முதல்ல இந்தத் தேர்தல்ல ஜெயலலிதாங்குற தனிப்பட்ட ஆணவத்துக்குக் கிடைச்ச ஆப்பு, கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த மதிமுகவுக்கு ஆப்பு, இதெல்லாம் சேர்த்துதான் திமுக வெற்றி. அத்தனை எதிர்ப்பு, பணபலம், ஆட்சி பலம், பல்வேறு ஊடகங்களின் பாரபட்சம் (இதில சன் டிவி, தினகரன், குமுதத்தையும் எதிர் சைடில சேத்துக்கறேன்) கடைசி நேரத்தில் கட்சி மாறிய காட்சிகள் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றமைக்குக் கலைஞருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கலைஞரின் பலமான தேர்தல் கூட்டணி, விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை (இடங்களை மட்டும்தான் - இதற்குக் கம்யூனிஸ்டு கட்சிகளே சாட்சி), இலவசங்களை அள்ளி வீசிய தேர்தல் அறிக்கை (அட அந்தக் காலத்துல எம்சியாரு இதைத்தானே செஞ்சாரு), தள்ளாத வயதிலும் தெருத்தெருவாய்ச் செய்த பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து வெற்றிக் கனியை அவர் காலடியில் சமர்ப்பித்து இருக்கின்றன. இதே கூட்டணி அப்படியே பாண்டிச்சேரியிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருப்பது ஐஸ்கிரிம் மேல் வைக்கப்பட்ட செர்ரிப் பழம் அல்லது பொங்கலில் தூவப்பட்ட வறுத்த முந்திரி! இதெல்லாம் சேர்ந்து பார்க்கையில அதிமுக ஆட்சி அகற்றிய ஆப்பரேஷன் சக்ஸஸ் என்றுதான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. ஆனால் இப்ப பேஷண்ட் (அதாங்க திமுக) நிலை என்ன அப்படிங்கறதுதான் முக்கியம். அதைப் பத்தி ஒரு சின்ன அலசல்.
இப்பவே கூட்டணி ஆட்சி அது இதுன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாக. தயாநிதி அவரு பங்குக்கு தனித்து ஆட்சி அமைப்போம்கிறாரு. அதைக் கேட்டு இப்பயே டெல்லிக் காரவுகளுக்கும் இங்க இருக்குற தீர்க்கதரிசிகளான இளங்கோவன் போன்றோருக்கும் வயிறு கலங்கி இருக்கும். சரி, எல்லாத்தையும் மீறி கூட்டணி ஆட்சி வருதுன்னு வச்சிக்கங்க, அடுத்த கூத்து எந்தப் பதவிகளை யாருக்குக் குடுக்குறதுங்கறது. அதிலயும் ஒரு வெட்டுக் குத்து இருக்கும். வடக்கே கம்யூனிஸ்டுகளைப் போல் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எந்தப் பொறுப்பும் இல்லாத அதிகாரங்களை அனுபவிக்கலாம் என்பது பாமகவின் நிலை. அவங்க ஆட்சி அதிகாரத்துல இல்லாம இருக்குறதும் ஒரு வகையில தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.
இப்பதைக்கு அதிமுக எதிர்பார்க்குற மாதிரி உடனே பாராளுமன்ற தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸுக்கு இப்போது மத்தியில் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் உதற மாட்டார்கள். அதிலும் இங்கே அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது எல்லாம் சமீப காலத்தில் நடக்கக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு இரண்டு மேடம்களுமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் மத்தியில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
ஆனாலும் திமுக இங்கு நிம்மதியாக ஆட்சி புரிய முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. கலைஞரின் நிர்வாகத் திறன் நன்றாகவே இருந்தாலும் அள்ளி வீசியிருக்கிற இலவசங்களை நினைத்தால் சாமானியனாகிய எனக்கே குலை நடுங்குகிறது. இதை எப்படிக் கலைஞர் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு (அல்லது எதிர்ப்பு) மீறி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் ஆயிரம் கோடி ரூபாய் கேள்வி (அட எத்தனை நாளைக்குத்தான் வெள்ளைக்காரன் பணத்தைச் சொல்றது?). அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கினால் இவை அனைத்தும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதே ஒரு பெரிய துணிச்சலான வேலை. ஜெ.வுக்கு இந்த மாதிரி விஷயங்களில் துணிச்சல் அதிகம். அது அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதானாலும் சரி, ஆடு கோழி வெட்டத் தடை கொண்டு வருவதானாலும் சரி! ஜெ. நல்லதோ கெட்டதோ, செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாகச் செய்வார். கலைஞர் அனைவரையும் அனுசரித்துப் போவார். அதுதான் பிரச்சினை!
1996 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் தமாகா எப்படி எல்லாம் பதவியில் இல்லாமலே சுகம் அனுபவித்தது என்பது இப்போதைய காங்கிரசாருக்குத் தெரியாதா என்ன? இதே ஜெ. பதவி ஏற்றால் முதல் உத்தரவே அதிமுக காரர்கள் தவிர மற்றோர் சொல்லும் எதுவும் செய்யக் கூடாது என்பதாக இருக்கும். கலைஞருக்கு இவர்களை எங்கே வைக்க வேண்டும் என்பது தெரியாது :) எனவே என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் அதிமுகவை விட இனி திமுகவுக்கு ஒரு தலைவலியாக இருக்க வாய்ப்பு உண்டு.
பாமகவுக்குத் தன் நிலை தெரியும். காங்கிரஸ் துணை திமுகவுக்கு இருக்கும் வரையில் ரொம்ப ஆடினால் ஆப்புதான் விழும் - தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும். எனவே உடனடியாக அவர்கள் ஏதும் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.
குறிப்பாக கலைஞருக்கு அடுத்து திமுகவில் ஸ்டாலினைப் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாமக மற்றும் காங்கிரஸின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும். இந்தப் பிரச்சினையை திமுக எப்படி அணுகப் போகிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.
ஏற்கனவே பொதுவுடைமைக் கட்சிகளும் எந்தத் தொழிலிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கப் போகிறோம் என்கிறார்கள். இப்போது 17 உறுப்பினர்களுடன் இன்னும் பகிரங்கமாக இவர்கள் சுமங்கலி கேபிள் விஷனின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாள் விரைவில் வரலாம். அங்கே கலைஞரின் ராஜதந்திரம் மட்டுமே உதவ வேண்டும்.
இந்தப் பதிவுல மதிமுக பத்திச் சொல்லலைன்னா அடுத்த ரெண்டு நாளைக்கு எனக்குத் தூக்கம் வராது.
இதே திமுக கூட்டணியில இருந்துருந்தா திமுகவுக்கு கூட பத்து சீட்டு கெடைச்சிருந்தாலும் மதிமுகவுக்கு கூட 20 சீட்டுக் கெடைச்சிருக்கும். ஆனாலும் திமுகவினரைப் பங்காளிகளாப் பாக்குற பார்வை மதிமுகவை விட்டுப் போயிருக்காது, பல தொகுதிகளில உள்குத்து செஞ்சு காலி பண்ணிருப்பாங்கன்னு தோணுது. என்னவோ கொள்கை கோட்பாடு எல்லாம் பேசின வைகோவுக்கு இப்ப சீட்டுக் கெடைச்சு முதல் முதலாச் சட்ட மன்றத்துக்குப் போயிருந்தாலும் மக்கள் மத்தியில, குறிப்ப நடுநிலையாளர்கள் மத்தியில அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து விட்டது. அதிலும் நேத்து தோல்விய ஒத்துக்க முடியாம அவரு ஜெயா டிவியில பேசின பேச்சு அத்தனைக்கும் சிகரம்.
எனிவே தமிழகம் மற்றும் புதுவை சட்ட சபைகளில் இப்போது மதிமுகவுக்கு உறுப்பினர்கள் உண்டு! வாழ்த்துகள் வைகோ அவர்களே! இனியாவது சகோதரியிடம் கொஞ்சம் வாஞ்சையாக இருங்கள்!
இப்போதைக்கு திமுக பக்கம் காற்று சுழற்றி சுழற்றி அடிக்கிறது. மீண்டும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
good analysis
Do congressmen here in Tamilnadu have any significance? KK knows how to deal with them. The support he enjoys at Delhi is enough for running the 5 year Term successfully. Moreover, just wait and see, when everybody talks about the strong opposition, after 2-3 years there won't be any opposition at all! KK is the not same KK what he was in 1996. Ms.J has tought him political lessons during the last 5 years!
நன்றி சேரல்.
ப்ரதிமா,
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான். ஜெ. கலைஞருக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இங்கிருக்கும் காங்கிரசாருக்கு எல்லாமே டெல்லி ஹைகமாண்டுதான். ஆனாலும், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் சின்னப் பிள்ளை மாதிரி கோள் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.
அத்தோடு இது எல்லாமே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைதானே...
வைகோவிற்கு இந்த தேர்தல் பின்னடைவு இல்லை. வெற்றிதான். கோமாளியாகிவிட்டார் என்று சிலர் வேண்டுமானால் சிரிக்கலாம். திமுகவுடன் இருந்தாலும் அவருக்கு இவ்வளவுதான் கிடைத்திருக்கும்.... ஆகையால் அவர் தன்னுடைய திட்டத்தின் முதல் படியில் வெற்றி பெற்றே இருக்கிறார்.
இதைத்தான்யா விலாவரியா எழுதனும்னு நினைச்சு இருகேன்:-))
'என் தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்கோ; உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கறேன். நீ அவளை சந்தோசமாக வைத்துக் கொண்டால் இவளை நாம் சந்தோசமாக வைத்துக் கொள்கிறேன்' என்பதாக அமைந்திருக்கிறது தி.மு.க - காங்கிரஸ் மத்திய-மாநிலக் கூட்டணி அரசு. ஒரு பெண் வாழா வெட்டியானால் இன்னொருத்தியும் அதே கதியாவாள். In any case, good observation!!
-குப்புசாமி செல்லமுத்து
முத்துக்குமரன்,
ஒரே ஒரு விஷயத்தில்தான் மாறுபாடு. மதிமுக திமுகவுடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிக இடங்கள் ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. இதை நான் ஓட்டுக் கணக்கை வைத்து மட்டும் சொல்லவில்லை. அதுவும் கடைசி நேரத்தில் கட்சி மாறியதால் காட்சி மாறியது என்பதுதான் என் வாதம்.
குப்புசாமி,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
எப்படிப் பார்த்தாலும் மாமன் மச்சான் உறவு நம்ம ஊர்ல பழக்கம்தானுங்களே. ஆனாப் பாருங்க இங்க மத்திய அரசு ஒரு மச்சானா இருக்குறதோட பாண்டிச்சேரி அரசும் திமுகவால பிழைக்கப் போகுது. இங்க திமுக அரசு காங்கிரஸால பிழைக்கப் போகுது.
வாங்க தம்பி வாங்க.
ஒருவழியாக இங்கேயும் சங்கமித்தாச்சா?
அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு எல்லாவற்றிலும் சேருங்க.
நல்லாவே சொல்லியிருக்கீங்க, அரசியலை அலசி புழிந்திருக்கீங்க.
நான் ஆகஸ்டில் ஊருக்கு வருகிறேன், நிறைய விசயங்கள் பேசலாம்.
சக்தி உங்களிடம் பேசணுமாம், நீங்க தயரா?
அண்ணா,
வெட்டி வேலையையும் (அதான் ஆபீசுல குடுக்குறாங்களே) மீறி அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஊருக்கு வரீங்களா, வாங்க வாங்க!
சக்தியோடு பேசக் கசக்குதா என்ன? அதுக்குத்தானே காத்திருக்கோம்.
Post a Comment