல்லுங்க!”(விளம்பரம் நினைவுக்கு வருதா)
“கலைடாஸ்கோப்பில வருமில்லங்க கலாய்”
“உங்க பேரு புரியலை, உங்க நம்பர் குடுங்க, நான் ரெக்கார்டுகளைப் பாத்திட்டுச் சொல்றேன்”

பெருமூச்சோடு நம்பரைக் குடுத்தேன்.

“ஓ… கலைவாணி, சரியாங்க?”(ஒரு குத்தலான குரலில் கேட்டான்)

அடப் பாவி மக்கா, நீ நம்மூரா???? எல்லா அமெரிக்கத்தனத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா இந்தியன் மாதிரி பேசினேன்.மறுமுனையில அவன் என்ன நினைச்சான்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுது. பேரப் பாத்தா 'urs pammingly' னு போடற கூட்டம் மாதிரி இருக்கு, ஆனா சீன் போடுறது மட்டும் இளவரசி டயானா ரேஞ்சுக்கு இருக்கே…அண்ணா, சத்தியமா நான் அந்த மாதிரி இல்லீங்ணா!

வெள்ளிப் பனிமலையின் மீது - 2

முதல் பாகத்துக்கு இங்கே சொடுக்கவும்
பாகம் 2

ஓட்டுநர் காட்டிய அந்தக் காட்சி எல்லாரையும் திகைக்க வைத்தது என்பதில் ஐயமில்லை. இங்கே சொல்ல வேண்டிய ஒரு தகவல், உத்தராஞ்சல் மாநிலம் முழுவதுமே மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மலை முழுவதும் அங்கங்கு பாறைகளைச் சமன் படுத்தி சாலைகள் அமைக்கும் வேலை நடை பெறுகிறது. உத்தராஞ்சல் மாநிலம் தனியாகப் பிரிந்த பின் அவர்களுக்கு மிக முக்கியமான வருவாயான சுற்றுலாத் துறையை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். மேலே சாலை போடுவதற்காக வைத்த வெடிகுண்டு தவறுதலாக வெடித்து ஒரு பெரீய்ய்ய்ய்ய (எனக்குச் சாதாரணக் கண்களே மைக்ரோஸ்கோப் ஆன மாதிரி இருந்தது) பாறை செங்குத்தாக நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் வந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்தப் பக்கத்தில் வாகனங்கள் ஏதும் இல்லை.

அங்கங்கு அவசரத் தகவல் உதவி எண்கள் எழுதி இருக்கிறார்கள். பி எஸ் என் எல்லின் டால்ஃபின் சேவை (புதுதில்லிக்கான மொபைல் சேவை) மட்டும்தான் வேலை செய்கிறது. எங்கள் ஓட்டுநரிடம் இருந்ததால் உடனடியாக அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார். அமெரிக்கா மாதிரி சொல்லி 20 நிமிடங்களில் பெரிய கிரேன்கள் வந்து விட்டன. சின்னச் சின்ன வெடிகுண்டுகள் வைத்து ஒரு மாருதி 800 அளவு பெரிய பாறையைச் சின்னச் சின்னதாக உடைத்துக் கீழே நதிக்குள் தள்ளி விட்டனர். 3 மணி நேரத்தில் எல்லாம் சரியாகி மீண்டும் ருத்ரபிரயாக் நோக்கிப் புறப்பட்டோம்.

தேவபிரயாக்குக்குச் செல்லும் வழியில் சிற்றோடை போல் ஓடிக் கொண்டிருந்த கங்கையில் குளிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு 500 அடி கீழே இறங்கிச் சென்றால் கூழாங்கற்களாகக் கிடக்கிறது. நல்ல வெள்ள காலத்தில் நதிப் படுகையாக இருந்த இடம். கால்வாசி அகலத்தில் மட்டும் கங்கை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது சீசன் இல்லையாதலால், அங்கங்கு டெண்ட் போட்டு வைத்திருக்கின்றனர். மக்கள் அங்கேயே போய் தங்கிக் கொண்டு நான்கைந்து நாட்கள் நதிப் படுகையில் வெளி உலக வாசனையே இல்லாமல் நிம்மதியாகக் கழித்து வரலாம். உதவியாட்களும், சமையல் ஆட்களும் கிடைக்கிறார்கள். அடுத்த முறை இப்படிப் போய் ஒரு ரெண்டு நாள் இருந்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கங்கையைக் கண்டவுடன் எங்கள் மேலாளருக்கு (மிஸ்டர் எக்ஸ்னு வச்சிக்குவம்) உற்சாகம் கரைபுரண்டு ஓட குடுகுடுவென்று ஓடி நதிக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில் தட தடவென்று ஓடி மேலே வந்தவர் இரண்டு நிமிடங்களுக்குப் பேச்சே இல்லை. நாங்கள் ஏதோ முதலை கிதலை கடிச்சி வச்சிருச்சோன்னு பாத்து முதலுதவி செஞ்சு என்னான்னு கேட்டா கூல் கூல்னு உளறினார். இங்க கூழுக்கு எங்க போறதுன்னு முழிச்சிட்டு இருந்தபோதுதான் அங்கே கூடாரத்தில் இருந்த உதவியாளர் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக (0-1 டிகிரி) இருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து மற்ற மக்கள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். நடுநடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதற்குள் மிஸ்டர் எக்ஸ் தான் இங்கு வந்த பயன் அடைந்து விட்டதாகச் சொன்னார், அதாவது அவர் செய்த பாவம் எல்லாம் கழுவப் பட்டு மீண்டும் அவரது பாவக் கணக்கு 0-லிருந்து ஆரம்பிக்கிறதாம். அதனால் இன்னும் நிறையச் செய்யலாமாம். என்னே ஒரு நல்லெண்ணம்! எனக்கு ஒரு டவுட்டு! இவரு பாவம் செஞ்சாரு ஓகே. என்னை மாதிரி அபாவிகளுக்கு (அதாவது பாவமே செய்யாதவர்கள்) கணக்கு நெகட்டிவ்வில் போகுமோ? (எனக்கு ஏற்கனவே தண்ணியில கண்டமின்னு திருச்சுழி கருப்புசாமிக்கு வேண்டி இருக்கிறேன்.) இதைச் சொன்னதுதான்யா தாமதம்! கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையத் தண்ணிக்குள்ள முக்கி எடுத்துப் பிட்டாய்ங்க, படுபாவிப் பயலுவ.

சில நிமிடங்களுக்குக் கண்ணே தெரியவில்லை (ஏற்கனவே லைட்டா டோரிக் கண்ணு)! ஆனால் அதன் பிறகு வந்த உற்சாகம்! ஆகா! அருமை அருமை! மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுக்குள் மெல்ல மெல்ல கால் உடல் எனக் கடைசியில் தலையை முக்கிக் குளிக்கும் சுகம், அதுவும் கங்கையில் இன்னும் சொல்லப் போனால் மாசு படுத்தப் படாத கங்கையில் குளித்ததில் நிஜமாகவே பிறவிப் பயன் அடைந்தேன். ஒரு மணி நேரம் நமது கிராமத்து மத்தகஜங்கள் போல் ஊறிக் கிடந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினோம்.

நடுவில் உணவை முடித்துக் கொண்டு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேவபிரயாக் போய்ச் சேர்ந்தோம். மதிய வெய்யில் இதமான சூட்டில் அங்கிருந்த கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்திவிட்டு கங்கை நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டோம். எல்லா பிரயாக்குகளிலும் ஒரு பெண் தெய்வத்தை வழிபாட்டுக்காக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அசைவச் சாமிகள். சிறிது தொலைவில் ஆற்றில் படாதவாறுதான் பலிகள் கொடுக்கப் படுகின்றன.

இரவு 7 மணிக்கு ருத்ரபிரயாக்கை அடைந்தோம். ருத்ரபிரயாக் ஒரு மாவட்டத் தலை நகரம். ஆனால் நமது ஊர்க் கணக்கில் சொல்ல வேண்டுமானால் திருவல்லிக்கேணி அளவு கூட இராது. சின்னச் சின்ன அத்தியாவசியக் கடைகள். பக்கத்துக் கிராமங்களில் இருந்து மக்கள் பயண வசதிக்காக நிறைய ஜீப்புகள் இருக்கின்றன. இமயமலையில் இரண்டே இரண்டு பேர் வாழும் கிராமங்கள் கூட இருக்கின்றன. அந்தக் கிராமத்துக்கும் மின்சாரம், தொலைபேசி என்று வசதிகள் இருந்ததைப் பார்த்து மலைத்துத்தான் போனேன். ருத்ரபிரயாக்கில் அடுத்த நாள் உலங்கு வானவூர்தியில் பயணம் செய்ய வேண்டியவர்கள் சீக்கிரமே தூங்கப் போனார்கள். நாங்கள் அதற்கு அடுத்த நாள் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

விடுதி (மோனல் இன் என்று பெயர் – சிம்ரன் தங்கச்சி தேவையில்லாமல் நினைவுக்கு வந்தார்) அலகாநந்தா நதிக்கரையில் மலைச் சரிவில் இருந்தது. 200 மீட்டர் கீழே நதி சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவிற்குப் பின் கொஞ்ச நேரம் அந்த நதிச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன், கை விரைப்பது தெரியாமல்!

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி வெளியே வந்தோம். உலங்கூர்தியில் செல்ல வேண்டியவர்கள் ஏற்கனவே சென்று விட்டிருந்தனர். நாங்கள் 4 பேர் மட்டும் மிச்சம் இருந்தோம். எனவே கீழே நதிக்கரைக்குச் சென்று சில நேரம் பொழுதைக் கழித்தோம்.

உலங்கூர்தி விமானதளம் ருத்ரபிரயாக்கில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அகஸ்தியமுனி என்ற இடத்தில் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் augustimuni என்கிறார்கள். அங்கும் நமது அகத்தியருக்குக் கிடைக்கும் மரியாதையைக் கண்டு வியந்தேன். மதிய உணவைக் கட்டிக் கொண்டு அகஸ்தியமுனிக்குச் சென்று மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு சந்திரபுரி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

சந்திரபுரியில் அலகாநந்தாவின் வேகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கிறது. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மை. அங்கே நதிக்கரையில் சிறிது நேரம் தங்கிவிட்டு வந்துவிட்டோம். மனம் முழுவதும் அடுத்தநாள் உலங்கூர்தியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் 5 மணிக்கே எழுந்து உலங்கூர்தித் தளத்திற்குக் கிளம்பி விட்டோம். காலங்கார்த்தால இப்படி வரச்சொல்றாங்களேன்னு திட்டிக்கிட்டே கிளம்பினேன். காப்பி தவிர வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே சென்றவர்கள் எச்சரித்திருந்தனர். நம்மதான் சிங்கமாச்சே… அதெல்லாம் கேட்டா நம்ம பொழைப்பு என்னாகிறது. அதுனால சின்னதா ரெண்டு ஆப்பிள் ஒரு வாழைப்பழம் ரெண்டு பிரட்டோடு என் pre பிரேக்பாஸ்ட்டை முடித்துக் கொண்டேன். அங்கே ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உலங்கூர்தி சின்னதாகக் காத்துக் கொண்டிருந்தது.

இது பெல் 300 என்னும் உலங்கூர்தி வகை. ஐந்து பிரயாணிகளும் இரண்டு பைலட்டுகளும் செல்லும் வகையில் உள்ளது. முழுவதுமாகக் கதவை அடைத்துக் கொள்ளலாம். உலங்கூர்தி கிளம்பியது! எங்கள் மனமும்தான்! ஏற்கனவே விமானத்தில் சென்றிருந்தாலும் இந்தப் பயணம் வித்தியாசமானது. குறைந்த உயரம், எனவே வேண்டுமானால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்ளலாம், தலையை மட்டும் எட்டிப் பார்க்க முடியாது. இது எனக்குத் தெரியும். அவ்வப்போது ஆட்டோ மாதிரி குலுங்கும். இது எனக்குத் தெரியாது. குலுங்க ஆரம்பித்தது. எனக்கு உள்ளே போன ஆப்பிளும் வாழைப்பழமும் பிரெட் புட்டிங் மாதிரி ஆகி வெளியே வரத் துடித்தன. கூட வந்த (பசியோடு) வயித்தெரிச்சல் நண்பர்கள் நன்றாக வேண்டும் என்பது போல் பார்த்தனர். கஷ்டப்பட்டு இரண்டு புளிப்பு மிட்டாய்களை வைத்து உள்ளே தள்ளினேன். மதுரை திருச்சி பேருந்துகளில் இந்தப் புளிப்பு மிட்டாய்களை விற்பவர்களை இனிமேல் வையக் கூடாது என்று முடிவு செய்தேன்.

உலங்கூர்தி முதலில் சில பசுமையான மலைகளைக் கடந்தது. கீஈஈஈஈஈழே கேதார்நாத்தும் அமர்நாத்தும் கடந்தன. தற்போது கேதார்நாத் மூடப் பட்டுவிட்டதால் அந்த மூர்த்தி கீழே உக்கிமட் என்னும் இடத்தில் வைத்துப் பூஜை செய்யப் படுகிறது. தென்னாடுடைய சிவனுக்கு வடநாடும் உடைத்து! இது பற்றி மேலும் பின்னர் சொல்கிறேன். பனிச்சிகரங்களைப் பாருங்கள் என்று பைலட் குரல் கொடுத்ததும் கேமிராவைத் திருப்பிக் கொண்டு பார்த்தோம்.

வெள்ளிக் குழம்பை அப்படியே கவிழ்த்து வைத்தது போல் கடந்தன நான்கு சிகரங்கள். அவற்றுக்குப் பெயர் “சௌகம்பா”. நான்கு கம்பங்கள் என்று அர்த்தமாம். ஆனாலும் ஏதோ நெருடியது. இதுதான் இத்தனை சினிமாவில பாத்திருக்கோமே என்று! பைலட்டிடம் இதையும் சொன்னேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இப்போது பாருங்கள் என்றார், உலங்கூர்தி ஒரு சிகரத்தை மெல்லச் சுற்றிக் கொண்டு சூரியன் இருந்த பக்கம் வந்து மறுபக்கத்தைக் காட்டியது. ஐயா! ரசவாதம் என்றால் என்ன என்று அந்த நிமிடத்தில் எனக்குப் புரிந்தது!

Friday, May 12, 2006

திமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்???

முதல்ல இந்தத் தேர்தல்ல ஜெயலலிதாங்குற தனிப்பட்ட ஆணவத்துக்குக் கிடைச்ச ஆப்பு, கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த மதிமுகவுக்கு ஆப்பு, இதெல்லாம் சேர்த்துதான் திமுக வெற்றி. அத்தனை எதிர்ப்பு, பணபலம், ஆட்சி பலம், பல்வேறு ஊடகங்களின் பாரபட்சம் (இதில சன் டிவி, தினகரன், குமுதத்தையும் எதிர் சைடில சேத்துக்கறேன்) கடைசி நேரத்தில் கட்சி மாறிய காட்சிகள் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றமைக்குக் கலைஞருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

கலைஞரின் பலமான தேர்தல் கூட்டணி, விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை (இடங்களை மட்டும்தான் - இதற்குக் கம்யூனிஸ்டு கட்சிகளே சாட்சி), இலவசங்களை அள்ளி வீசிய தேர்தல் அறிக்கை (அட அந்தக் காலத்துல எம்சியாரு இதைத்தானே செஞ்சாரு), தள்ளாத வயதிலும் தெருத்தெருவாய்ச் செய்த பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து வெற்றிக் கனியை அவர் காலடியில் சமர்ப்பித்து இருக்கின்றன. இதே கூட்டணி அப்படியே பாண்டிச்சேரியிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருப்பது ஐஸ்கிரிம் மேல் வைக்கப்பட்ட செர்ரிப் பழம் அல்லது பொங்கலில் தூவப்பட்ட வறுத்த முந்திரி! இதெல்லாம் சேர்ந்து பார்க்கையில அதிமுக ஆட்சி அகற்றிய ஆப்பரேஷன் சக்ஸஸ் என்றுதான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. ஆனால் இப்ப பேஷண்ட் (அதாங்க திமுக) நிலை என்ன அப்படிங்கறதுதான் முக்கியம். அதைப் பத்தி ஒரு சின்ன அலசல்.

இப்பவே கூட்டணி ஆட்சி அது இதுன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாக. தயாநிதி அவரு பங்குக்கு தனித்து ஆட்சி அமைப்போம்கிறாரு. அதைக் கேட்டு இப்பயே டெல்லிக் காரவுகளுக்கும் இங்க இருக்குற தீர்க்கதரிசிகளான இளங்கோவன் போன்றோருக்கும் வயிறு கலங்கி இருக்கும். சரி, எல்லாத்தையும் மீறி கூட்டணி ஆட்சி வருதுன்னு வச்சிக்கங்க, அடுத்த கூத்து எந்தப் பதவிகளை யாருக்குக் குடுக்குறதுங்கறது. அதிலயும் ஒரு வெட்டுக் குத்து இருக்கும். வடக்கே கம்யூனிஸ்டுகளைப் போல் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எந்தப் பொறுப்பும் இல்லாத அதிகாரங்களை அனுபவிக்கலாம் என்பது பாமகவின் நிலை. அவங்க ஆட்சி அதிகாரத்துல இல்லாம இருக்குறதும் ஒரு வகையில தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.

இப்பதைக்கு அதிமுக எதிர்பார்க்குற மாதிரி உடனே பாராளுமன்ற தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸுக்கு இப்போது மத்தியில் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் உதற மாட்டார்கள். அதிலும் இங்கே அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது எல்லாம் சமீப காலத்தில் நடக்கக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு இரண்டு மேடம்களுமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் மத்தியில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

ஆனாலும் திமுக இங்கு நிம்மதியாக ஆட்சி புரிய முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. கலைஞரின் நிர்வாகத் திறன் நன்றாகவே இருந்தாலும் அள்ளி வீசியிருக்கிற இலவசங்களை நினைத்தால் சாமானியனாகிய எனக்கே குலை நடுங்குகிறது. இதை எப்படிக் கலைஞர் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு (அல்லது எதிர்ப்பு) மீறி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் ஆயிரம் கோடி ரூபாய் கேள்வி (அட எத்தனை நாளைக்குத்தான் வெள்ளைக்காரன் பணத்தைச் சொல்றது?). அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கினால் இவை அனைத்தும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதே ஒரு பெரிய துணிச்சலான வேலை. ஜெ.வுக்கு இந்த மாதிரி விஷயங்களில் துணிச்சல் அதிகம். அது அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதானாலும் சரி, ஆடு கோழி வெட்டத் தடை கொண்டு வருவதானாலும் சரி! ஜெ. நல்லதோ கெட்டதோ, செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாகச் செய்வார். கலைஞர் அனைவரையும் அனுசரித்துப் போவார். அதுதான் பிரச்சினை!

1996 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் தமாகா எப்படி எல்லாம் பதவியில் இல்லாமலே சுகம் அனுபவித்தது என்பது இப்போதைய காங்கிரசாருக்குத் தெரியாதா என்ன? இதே ஜெ. பதவி ஏற்றால் முதல் உத்தரவே அதிமுக காரர்கள் தவிர மற்றோர் சொல்லும் எதுவும் செய்யக் கூடாது என்பதாக இருக்கும். கலைஞருக்கு இவர்களை எங்கே வைக்க வேண்டும் என்பது தெரியாது :) எனவே என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் அதிமுகவை விட இனி திமுகவுக்கு ஒரு தலைவலியாக இருக்க வாய்ப்பு உண்டு.

பாமகவுக்குத் தன் நிலை தெரியும். காங்கிரஸ் துணை திமுகவுக்கு இருக்கும் வரையில் ரொம்ப ஆடினால் ஆப்புதான் விழும் - தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும். எனவே உடனடியாக அவர்கள் ஏதும் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

குறிப்பாக கலைஞருக்கு அடுத்து திமுகவில் ஸ்டாலினைப் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாமக மற்றும் காங்கிரஸின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும். இந்தப் பிரச்சினையை திமுக எப்படி அணுகப் போகிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.

ஏற்கனவே பொதுவுடைமைக் கட்சிகளும் எந்தத் தொழிலிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கப் போகிறோம் என்கிறார்கள். இப்போது 17 உறுப்பினர்களுடன் இன்னும் பகிரங்கமாக இவர்கள் சுமங்கலி கேபிள் விஷனின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாள் விரைவில் வரலாம். அங்கே கலைஞரின் ராஜதந்திரம் மட்டுமே உதவ வேண்டும்.

இந்தப் பதிவுல மதிமுக பத்திச் சொல்லலைன்னா அடுத்த ரெண்டு நாளைக்கு எனக்குத் தூக்கம் வராது.

இதே திமுக கூட்டணியில இருந்துருந்தா திமுகவுக்கு கூட பத்து சீட்டு கெடைச்சிருந்தாலும் மதிமுகவுக்கு கூட 20 சீட்டுக் கெடைச்சிருக்கும். ஆனாலும் திமுகவினரைப் பங்காளிகளாப் பாக்குற பார்வை மதிமுகவை விட்டுப் போயிருக்காது, பல தொகுதிகளில உள்குத்து செஞ்சு காலி பண்ணிருப்பாங்கன்னு தோணுது. என்னவோ கொள்கை கோட்பாடு எல்லாம் பேசின வைகோவுக்கு இப்ப சீட்டுக் கெடைச்சு முதல் முதலாச் சட்ட மன்றத்துக்குப் போயிருந்தாலும் மக்கள் மத்தியில, குறிப்ப நடுநிலையாளர்கள் மத்தியில அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து விட்டது. அதிலும் நேத்து தோல்விய ஒத்துக்க முடியாம அவரு ஜெயா டிவியில பேசின பேச்சு அத்தனைக்கும் சிகரம்.

எனிவே தமிழகம் மற்றும் புதுவை சட்ட சபைகளில் இப்போது மதிமுகவுக்கு உறுப்பினர்கள் உண்டு! வாழ்த்துகள் வைகோ அவர்களே! இனியாவது சகோதரியிடம் கொஞ்சம் வாஞ்சையாக இருங்கள்!

இப்போதைக்கு திமுக பக்கம் காற்று சுழற்றி சுழற்றி அடிக்கிறது. மீண்டும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Tuesday, May 09, 2006

அடுத்து ஜெ. ஆட்சி - கா.நா கருத்துக் கணிப்பு

ஜெயா டிவியில் அடுத்த அதிரடி.

யாரு கா.நா. னு கேக்குற அறிவு "சீவி"களுக்கு - கா.நா. என்றால் காழியூர் நாராயணன் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சொல்லும் பெரிய தில்லாலங்கடி ஜோதிடர்.

எக்சிட் போல்கள் எல்லாம் இதுவரை தவறான தகவல்கள் மட்டுமே தந்திருக்கின்றன என்று செய்தியில் ஆணித்தரமாகச் சொன்னார்கள். அது பரவாயில்லை - ஏனென்றால் எக்சிட் போல்கள் மண்ணைக் கவ்வியதும் உண்டு. ஆனால் அடுத்து போட்டாங்க பாருங்க அதிரடி! பிரபல ஜோதிடர்கள் அடுத்துத் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும் அப்படின்னு சொல்லிருக்காங்களாம். அதுனால அதிமுக ஆட்சிதான் அமையுமாம்.

மக்கள் என்ன சொன்னாங்களோ அதைப் பத்தி கவலை இல்லை. ஜோதிடர்கள் சொல்லிட்டாங்களாம், இதுக்கு முன்னாடி ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டுத்தானே முதுமலைக்கு யானையை அனுப்பினது, யானைக்குட்டியைக் கோயிலுக்குக் குடுத்தது, சத்ரு சம்ஹாரம் யாகம் செய்ய தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஐந்து ரூபாய்க் காசுகளைத் திரட்டியது எல்லாமே செஞ்சும் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தது ஆப்பு!

சொல்றதுக்கு வேற பத்திரிகைச் செய்தியே இல்லையா என்ன? தினமலர், தினமணி, தினபூமி இதெல்லாம் விட்டு எக்சிட் போல் நடத்தி அதிமுக 233 தொகுதிகளில் வெற்றி பெறும் - முறைகேடுகளால் கருணாநிதி மட்டும் வெல்வார்னு சொல்ல வேண்டியதுதானே!


உங்களுக்காகக் காழியூர் நாராயணன் கொடுத்த ஆறுதல் பேட்டி!

காழியூர் நாராயணன் பேட்டி
தமிழ்நாட்டில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று பிரபல ஜோதிடர் திரு.காழியூர் நாராயணன் கூறியுள்ளார்.
எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஜோதிடர்களில் திரு.காழியூர் நாராயணன் குறிப்பிடத்தக்கவர். தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ள திரு.காழியூர் நாராயணன், தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். செல்வி.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்பார் என்று ஈரோட்டை சேர்ந்த பிரபல ஜோதிடர் திரு.ஓம்.உலகநாதனும் கூறியுள்ளார். பிரபல ஜோதிடர் பண்டிட் வெற்றிவேலுவும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள் பலரும் செல்வி.ஜெயலலிதாவே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு திரட்டப்படுகிறது

Friday, December 02, 2005

வெள்ளிப் பனிமலையின் மீது - 1

பாகம் 1
ஒரு சுகமான மதிய (உணவுக்குப் பின்) வேளையில்தான் இது எல்லாமே இப்படித்தான் ஆரம்பித்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் குழுவே சேர்ந்து ஒரு வேலையை ஒரு நாளைக்கு 16 மணி நேரங்கள் வேலை செய்தால் முடிக்கலாம். அப்படிச் செய்தால் ஒரு சிறந்த பரிசு தரப்படும், என்றார் எங்கள் டேமேஜருக்கு டேமேஜர் (அப்படி என்றால் பெரிய தில்லாலங்கடி என்று கொள்க). இது இல்லை என்றாலே எப்படி வேலை இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. எனவே அபிலாஷ் பெரிசா எங்களை இமயமலைக்கே அனுப்பீருவீகளாக்கும் என்றான். ஏற்கனவே ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்த டேமேஜர் ஸ்கொயரின் முகம் இன்னொரு பல்ப்பும் சேர்த்தது. தானும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இந்த உள்நோக்கங்கள் குறித்து பின்னால் சொல்கிறேன். ஆனால் இன்னும் சில முதுகெலும்புள்ளவர்கள் இதை எதிர்த்தார்கள். சரி என்று ஒரு கூட்டம் போட்டு லட்சத்தீவு, சிங்கப்பூர், குமாரகம் என்று பலவற்றையும் விவாதித்து வழக்கம் போல் பெரியவரின் தீர்ப்பில் இமயமலைக்குப் போவதென்று முடிவெடுத்தோம்.

அடுத்த ஒரு மாதமும் நாங்கள் செய்ததைக் கேள்வியுற்று மிருகவதைத் தடுப்பு மையத்தில் இருந்து கூட ஆட்கள் வந்து பரிதாபத்துடன் பார்த்துச் சென்றனர். சென்னை மொழியில் சொன்னால் “டங்குவாரு அந்தது”. எனக்குள் என்னவோ இது வழக்கமான டேகேஜர் பேச்சுத்தான் என்ற எண்ணம் இருந்தது. அதைப் பொய்யாக்கும் வண்ணம் சுற்றுலாத் திட்ட வரைவுகளை நானே முன்னின்று மேற்கொண்டேன்.

அதாவது ஹைதராபாதில் இருந்து தில்லிக்குப் போய் அங்கிருந்து ஏதாவது ஒரு நதிச் சங்கமத்துக்குப் போய்த் தங்கிக் கொள்வது. அங்கிருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் மட்டும் இமயமலையை ஹெலிகாப்டரில் (இதுக்கு ஒரு தமிழ்ச் சொல் கொடுங்கய்யா) சுற்றி வந்து பார்த்துவிட்டு அப்படியே அக்கம் பக்கத்தில் இருக்கும் ஊர்களுக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம். இதில் தில்லியில் இருந்து போவதற்கும் வருவதற்கும் தலா 4 பேருக்கு இடம் இருந்தது. அதில் திரும்பி வரும் கூட்டத்தில் நானும் ஒருவனாக ஒட்டிக் கொண்டேன்.

தங்கிக் கொள்வதற்கு ருத்ரபிரயாக் என்ற இடத்தைத் தேர்வு செய்தோம். பிரயாக் என்பதற்கு சங்கமம் என்று அர்த்தம். நான் இதற்கு முன்பு வரை கங்கை நதி கங்கோத்ரி என்ற பெரிய பனிக்கட்டியில் (glacier – இதுக்குத் தமிழில் என்னய்யா) இருந்து உருவாகிறது என்று மட்டும்தான் அறிந்திருந்தேன். ஆனால் தேவபிரயாக் என்ற இடத்தில் இருந்துதான் கங்கை என்று அழைக்கப் படுகிறது. மேலும் சில பிரயாக்குகள் கீழே:
தேவபிரயாக் – அலகாநந்தா மற்றும் பாகீரதி நதிகள் இணைந்து கங்கையாக!
ருத்ரபிரயாக் – மந்தாகினி நதி அலகாநந்தாவில் இணைவது
கர்ணபிரயாக் – பிண்டரி நதி அலகாநந்தாவில் இணைவது
நந்தபிரயாக் – நந்தாகினி நதி அலகாநந்தாவில் இணைவது
இதில் இமயமலையில் உருவாகிக் கடைசியாக கங்கையை இணையும் பெரிய நதி யமுனை. இதில் புராண காலத்து சரஸ்வதி நதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த இடம்தான் பிரயாக் என்று புத்தர் காலத்தில் அழைக்கப் பட்டது. அதாவது தனியாகப் பெயர் எதுவும் தேவைப் படாத சங்கமம்! இன்று பிரயாக்கின் புதிய பெயர் அலகாபாத்! இது தவிர பல பிரயாக்குகள் இருப்பதாகப் பின் அறிந்தோம்.

சரி எங்கே விட்டேன்? இமயமலை என்றதும் ஆளுக்கொரு அறிவுரை கொடுத்தார்கள். குளிர்கால உடைகள், அத்தியாவசிய மாத்திரைகள் (மோஷன் சிக்னஸ் இரண்டு பட்டைகள்), கோல்ட் கிரீம் (என் மொகரைக்கட்டை வெந்தே போனது, பேசாமல் குளிரிலேயே இருந்திருக்கலாம்), புகைப்படக் கருவிகள் என்று பலவற்றையும் சேகரித்துக் கொண்டோம். இதில் முக்கியமானது தெர்மல்ஸ் எனப்படும் குளிர்கால உள்ளாடைகள். எல்லா பெருநகரங்களிலும் இப்போது கிடைக்கின்றன. இமய மலைக்குச் செல்ல இவை அத்தியாவசியம்.

ஹைதராபாத் – தில்லி ஜெட் ஏர்வேஸ் வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. உள்ளே நுழையக் காத்திருக்கையில் ஒரு அதிகாரி வந்து பணிவாக நாளைக்குச் செல்ல முடியுமா என்றார். என்னை மட்டுமே குறி வைத்து வருகிறார்களே என்று வடிவேலு மாதிரி கோபம் கொப்பளித்தது. அடக்கிக் கொண்டு ஏன் என்றேன். விமானத்தை ஓவர்லோடு செய்து விட்டோம் (என்னைப் பார்த்தே அப்படிச் சொல்ல என்ன தைரியம்?) அதனால் நீங்கள் தங்கிக் கொண்டால் ஏதோ காசும் நட்சத்திர ஓட்டலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார். நான் லேசாகச் சபலப்பட்டுப் பின் சொர்க்கத்தையே தந்தாலும் மாட்டேன் என்றேன். இறந்து நான்கு நாட்களான ஒரு பல்லியைப் பார்ப்பதைப் போல் பார்த்தார். எனக்கென்ன வந்தது?

ஒரு வழியாக இரவு 11 மணிக்கு தில்லியை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு 12 மணிக்குமேல் இரவு உணவை லைட்டாக (எல்லாம் பயம்தான்) முடித்துக் கொண்டு ரிஷிகேஷ் கிளம்பினோம். காலை ரிஷிகேஷில் குளித்துச் சாப்பிட்டுப் பின் ருத்ரபிரயாக் செல்வதாக எண்ணம். இரவில் சர்தார்ஜி ஓட்டுநர் ஒரு சடன் பிரேக் அடித்தார். திடுக்கிட்டு விழித்தவன் பின் தூங்கவேயில்லை. காரணம், சாலையில் அடுத்த 10 அடி கூடத் தெரியாத அளவு பனிப் பொழிவு. ஆனால் ஓட்டுநர் அசரவேயில்லை – ஜஸ்ட் லைக் தட் 60ல் போய்க் கொண்டிருந்தார். அவரிடம் தயங்கித் தயங்கிப் போய் எப்படி ஓட்டுகிறார் என்று விசாரித்தேன். தானும் ஒரு அரை நிமிடத்துக்குத் தூங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஜோக் அடிக்கிறார் என்று நானே முடிவு செய்து கொண்டு இரவெல்லாம் விழித்திருந்தேன்.

காலை 6 மணிக்கு ரிஷிகேஷை அடைந்தோம். தொலைவே இமயமலை தனது அனைத்து ரகசியங்களையும் உள்ளடக்கிக் கொண்டு எங்களைப் பார்த்துக் கண்ணடித்தது. எனக்கு இமயமலை உலகின் மூன்றாவது நீளமான மலைத் தொடர் என்று தெரியும். ஆனால் 240-330 கி.மி. அகலமான அதன் பிரமாண்டம் பழநி மலையையும் கொடைக்கானலையும் பார்த்திருந்த என்னைத் திகைக்க வைத்தது என்பதில் துளியும் ஐயமில்லை.

காலையில் அங்கேயே குளித்துச் சாப்பிட்டுவிட்டு மெல்லக் கிளம்பினோம். அங்கே முக்கால்வாசி ஓட்டல்கள் அசைவம் விற்பதில்லை. முதலிலேயே ஓட்டுநருக்கும் அவரது உதவியாளருக்கும் “சாய் பீனே கே லியே” ஒரு லம்ப்பான பணத்தைக் கொடுத்துவிட்டதால் அவர்களும் உற்சாகமானார்கள்.
ரிஷிகேஷ் மலை ஏற ஆரம்பித்தவுடன் கண்ணில் பட்ட ஒரு வாசகம் என்னை உலுக்கியது – “ஈஷ்வர் கோ யாத் கரோ – இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள்”. மலை முழுவதும் இப்படிப் பட்ட அதிரடி வாசகங்களை எழுதி வைத்திருக்கின்றனர். ஏனெனில் தப்பித் தவறி ஏதேனும் விழுந்தால் எடுப்பதற்குக் காஷ்மீரில் இருந்து ஹெலிகாப்டர் வர வேண்டுமாம். ஆனால் சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் மறக்கடித்ததது ருத்ரபிரயாக் நோக்கிய அந்த மலைப் பயணம்.

மலை ஏற ஆரம்பித்த சில நேரத்தில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தால் மயக்கம் வந்தது. கீஈஈஈஈஈஈஈஈஈஈஈழே ஒரு சிறு (!) நதி (நம்ம ஆடிக் காலத்துக் காவேரி மாதிரி) ஓடிக் கொண்டிருந்தது. அது என்ன என்றேன். என்னை நேரடியாக எல்கேஜியில் சேர்த்து விடும் யோசனைக்குப் போன ஓட்டுநர் சொன்னார். அது கங்காஜி! நமது சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர் கூட அந்த ஜீவ நதிக்குத் தரும் மதிப்பைக் கண்டு மகிழ்ந்தேன். இப்போது குளிர் காலமாதலால் பனி உறையத் துவங்கி இருப்பதால் தண்ணீர் குறைந்திருந்தது.

ஓட்டுநர் திடீரென்று வண்டியை ஒரு வளைவில் நிறுத்திவிட்டு எங்களை எல்லாம் இறங்கி ஒரு காட்சியைப் பார்க்கச் சொன்னார். அதைப் பார்த்து ஸ்தம்பித்ததில் அதிர்ச்சியில் அடுத்த ஒரு நிமிடத்தில் அனைவரும் ஒன்றுக்குப் போயினர்.


சில படங்கள்
ரிஷிகேஷ் மாலைக் கதிரில்

[IMG]http://i32.photobucket.com/albums/d9/pradeepkt/IMG_0585.jpg[/IMG]

நந்தாதேவி சிகரம்

[IMG]http://i32.photobucket.com/albums/d9/pradeepkt/IMG_0337.jpg[/IMG]