Tuesday, December 05, 2006

வென்னித் தண்ணி வைக்கிறது எப்பிடி?

முதல்ல வென்னித் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வென்னித் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...

இந்த வென்னித் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வென்னித் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வென்னித் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது. எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வென்னித் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வென்னித் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வென்னி வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வென்னியில் “குடிக்கிற சூடு”, “கொதிக்கிற சூடு”, “ஆவி” அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.முதல்ல வென்னித் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.

சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வென்னித் தண்ணி இருக்குறது “குடிக்கிற சூடு”! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது “கொதிக்கிற சூடு” எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா “அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்”. இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வென்னி ஆவி பிடிக்க ஏற்றது, “ஆவி” என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.

கடைசியாச் சொல்ல வந்தது வென்னிய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வென்னிய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.

அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வென்னித் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?

4 comments:

Divya said...

வென்னித் தண்ணி வைக்க சொல்லி தந்த அறிவு ஜீவி வாழ்க!

[ அதெப்படீங்க வென்னித் தண்ணி வைக்கிறது பத்தி இவ்வளவு பெரிய பதிவு டைப் பண்ண முடிஞ்சது உங்களால, நிசம்மா சொல்றேன் ராசா, நீ பல்லாண்டு வாழ்க!]

சிவமுருகன் said...

பிரதீப்,
கற்றது கைமண் அளவு. ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்தது

பிரதீப் said...

மிக்க நன்றி திவ்யா (இதெல்லாம் தானா வரதுங்க... உங்க வாழ்த்துகளுக்கு நன்றி,

சிவா! இதுக்கெல்லாம் எதுக்குங்க மண்ணை வம்புக்கு இழுக்கறீங்க... ஏதோ நம்மால ஆனது... ஹி ஹி

பிளாக்கர் பீட்டா தொல்லையால் இத்தனை நாள் வர இயலவில்லை. இப்போது சரியாகியிருக்கும் என நம்பி வந்திருக்கிறேன். :)

NONO said...

இனி தமிழ்மணத்தில இரண்டு நாளைக்கு எல்லாம் "எப்பிடி" என்று முழிக்கும் ஆளை விடுங்கையா.....