Wednesday, May 31, 2006

வெள்ளிப் பனிமலையின் மீது - 2

முதல் பாகத்துக்கு இங்கே சொடுக்கவும்
பாகம் 2

ஓட்டுநர் காட்டிய அந்தக் காட்சி எல்லாரையும் திகைக்க வைத்தது என்பதில் ஐயமில்லை. இங்கே சொல்ல வேண்டிய ஒரு தகவல், உத்தராஞ்சல் மாநிலம் முழுவதுமே மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மலை முழுவதும் அங்கங்கு பாறைகளைச் சமன் படுத்தி சாலைகள் அமைக்கும் வேலை நடை பெறுகிறது. உத்தராஞ்சல் மாநிலம் தனியாகப் பிரிந்த பின் அவர்களுக்கு மிக முக்கியமான வருவாயான சுற்றுலாத் துறையை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். மேலே சாலை போடுவதற்காக வைத்த வெடிகுண்டு தவறுதலாக வெடித்து ஒரு பெரீய்ய்ய்ய்ய (எனக்குச் சாதாரணக் கண்களே மைக்ரோஸ்கோப் ஆன மாதிரி இருந்தது) பாறை செங்குத்தாக நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் வந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்தப் பக்கத்தில் வாகனங்கள் ஏதும் இல்லை.

அங்கங்கு அவசரத் தகவல் உதவி எண்கள் எழுதி இருக்கிறார்கள். பி எஸ் என் எல்லின் டால்ஃபின் சேவை (புதுதில்லிக்கான மொபைல் சேவை) மட்டும்தான் வேலை செய்கிறது. எங்கள் ஓட்டுநரிடம் இருந்ததால் உடனடியாக அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார். அமெரிக்கா மாதிரி சொல்லி 20 நிமிடங்களில் பெரிய கிரேன்கள் வந்து விட்டன. சின்னச் சின்ன வெடிகுண்டுகள் வைத்து ஒரு மாருதி 800 அளவு பெரிய பாறையைச் சின்னச் சின்னதாக உடைத்துக் கீழே நதிக்குள் தள்ளி விட்டனர். 3 மணி நேரத்தில் எல்லாம் சரியாகி மீண்டும் ருத்ரபிரயாக் நோக்கிப் புறப்பட்டோம்.

தேவபிரயாக்குக்குச் செல்லும் வழியில் சிற்றோடை போல் ஓடிக் கொண்டிருந்த கங்கையில் குளிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு 500 அடி கீழே இறங்கிச் சென்றால் கூழாங்கற்களாகக் கிடக்கிறது. நல்ல வெள்ள காலத்தில் நதிப் படுகையாக இருந்த இடம். கால்வாசி அகலத்தில் மட்டும் கங்கை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது சீசன் இல்லையாதலால், அங்கங்கு டெண்ட் போட்டு வைத்திருக்கின்றனர். மக்கள் அங்கேயே போய் தங்கிக் கொண்டு நான்கைந்து நாட்கள் நதிப் படுகையில் வெளி உலக வாசனையே இல்லாமல் நிம்மதியாகக் கழித்து வரலாம். உதவியாட்களும், சமையல் ஆட்களும் கிடைக்கிறார்கள். அடுத்த முறை இப்படிப் போய் ஒரு ரெண்டு நாள் இருந்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கங்கையைக் கண்டவுடன் எங்கள் மேலாளருக்கு (மிஸ்டர் எக்ஸ்னு வச்சிக்குவம்) உற்சாகம் கரைபுரண்டு ஓட குடுகுடுவென்று ஓடி நதிக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில் தட தடவென்று ஓடி மேலே வந்தவர் இரண்டு நிமிடங்களுக்குப் பேச்சே இல்லை. நாங்கள் ஏதோ முதலை கிதலை கடிச்சி வச்சிருச்சோன்னு பாத்து முதலுதவி செஞ்சு என்னான்னு கேட்டா கூல் கூல்னு உளறினார். இங்க கூழுக்கு எங்க போறதுன்னு முழிச்சிட்டு இருந்தபோதுதான் அங்கே கூடாரத்தில் இருந்த உதவியாளர் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக (0-1 டிகிரி) இருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து மற்ற மக்கள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். நடுநடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதற்குள் மிஸ்டர் எக்ஸ் தான் இங்கு வந்த பயன் அடைந்து விட்டதாகச் சொன்னார், அதாவது அவர் செய்த பாவம் எல்லாம் கழுவப் பட்டு மீண்டும் அவரது பாவக் கணக்கு 0-லிருந்து ஆரம்பிக்கிறதாம். அதனால் இன்னும் நிறையச் செய்யலாமாம். என்னே ஒரு நல்லெண்ணம்! எனக்கு ஒரு டவுட்டு! இவரு பாவம் செஞ்சாரு ஓகே. என்னை மாதிரி அபாவிகளுக்கு (அதாவது பாவமே செய்யாதவர்கள்) கணக்கு நெகட்டிவ்வில் போகுமோ? (எனக்கு ஏற்கனவே தண்ணியில கண்டமின்னு திருச்சுழி கருப்புசாமிக்கு வேண்டி இருக்கிறேன்.) இதைச் சொன்னதுதான்யா தாமதம்! கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையத் தண்ணிக்குள்ள முக்கி எடுத்துப் பிட்டாய்ங்க, படுபாவிப் பயலுவ.

சில நிமிடங்களுக்குக் கண்ணே தெரியவில்லை (ஏற்கனவே லைட்டா டோரிக் கண்ணு)! ஆனால் அதன் பிறகு வந்த உற்சாகம்! ஆகா! அருமை அருமை! மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுக்குள் மெல்ல மெல்ல கால் உடல் எனக் கடைசியில் தலையை முக்கிக் குளிக்கும் சுகம், அதுவும் கங்கையில் இன்னும் சொல்லப் போனால் மாசு படுத்தப் படாத கங்கையில் குளித்ததில் நிஜமாகவே பிறவிப் பயன் அடைந்தேன். ஒரு மணி நேரம் நமது கிராமத்து மத்தகஜங்கள் போல் ஊறிக் கிடந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினோம்.

நடுவில் உணவை முடித்துக் கொண்டு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேவபிரயாக் போய்ச் சேர்ந்தோம். மதிய வெய்யில் இதமான சூட்டில் அங்கிருந்த கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை நடத்திவிட்டு கங்கை நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டோம். எல்லா பிரயாக்குகளிலும் ஒரு பெண் தெய்வத்தை வழிபாட்டுக்காக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அசைவச் சாமிகள். சிறிது தொலைவில் ஆற்றில் படாதவாறுதான் பலிகள் கொடுக்கப் படுகின்றன.

இரவு 7 மணிக்கு ருத்ரபிரயாக்கை அடைந்தோம். ருத்ரபிரயாக் ஒரு மாவட்டத் தலை நகரம். ஆனால் நமது ஊர்க் கணக்கில் சொல்ல வேண்டுமானால் திருவல்லிக்கேணி அளவு கூட இராது. சின்னச் சின்ன அத்தியாவசியக் கடைகள். பக்கத்துக் கிராமங்களில் இருந்து மக்கள் பயண வசதிக்காக நிறைய ஜீப்புகள் இருக்கின்றன. இமயமலையில் இரண்டே இரண்டு பேர் வாழும் கிராமங்கள் கூட இருக்கின்றன. அந்தக் கிராமத்துக்கும் மின்சாரம், தொலைபேசி என்று வசதிகள் இருந்ததைப் பார்த்து மலைத்துத்தான் போனேன். ருத்ரபிரயாக்கில் அடுத்த நாள் உலங்கு வானவூர்தியில் பயணம் செய்ய வேண்டியவர்கள் சீக்கிரமே தூங்கப் போனார்கள். நாங்கள் அதற்கு அடுத்த நாள் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

விடுதி (மோனல் இன் என்று பெயர் – சிம்ரன் தங்கச்சி தேவையில்லாமல் நினைவுக்கு வந்தார்) அலகாநந்தா நதிக்கரையில் மலைச் சரிவில் இருந்தது. 200 மீட்டர் கீழே நதி சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவிற்குப் பின் கொஞ்ச நேரம் அந்த நதிச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன், கை விரைப்பது தெரியாமல்!

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி வெளியே வந்தோம். உலங்கூர்தியில் செல்ல வேண்டியவர்கள் ஏற்கனவே சென்று விட்டிருந்தனர். நாங்கள் 4 பேர் மட்டும் மிச்சம் இருந்தோம். எனவே கீழே நதிக்கரைக்குச் சென்று சில நேரம் பொழுதைக் கழித்தோம்.

உலங்கூர்தி விமானதளம் ருத்ரபிரயாக்கில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அகஸ்தியமுனி என்ற இடத்தில் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் augustimuni என்கிறார்கள். அங்கும் நமது அகத்தியருக்குக் கிடைக்கும் மரியாதையைக் கண்டு வியந்தேன். மதிய உணவைக் கட்டிக் கொண்டு அகஸ்தியமுனிக்குச் சென்று மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு சந்திரபுரி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

சந்திரபுரியில் அலகாநந்தாவின் வேகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கிறது. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மை. அங்கே நதிக்கரையில் சிறிது நேரம் தங்கிவிட்டு வந்துவிட்டோம். மனம் முழுவதும் அடுத்தநாள் உலங்கூர்தியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் 5 மணிக்கே எழுந்து உலங்கூர்தித் தளத்திற்குக் கிளம்பி விட்டோம். காலங்கார்த்தால இப்படி வரச்சொல்றாங்களேன்னு திட்டிக்கிட்டே கிளம்பினேன். காப்பி தவிர வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே சென்றவர்கள் எச்சரித்திருந்தனர். நம்மதான் சிங்கமாச்சே… அதெல்லாம் கேட்டா நம்ம பொழைப்பு என்னாகிறது. அதுனால சின்னதா ரெண்டு ஆப்பிள் ஒரு வாழைப்பழம் ரெண்டு பிரட்டோடு என் pre பிரேக்பாஸ்ட்டை முடித்துக் கொண்டேன். அங்கே ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உலங்கூர்தி சின்னதாகக் காத்துக் கொண்டிருந்தது.

இது பெல் 300 என்னும் உலங்கூர்தி வகை. ஐந்து பிரயாணிகளும் இரண்டு பைலட்டுகளும் செல்லும் வகையில் உள்ளது. முழுவதுமாகக் கதவை அடைத்துக் கொள்ளலாம். உலங்கூர்தி கிளம்பியது! எங்கள் மனமும்தான்! ஏற்கனவே விமானத்தில் சென்றிருந்தாலும் இந்தப் பயணம் வித்தியாசமானது. குறைந்த உயரம், எனவே வேண்டுமானால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்ளலாம், தலையை மட்டும் எட்டிப் பார்க்க முடியாது. இது எனக்குத் தெரியும். அவ்வப்போது ஆட்டோ மாதிரி குலுங்கும். இது எனக்குத் தெரியாது. குலுங்க ஆரம்பித்தது. எனக்கு உள்ளே போன ஆப்பிளும் வாழைப்பழமும் பிரெட் புட்டிங் மாதிரி ஆகி வெளியே வரத் துடித்தன. கூட வந்த (பசியோடு) வயித்தெரிச்சல் நண்பர்கள் நன்றாக வேண்டும் என்பது போல் பார்த்தனர். கஷ்டப்பட்டு இரண்டு புளிப்பு மிட்டாய்களை வைத்து உள்ளே தள்ளினேன். மதுரை திருச்சி பேருந்துகளில் இந்தப் புளிப்பு மிட்டாய்களை விற்பவர்களை இனிமேல் வையக் கூடாது என்று முடிவு செய்தேன்.

உலங்கூர்தி முதலில் சில பசுமையான மலைகளைக் கடந்தது. கீஈஈஈஈஈழே கேதார்நாத்தும் அமர்நாத்தும் கடந்தன. தற்போது கேதார்நாத் மூடப் பட்டுவிட்டதால் அந்த மூர்த்தி கீழே உக்கிமட் என்னும் இடத்தில் வைத்துப் பூஜை செய்யப் படுகிறது. தென்னாடுடைய சிவனுக்கு வடநாடும் உடைத்து! இது பற்றி மேலும் பின்னர் சொல்கிறேன். பனிச்சிகரங்களைப் பாருங்கள் என்று பைலட் குரல் கொடுத்ததும் கேமிராவைத் திருப்பிக் கொண்டு பார்த்தோம்.

வெள்ளிக் குழம்பை அப்படியே கவிழ்த்து வைத்தது போல் கடந்தன நான்கு சிகரங்கள். அவற்றுக்குப் பெயர் “சௌகம்பா”. நான்கு கம்பங்கள் என்று அர்த்தமாம். ஆனாலும் ஏதோ நெருடியது. இதுதான் இத்தனை சினிமாவில பாத்திருக்கோமே என்று! பைலட்டிடம் இதையும் சொன்னேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இப்போது பாருங்கள் என்றார், உலங்கூர்தி ஒரு சிகரத்தை மெல்லச் சுற்றிக் கொண்டு சூரியன் இருந்த பக்கம் வந்து மறுபக்கத்தைக் காட்டியது. ஐயா! ரசவாதம் என்றால் என்ன என்று அந்த நிமிடத்தில் எனக்குப் புரிந்தது!

2 comments:

Meenapriya said...

Eppo adutha pagam... Romba nalla irukku

பிரதீப் said...

எழுதணும்னு நினைச்சிட்டே இருக்கேன்... உங்க வருகைக்கு நன்றி.