நம்ம சிவமுருகன் கொஞ்ச நாளைக்கு முன்னால உங்களுக்குப் புடிச்ச புடிக்காத ஆறு பத்தி எழுதுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. நானும் ரொம்ப யோசிக்க முடியாம, அல்லது யோசிக்கத் தெரியாம திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன். வேலை வேற கொஞ்சம் அதிகம். கடைசியா ஆறைப் பத்தியே ஆறையும் எழுதிட்டா என்னன்னு தோணிச்சு.
தமிழில் ஆறு என்னும் சொல் பல வகையான பொருள்களில் வழங்கப் படுகிறது. அதில் ஒரு ஆறு அர்த்தங்களை, அதாவது பொருட்களை எடுத்துக்கிட்டு சின்னச் சின்னதா வார்த்தைக் கோவைகள் (இதை நான் கவிதைன்னு சொல்லப் போயி நிஜமாவே கவிதை எழுதுறவங்க அடிக்க வந்துட்டா என்ன செய்யிறது? :) ) போட்டிருக்கேன். படிச்சுப் பார்த்து நல்லாருக்கான்னு சொல்லுங்க.
ஒன்று:
இது அனைவருக்கும் தெரிந்தது எண் 6! இந்த ஆறோட வடிவைப் பாத்தாலே எனக்கு என்ன தோணுதுங்கறதுதான் கீழே இருக்கு!
எண்களில் உனக்கு மட்டும்
அப்படியென்ன சோகம்?
வடிவே கயிறாய்!
இரண்டு:
நதி! நம்ம ஊருல ஆறுகள் ஒரு காலத்துல பாய்ந்தோடிக் கொண்டுதான் இருந்ததாம். ஏதோ ஒரு பழைய புத்தகத்துல ஆறுங்கறதுக்கு வழின்னு இன்னொரு பொருள் இருப்பதற்குக் காரணமே நதிகளின் அடையாளங்கள்தான்னு சொல்லிருந்தாங்க. ஆனாப் பாருங்க, இப்பப் பல நதிகளை இங்ஙனதேன் இருந்துச்சுன்னு அகழ்வாராய்ச்சிக்காரவுக மாதிரி சொல்றது மனசு வலிக்குது. எங்க ஊரு மதுரையில அழகர் ஆத்துல எறங்குறதுக்கு ஒரு காலத்துல லாரியில தண்ணி கொண்டு வந்து ஊத்துனாக! அங்ஙன ஆத்துக்குள்ள பம்பு போட்டு ஓடுதண்ணின்னு பேரும் வச்சுருக்காக! ஒரு காலத்துல ஆத்துத் தண்ணி ஊத்தாப் போயி இப்ப அந்த ஆத்துக்கே தண்ணி குடுக்குது!
தாய்க்குப் பாலூட்டும் மகள்!
வைகை ஆற்றில் அல்ல ஊற்றில்
இறங்குகிறார் அழகர்!
மூன்று:
தமிழில் ஆறு என்பதற்கு இன்னொரு முக்கியமான பொருள் வழி! வழி என்பதற்கு உபாயம் என்றும் பொருள் கொள்ளலாம்! அதாவது ஒரு செயலைச் செய்யும் வழி! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். இன்றைக்குப் பற்றி எரிந்தாலும் மாட்டராஸியைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் பற்றவைத்து
நெஞ்சில் முட்டுப்பட்டும்
துஞ்சாத வெற்றி!
- இது மாட்டராஸி ஆறு
நான்கு:
ஆறு என்ற சொல் தமிழில் “அந்த விதமாக” என்று பொருள்படும் பெயரெச்ச விகுதியாகவும் பயன்படுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் கூட “விதி” துவங்கி “சேது” வரையில் காதல் கனவான்கள் தங்கள் காதலிகளை வளைக்கும் விதங்கள் பல வகை! அதில் என் நண்பன் ஒருவன் கல்லூரிக் காலத்தில் பின்பற்றிய டெக்னிக், பரிதாபம்! காதல் பிச்சை கேட்கலாம், ஆனால் காதலைப் பிச்சை கேட்டால் என்ன நடக்கும்?
கண்கள் கலங்குமாறு
கேட்டான் இதயம் வழங்குமாறு
உள்ளக்கிடக்கை விளக்குமாறு
வந்தது விளக்குமாறு!
ஐந்து:
இன்னொரு முக்கியமான பயன்பாடு – “சூடு தணித்தல்”. நமக்கு உண்பதற்கு எல்லாமே சூடாக இருந்தால்தான் பிடிக்கும். எங்க ஊர்ல பிரேமவிலாஸ்னு ஒரு அல்வாக்கடை ரொம்ப பேமஸ்! எங்க தாத்தா காலத்துல இருந்து அங்க அல்வா விக்கிறாங்க. அப்பல்லாம் பொட்டலம் வாங்குபவர்களை விட அங்கேயே போய் சுடச்சுட அல்வாவை விரும்பி உண்பவர்கள்தான் அதிகம். தொன்னையில சூடா நெய் மணக்க அல்வா, கூடவே கொஞ்சம் காராச்சேவு! அடடா! இப்பயும் நாக்கு ஊறுது. அங்ஙன அந்தக் காலத்துல ரெண்டு மணிக்குத் தொடங்கி அரை மணி நேரத்துல அத்தனையும் வித்துருமாம். அல்வா ஆறி யாரும் பார்த்ததில்லை!
பிரேமவிலாஸ் வாசலில்
ஆரும் கண்டதில்லை
ஆறும் அல்வா!
ஆறு:
கடைசியாக நான் எடுத்துக் கொள்ளும் பொருள் “மன அமைதி அடைதல்”. இன்றைய சூழ்நிலையில் மன அமைதி என்பது பல பொருள் கொண்டதாக மாறிவிட்டது. பம்பாய் குண்டு வெடிப்பைப் பார்த்தபோது வருத்தம் இருந்தது. ஆனால் தலைவர்களின் போக்கும் பேச்சையும் கேட்ட போது எனக்குத் தோன்றியது இதுதான்.
ஆறு மனமே ஆறு!
தாலியறுத்தவன்
மீண்டும் வருவான்!
தலைவர்கள் மீண்டும்
நீ மீண்டு வந்தமைக்கு
வாழ்த்துவார்கள்!
ஆறு மனமே ஆறு!
இன்னும் கூட சில அர்த்தங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதிட்டா ஆறுக்கு மேல போயிருமேன்னு விட்டு வச்சுருக்கேன்… என்னங்கறீங்க?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பிரதீப்,
ஆறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து,ஆறு என்று வரிசை படுத்தி விட்டீர்கள்.
அருமை ஐய்யா அருமை.
நான் அழைத்து எங்கே யாரும் பதிக்காமல் விட்டுவிடுவார்களோ என்றிரிருந்தேன் என்னை சந்தோஷ ஆறில் (கடலில்) மூழ்கடித்து விட்டீர்கள்.
ஒவ்வொரு ஆறும் அருமை. இடை இடையில் இருக்கும் உங்கள் கவிதை புதுமை.
//தாய்க்குப் பாலூட்டும் மகள்!
வந்தது விளக்குமாறு!
நீ மீண்டு வந்தமைக்கு
வாழ்த்துவார்கள்!//
நன்றி,நன்றி,மிக்க நன்றி.
நன்றி சிவா. உங்களுக்குப் புடிச்சிருந்தா மகிழ்ச்சி!
கொஞ்சம் யோசிச்சுதான் எழுதினேன்.
ஏன்னா விளக்குமாறு பெருக்குமாறு எல்லாம் நம்ம ஊருப்பக்கம் உபயோகிக்கும் சொற்கள். வடக்குல, அதாவது மதுரைக்கு வடக்குல தொடைப்பம்னுதான் சொல்லுவாங்க!
அருமையான ஆறு பதிவு பிரதீப். நன்றாக மெனக்கெட்டு எழுதியிருக்கிறீர்கள். தூங்கப் போகும் நேரம் ஆகிவிட்டதால் மேலோட்டமாகத் தான் படித்தேன். அதுவே மிகவும் பிடித்திருக்கிறது. மீண்டும் வந்து படிக்கிறேன்.
நன்றி குமரன்.
நல்லா தூங்கி எழுந்து வந்து கருத்துச் சொல்லுங்க.
குட் நைட்!
வித்தியாசமான ப்ரசன்டேஷன். பிடியுங்கள் ஒரு குத்து.
ஆகா! பிரதீப். இப்படியொரு அவதாரம்! மிகச் சிறப்பு. மிகமிக. அந்தக் கவிதைத் துணுக்குகளும் மிகச்சிறப்பு.
சிவமுருகன் ஒங்கூருதான.
சிவமுருகன், பிரதீப்பு நம்ம நண்பரு. பெரிய தில்லாலங்கடி.
விளக்குமாறு விளக்குமாறு. இதை நான் முதலில் படித்தது காளமேகத்திடம். செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்கும் வகையில் முருகன் மேல் பாட வேண்டும் என்று கேள்வி. அதில் வண்டே விளக்குமாறே! என்று முடிக்கிறார். நீங்களும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
மாட்டராசி.....செய்தது தப்புதான். ஆனாலும் கோப்பை இத்தாலிக்குத்தான் கிடைத்தது. கால்பந்து ஆண்மை மிக்கவர்களுக்கான ஆட்டம். ஜிடேனைத் திட்டிய பிரெஞ்சுப் பத்திரிகைகள் இப்பொழுது மன்னிப்புக் கேட்கின்றனவாம்.
ரொம்ப நன்றி பாலசந்தர் கணேசன்.
ராகவா,
நீங்க இதையெல்லாம் கவிதைன்னு சொன்னதில மிக்க மகிழ்ச்சி :)
சிவமுருகன் நம்ம ஊருக்காரருன்னுதேன் தெரியுமே, மீனாச்சி கலியாணம், புதுமண்டவம்னு போட்டுத் தாக்குறாருல்ல?
சமீபத்துல நம்ம மனதின் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் என்னன்னு பாத்து ஒவ்வொரு அர்த்தத்துக்குள்ளயும் நுழைத்தேன், அம்புட்டுதேன். உங்க பாராட்டு இன்னும் எழுத ஊக்கம் அளிக்கிறது.
Post a Comment